இந்த குச்சியை ஏன் டூவீலர்ல மாட்டுறாங்க தெரியுமா? இது இல்லேன்னா உசுரே போயிடுமாம்!
குஜராத் மாநிலத்தில் சாலையில் செல்லும் டூவீலர் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களது வாகன ஹேண்டில் பாரில் உயரமான குச்சி போன்ற கருவி ஒன்றை பொருத்தி வருகிறார்கள். இந்த கருவி அவர்களது உயிரையே காப்பாற்றும் என குஜராத் மாநில போலீசார் கூறி வருகிறார்கள். இந்த கருவியின் பெயர் என்ன? இது எதற்காக பொருத்தப்படுகிறது? குஜராத் மாநிலத்தில் மட்டும் இதை பொருத்துவதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? இது குறித்த விரிவான அனைத்து விவரங்களையும் காணலாம் வாருங்கள்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் வருகிறது. பொதுவாக சுதந்திர தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வானத்தில் பட்டம் விட்டு மக்கள் கொண்டாடுவார்கள். குஜராத் மாநிலத்தில் பட்டம் விடுவது என்பது மிகப்பெரிய கலாச்சார விஷயமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இப்படியாக குஜராத் மாநிலத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் பண்டிகை நேரத்தில் வானில் பட்டம் பறப்பதை பார்க்க முடியும்.

இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் வானத்தில் பட்டம் பறக்க விட திட்டமிட்டு இருக்கும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இப்படியாக பறக்கவிடும் பட்டங்கள் அறுந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கழுத்தில் பட்டத்தின் மாஞ்சா நூல் சிக்கி பலர் காயமடைந்துள்ளார்கள். இது சம்பவத்தில் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இப்படியான சம்பவங்கள் அதிகரித்து வருவதை கவனித்த காவல்துறை இந்த ஆண்டு இந்த சம்பவங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்ல முற்றிலுமாக தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற முடிவே எடுத்தது. முன்பு நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது பெரும்பாலும் டூவீலர்களில் செல்லும் நபர்கள் தான் இப்படியாக மாஞ்சா நூல் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டூவீலர் வேகமாக செல்லும்போது குறுக்கே மாஞ்சா நூல் இருந்தால் அந்த மாஞ்சா நூல் டூவீலர் வாகன ஓட்டியின் கண்களுக்கு தெரியாமல் இருக்கும். இதனால் தான் இந்த ஆபத்து ஏற்படுகிறது என்பதை உணர்ந்த போலீசார் உடனடியாக குஜராத்தில் இயங்கும் அனைத்து டூவீலர்களிலும் மாஞ்சா நூல்கள் வாகன ஓட்டியின் மீது படாதவாறு டூவீலர் முன்னாள் குச்சி போன்ற ஒரு கருவியை பொருத்த முடிவு செய்தார்கள்
இந்த கருவியை பொருத்தினால் மாஞ்சா நூல் டூவீலர் வாகன ஓட்டியின் குறுக்கே இருந்தாலும், வாகன ஓட்டியின் கண்ணுக்கு தெரியாவிட்டாலும், இந்த குச்சியில் சிக்கிவிடும். இதனால் வாகன ஓட்டிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. தற்போது குஜராத்தில் சுதந்திர தினத்திற்காக கொண்டாட்டங்கள் துவங்க உள்ள நிலையில் போலீசார் இந்த கருவியை வாகனங்களில் பொருத்த துவங்கி விட்டார்கள்.

பட்டம் விட பயன்படும் மாஞ்சா நூல்களை தயாரிப்பது சாதாரண நாட்கள் தயாரிப்பது போல கிடையாது. இந்த நூலை தயாரிக்க அரைத்த கண்ணாடி மற்றும் பொடியாக்கப்பட்ட மெட்டல்களை பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் நூல் ஸ்டிராங்காக அறுந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்துகிறார்கள். பட்டம் உயரத்தில் பிறக்கும் போது அதிக காற்று இருக்கும். அந்த காற்றுக்கு நூல் அறுந்து போகாமல் இருக்க வேண்டும் என்றால் இப்படியான மாஞ்சா நூலை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் அதையும் மீறி நூல் அறுந்து பறந்து போகும்போது இது மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக கழுத்து பகுதியில் இந்த நூல் பட்டால் கழுத்தை அறுபட்டு உயிர் இழக்க கூட வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக இந்த கருவி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. குஜராத் போலீசார் இதை இலவசமாகவே வாகனங்களில் பொருத்தி வருகிறார்கள்.
இதனால் வாகனங்கள் வேகமாக செல்லும்போது குறுக்கே மாஞ்சா நூல் இருந்தாலும், இது பயணிகளை தாக்காமல் இந்த கருவில் சிக்கிக் கொள்ளும் இதனால் உயிர் இழப்புகள் காயங்கள் ஏற்படுவது குறையும் என்ற காரணத்திற்காக இதைப் பொருத்தி வருகிறார்கள். இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குஜராத் போன்ற மாநிலங்களில் பட்டம் விடுவது ஒரு கலாச்சார அம்சமாக இருப்பதால் அதை தடுப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். அதற்கு பதிலாக இப்படியான ஒரு கருவியை பொருத்துவதன் மூலம் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும் என குஜராத் மாநில போலீசார் யோசித்ததும் அதை இலவசமாக வாகனங்களில் பொருத்திக் கொடுப்பதும் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









