வைரலாகும் வீடியோ... துல்கர் சல்மான்தான் இந்த காரியத்தை செய்தாரா? நிரூபிக்கப்பட்டால் தண்டனை உறுதி...
பிரபல நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதற்கு, அதிவேகமே மிக முக்கிய காரணம். ஆனால் அரசாங்கம் என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஒரு சில வாகன ஓட்டிகள், பின்விளைவுகளை பற்றி கொஞ்சமும் யோசித்து பார்க்காமல், தொடர்ந்து அதிவேகத்தில் பயணித்து கொண்டுதான் உள்ளனர்.

இந்த சூழலில் சமூக வலை தளங்களில் தற்போது காணொளி ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், மூன்று கார்கள் வேகமாக செல்வதையும், அந்த கார்களை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் துரத்தி செல்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இந்த கார்கள் பிரபல திரைப்பட நடிகர்கள் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மானுக்கு சொந்தமானவை என கூறப்படுகிறது.

அத்துடன் அவர்கள்தான் பந்தயத்தில் ஈடுபட்டனர் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனவே கேரள மாநிலத்தின் மோட்டார் வாகன துறை தற்போது இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் அந்த கார்கள் உண்மையிலேயே அதிவேகத்தில்தான் சென்றதா? என்பதை நிரூபிப்பதற்கு தங்களிடம் தற்போதைய நிலையில் எந்த ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோ 2.03 நிமிடம் ஓடுகிறது. இதில், கருப்பு நிற லம்போர்கினி, சில்வர் நிற போர்ஷே மற்றும் சிகப்பு நிற போர்ஷே என மூன்று கார்களை, இரு சக்கர வாகனத்தில் 2 பேர் துரத்தி செல்வதை காண முடிகிறது. கேரள மாநிலத்தின் கோட்டயம்-கொச்சி நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

கார்களுக்கு உள்ளே நடிகர்கள் இருந்ததாகவும், எனவே அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காகவும், அந்த இரண்டு பேரும் கார்களை விரட்டி சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் நடிகர்கள் முகம் காணொளியில் தெரியவில்லை. எனவே அவர்கள் உண்மையிலேயே காருக்குள் இருந்தனரா? என்பதும் சந்தேகமாகதான் உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். ஆனால் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக வேகத்தில் கார்கள் சென்றனவா? என்பதற்கு ஆதாரம் எதுவும் எங்களிடம் தற்போது இல்லை. ஏனெனில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் சாலையில், வாகனங்களின் வேகத்தை கண்டறியும் கேமராக்கள் இல்லை.

வெள்ளம் வந்தபோது அவை சேதமடைந்து விட்டன. அவற்றுக்கு மாற்றாக புதிய கேமராக்களை பொருத்தும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர். மேலும் பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் பெயர்கள் அடிபடும் நிலையில், மூன்றாவது காரில் இருந்தது யார்? என்பது குறித்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ''குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 184-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். காணொளியை வைத்து பார்க்கையில், கார்கள் வேக வரம்பை கடந்தது போன்று தெரியவில்லை. ஆனால் இரு சக்கர வாகனத்தில் கார்களை துரத்தி சென்றவர்கள் வேக வரம்பை கடந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன'' என்றனர்.

கேரளாவில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் கார்களுக்கான வேக வரம்பு மணிக்கு 80 கிலோ மீட்டர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இரு சக்கர வாகனங்களுக்காக வேக வரம்பு மணிக்கு 50 கிலோ மீட்டர் மட்டும்தான். இந்த வேகத்தை கடக்கும்பட்சத்தில், அது அதிவேகமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பரவி வரும் இந்த காணொளி எப்போது எடுக்கப்பட்டது? என்பதும் உறுதியாக தெரியவில்லை. இந்த காணொளியை எடுத்தவர்களையும் கண்டறிய முடியவில்லை. காணொளியில் இருந்து இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை எடுக்க முடியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். பதிவு எண் இருந்திருந்தால், அவர்களை கண்டுபிடிப்பது எளிதாக இருந்திருக்கும்.

மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 184-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் 1,500 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் அல்லது 6 மாதங்களுக்கு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். இது முதல் முறை செய்யும் குற்றத்திற்கான தண்டனை ஆகும். இரண்டாவது முறை எனும்பட்சத்தில், 3,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. மலையாளம் மற்றும் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டுள்ள பிருத்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ள காணொளியை நீங்கள் கீழே காணலாம்.
இந்த இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீதான தவறையும் சுட்டிக்காட்ட வேண்டும். பிரபலமான மனிதர்கள் செல்வதை பார்த்தால், அவர்களின் வாகனத்தை விரட்டி செல்வதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது தவறு. ஒரு வாகனத்தை அதிவேகத்தில் துரத்தி செல்லும்போது, விபத்துக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications