1000 ரூபாய்க்குள் எல்லாரும் வாங்க போகும் ஹெல்மெட்! காற்றோட்டத்துக்கு எந்த குறையும் கிடையாது!!
மோட்டார்சைக்கிள் ஓட்டும்போது எல்லாவற்றையும் விட முக்கியமானது ஹெல்மெட் (Helmet) ஆகும். இதனாலேயே அனைத்து தரப்பு மக்களாலும் வாங்கக்கூடிய வகையில், எல்லா விதமான விலைகளிலும் ஹெல்மெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், தற்போது பிரபலமான ஹெல்மெட் உற்பத்தி நிறுவனம் ஒன்று, ரூ.1,000க்கும் குறைவான விலையில் ஹெல்மெட்களை அறிமுகம் செய்துள்ளது. எந்த ஹெல்மெட் உற்பத்தி நிறுவனம் இது என்பதையும், அது அறிமுகம் செய்துள்ள ஹெல்மெட்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் ஹெல்மெட் உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுப்படுகின்றன. அதில், சில நிறுவனங்கள் தரமான ஹெல்மெட்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. அத்தகைய கைத்தேர்ந்த நிறுவனங்களுள் ஒன்றுதான் ஸ்டீல்பேர்டு ஹை-டெக் (Steelbird Hi-Tech) ஆகும். சாதாரணமான ஸ்டைலிலான ஹெல்மெட்களில் இருந்து, மிகவும் நுணுக்கமாக டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட்கள் வரையில் ஸ்டீல்பேர்டு விற்பனை செய்கிறது.

ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்கள் எந்த அளவிற்கு வலிமையானவையோ அந்த அளவிற்கு சற்று விலையுயர்ந்தவை ஆகவும் விளங்குகின்றன. இந்த நிலையில்தான், ஸ்டீல்பேர்டு நிறுவனம் பெரும்பாலான மக்களால் வாங்கக்கூடிய விலையில், ரூ.959இல் புதிய ஹெல்மெட்களை அறிமுகம் செய்துள்ளது. எஸ்பிஎச்-54 (SBH-54), எஸ்பிஎச்-55 (SBH-55), எஸ்பிஎச்-56 (SBH-56) என்கிற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்களின் விலைகள் ரூ.959இல் இருந்து ரூ.1,199 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த ஹெல்மெட்கள் மூன்றும் கிளாசிக் தோற்றத்தில் உள்ளன. அதாவது, பழமையான ஹெல்மெட்கள் எவ்வாறு இருக்குமோ அவ்வாறான, சிம்பிளான டிசைனில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த ஹெல்மெட்களின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசத்தையும் ஸ்டீல்பேர்டு நிறுவனம் செய்துக் கொள்ளவில்லை. இதற்கேற்ப, தெர்மோ பிளாஸ்டிக் (Thermoplastic) மூலமாக இந்த ஹெல்மெட்களின் கூடு உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த ஹெல்மெட்கள் அதிக எடையையும் தாங்கிக் கொள்ளக்கூடியவைகளாக உள்ளன. விபத்தின்போது ஏற்படும் அதிர்வுகளை ரைடருக்கு கொண்டு செல்லாத வகையில் அதிக அடர்த்தி கொண்ட பாலிஸ்டிரீன் (Polystyrene)-ஆல் ஹெல்மெட்டினுள் லைனர் கொடுக்கப்பட்டுள்ளது. டிரைவர் பார்க்க பாலிகார்போனேட் (Polycarnboante) ஆண்டி-ஸ்க்ராட்ச் விஸர் கொடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஹெல்மெட்டின் கண்ணாடி அவ்வளவு எளிதில் கீறல் அடையாது. இந்த விஸரில் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஹெல்மெட்களை சிறிய விஸர், பெரிய விஸர் அல்லது முற்றிலுமாக விஸரே இல்லாமலும் தங்களது விருப்பத்திற்கும், சவுகரியத்திற்கும் ஏற்ப வாங்கலாம். இந்த ஹெல்மெட்களுக்கு பின்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள லெதர் ஸ்ட்ராப் (Leather Strap) ஆனது பழமையான ஹெல்மெட்களை ஞாபகப்படுத்துகிறது.

இந்த ஹெல்மெட்களில் வழங்கப்பட்டுள்ள மைக்ரோ-மெட்ரிக் பக்கிள் (Micro-metric buckle) விரைவான ரிலீஸுக்கு வழிவகுக்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹெல்மெட்களை முழு-முக ஹெல்மெட்கள் என கூற முடியாது. இவை அரை-முக ஹெல்மெட்கள் ஆகும். அதாவது, பாதி முகத்தை மட்டுமே இந்த ஹெல்மெட்கள் மறைக்கின்றன.
இதனால், இவற்றை அணிந்திருக்கும்போது நன்கு காற்றோட்டமாக உணரலாம். ஸ்டீல்பேர்டின் இந்த புதிய ஹெல்மெட்களை மீடியம் (580மிமீ), பெரியது (600மிமீ) மற்றும் கூடுதல் பெரியது (620மிமீ) என 3 விதமான அளவுகளில் வாங்கலாம். உலக தரத்திலான பாதுகாப்பை வழங்குவது மட்டுமின்றி, ரைடர்களுக்கு நன்கு சவுகரியத்தை வழங்கக்கூடியவைகளாகவும் இவற்றை உருவாக்கியுள்ளதாக ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹெல்மெட்களின் டிசைனில் பாதுகாப்பு மற்றும் சவுகரியம் என இரண்டும் ஒரே கலவையாக இருக்க வேண்டும். ஏனெனில், ஹெல்மெட்களை பொறுத்தவரையில், அவற்றை நாம் தினந்தோறும் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால் அவற்றை சவுகரியமானதாக தேர்வு செய்வது முக்கியமானது ஆகும். இந்த விஷயத்தில் ஸ்டீல்பேர்டு நிறுவனம் எப்போதும் சமரசம் செய்துக் கொண்டது இல்லை.


Click it and Unblock the Notifications









