எந்தவொரு நாட்டிலும் வாகனம் ஓட்டலாம்... இண்டர்நேஷ்னல் டிரைவிங் லைசன்ஸை வாங்குறது இவ்வளவு ஈஸியா!!
வெளிநாட்டில் கார், பேருந்து உள்பட கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு நம் இந்தியாவை போல் அங்கேயும் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதுவே சிலர் ஒன்று மேற்பட்ட நாடுகளிலோ அல்லது உலகம் முழுவதுமோ பைக்கிலோ அல்லது காரிலோ பயணிக்க விரும்புவர். அத்தகைய பயணங்களுக்கு உங்களிடம் சர்வதேச ஓட்டுனர் உரிமம் இருத்தல் அவசியமாகும்.
இந்திய ஓட்டுனர் உரிமம் அல்லது பெர்மிட் (IDP)-ஐ வைத்து உங்களால் இந்தியா முழுவதும் எந்தவொரு சாலையிலும் வாகனம் ஓட்டலாம். ஆனால் இந்தியாவை தாண்டி எந்தவொரு வெளிநாட்டில் வாகனம் ஓட்ட வேண்டுமென்றாலும் உங்களிடம் அந்த நாட்டின் ஓட்டுனர் உரிமம் அல்லது சர்வதேச ஓட்டுனர் உரிமம் இருத்தல் வேண்டும். இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை எவ்வாறு பெறுவது என்பது உங்களில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

சர்வதேச ஓட்டுனர் உரிமத்தையும் நம் இந்திய அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து ஆணையத்திடம் இருந்தோ அல்லது அருகில் உள்ள பிராந்திய போக்குவரத்து அதிகாரி (RTO)-இடம் இருந்தோ பெற முடியும். இந்திய ஓட்டுனர் உரிமத்திற்கான தகுதியை போல் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெறுவதற்கும் நீங்கள் இந்திய குடிமகனாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். உங்களிடம் இந்திய ஓட்டுனர் உரிமமும் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் விஸா இருத்தல் கட்டாயம் ஆகும். இந்திய குடிமகன் என்பதையும், இந்த பகுதியில் தான் வசிக்கிறேன் என்பதையும், வயது இதுதான் என்பதையும் உறுதிப்படுத்தும் ஆதாரங்கள், இந்திய ஓட்டுனர் உரிமத்தின் நகல் மற்றும் பாஸ்போர்ட் & விஸாவின் நகல்களுடன்
சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற மேலும் சில ஆவணங்களையும் கொண்டிருக்க வேண்டிய அவசியமாகிறது.

விண்ணப்பம் 4ஏ மற்றும் விண்ணப்பம் 1ஏ, விமான பயணச்சீட்டின் மாதிரி மற்றும் பாஸ்பேர்ட்-அளவு புகைப்படங்கள் என்பவை அந்த ஆவணங்களாகும். அத்துடன் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,000-ஐ நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். மேற்கூறிய ஆவணங்களையும், கட்டண தொகையையும் தயார் செய்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியவற்றை இனி ஒவ்வொரு படியாக பார்க்கலாம்.
படி 1:
முதற்கட்டமாக நீங்கள், விண்ணப்பம் 4ஏ மற்றும் விண்ணப்பம் 1ஏ என்ற இரு வெவ்வேறு விதமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் விண்ணப்பம் 4ஏ ஆனது விண்ணப்பதாரர் ஓர் வாகனத்தை இயக்கக்கூடிய திறன் கொண்டவர் என்பதையும், விண்ணப்பம் 1ஏ ஆனது விண்ணப்பதாரர் மருத்துவ ரீதியாக நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என்பதையும் குறிக்கக்கூடியன.

இந்த விண்ணப்பங்களை நீங்கள் மோர்த் (MoRTH) எனப்படும் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறையின் இணையத்தள பக்கத்திலோ அல்லது லோக்கல் ஆர்டிஓ-விலோ பெறலாம்.
படி 2:
விண்ணப்பங்களை தகுந்த விபரங்களுடன் பூர்த்தி செய்த பின்னர் அவற்றை மோர்த் இணையத்தள பக்கத்திலோ அல்லது ஆர்டி அலுவலகத்திலோ ரூ.1,000 விண்ணப்ப கட்டணத்துடன் சமர்பிக்க வேண்டும்.
படி 3:
இந்திய ஓட்டுனர் உரிமத்தை போன்று சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெறவும் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு நீங்கள் நேரில் சென்று வாகனத்தை ஓட்டி காட்ட வேண்டியிருக்கும். சோதனையில் சரியாக செயல்பட்டீர்கள் என்றால் சர்வதேச ஓட்டுனர் உரிமம் அடுத்த 4- 5 நாட்களில் கிடைத்துவிடும்.
சர்வதேச ஓட்டுனர் உரிமத்தில் நீங்கள் குறிப்பிட்ட வாகனங்களை இயக்குவதற்கு தகுதி உடையவர் என்பது எந்தவொரு நாட்டினருக்கும் புரியும் வகையில் பல்வேறு விதமான மொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications