ஒருத்தரையும் விடாம விரட்டி விரட்டி பிடித்த போலீசார்! பல லட்ச ரூபாயில் பைக் வாங்க தெரிஞ்சவங்களுக்கு இது தெரியல!
சூப்பர் பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு ஆசையாக இருக்கும். ஆனால், இந்த ஆசையை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால் குறைவானவர்களே நிறைவேற்றுகின்றனர். அப்படிப்பட்ட சூப்பர் பைக்கை வாங்குபவர்களும் அதனை நல்லப்படியாக வைத்துக் கொள்கின்றனரா என பார்த்தால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுசரி... அவர்கள் வாங்கிய சூப்பர் பைக்கை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், பவர்ஃபுல்லான என்ஜின் உடன் அதிவேகத்தில் இயங்கக்கூடிய சூப்பர் பைக்குகளை கொண்டு மற்ற வாகன ஓட்டிகளையும், பொது சொத்துக்களையும் இடையூறு செய்யும்போதுதான் அது தடுக்கப்பட வேண்டியதாகிறது. அந்த வகையில், லடாக்கிற்கு சூப்பர் பைக்குகளில் சென்றவர்கள் அங்கு உள்ள ஏரி ஒன்றில் தங்களது பைக்குகளை நிறுத்தி பாதுகாக்கப்பட வேண்டிய அந்த பகுதியை சேதப்படுத்தி உள்ளனர்.

ஜம்மூ & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக்கில் 90%-க்கும் மேற்பட்ட பகுதிகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகளாக உள்ளன. அதாவது, அந்த அளவிற்கு லடாக்கில் இயற்கை சூழல் மிகுந்த பகுதிகள் ஏகப்பட்டவை உள்ளன. இதனாலேயே லடாக்கிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பல பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் சில இடங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது. குறிப்பாக, லடாக்கில் உள்ள பல நீர் நிலைகளில் குளிக்க அனுமதி கிடையாது. அப்படியிருக்க, அந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளுள் சிலர் தங்களது வாகனத்தை அத்தகைய நீர் நிலைகளில் ஓட்டி, அந்த பகுதியை சேதப்படுத்துவதை பரவலாக அடிக்கடி பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில், சமீபத்தில் சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) மற்றும் கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-10ஆர் (Kawasaki Ninja ZX-10R) பைக்குகளில் லடாக்கிற்கு சென்ற இளைஞர்கள் சிலர், அங்கிருக்கும் பிரபலமான மற்றும் பாரம்பரியமிக்க பாங்காங் டிசோ (Pangong Tso) ஏரியில் தங்களது சூப்பர் பைக்குகளை இறக்கி அட்டகாசம் செய்துள்ளனர்.
மேலும் அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட, அதுதான் தற்போது அவர்களுக்கு பிரச்சனையாக முடிந்துள்ளது. பாங்காங் ஏரி மட்டுமின்றி, நுப்ரா மணல் குன்றுகளின் மீதும் இவர்கள் தங்களது பைக்குகளை ஆபத்தான முறையில் ஓட்டி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். ஏனெனில், இலகுவான மணற்பரப்பை கொண்ட மணல் குன்றுகளின் மீது பைக் ஓட்டும்போது, பைக் கவிழ்வதற்கும், குப்புற புரள்வதற்கும் கூட வாய்ப்புள்ளது.

இளைஞர்களின் இந்த செயல்களை ஆராய்ந்த லே மாவட்ட போலீசார், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மற்றப்படி, இந்த செயலுக்காக இளைஞர்கள் மீது எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது என்கிற விபரங்கள் கிடைக்க பெறவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், நிச்சயமாக பெரிய தொகையை அபராதமாக விதித்து இருப்பர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: லடாக்கில் பிரபலமான ஏரிகளுள் ஒன்றான பாங்காங் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் ஏகப்பட்ட பேர் வருகை தருகின்றனர். அதுமட்டுமின்றி, லடாக்கின் சுற்றுச்சூழலுக்கு பாங்காங் ஏரி முக்கியமானதாக விளங்குகிறது. இத்தகைய ஏரியில் குளிப்பதே தவறு எனும்போது, வாகனங்களை இறக்குவது அதனினும் தவறு ஆகும். இத்தகைய செயல்களை எல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால், முதலில் நமது எண்ணோட்டங்களை மாற்றுவது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









