காஸ்ட்லீ பெட்ரோல்/ டீசல் கார்களுக்கு தடையா? உச்ச நீதிமன்றம் சொன்னதை கேட்குமா மத்திய அரசு?
மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (EV) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு, எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் கஸ்டமர்களுக்கும் மானியம் வழங்கி ஊக்குவிப்பதற்காக ஃபேம்-2 (FAME-2) திட்டத்தை மத்திய அரசு கடந்த பல வருடங்களாகவே செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க, ஆடம்பரமான பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவது முதல் படியாக அமையும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜோய்மால்யா பக்ச்சி அடங்கிய அமர்வு, அரசின் எலெக்ட்ரிக் வாகன மேம்பாட்டுக் கொள்கைகளை திறம்படச் செயல்படுத்தக் கோரும் ஒரு பொது நல மனுவை சமீபத்தில் விசாரித்தது.

அப்போது, "இந்த வழக்குகளைக் கையாளும் அனுபவங்களின் அடிப்படையில்... சமீப காலங்களில் சந்தையில் மிகவும் பெரிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை விஐபி-களும், பெரிய நிறுவனங்களும் பயன்படுத்தும் பிற எரிபொருள் கார்களைப் போலவே வசதியானதாக இருக்கின்றன," என்று நீதிபதி சூர்ய காந்த் கூறினார். மேலும் பேசிய அவர், "யார் பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் நான் எந்த விதமான பாரபட்சத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.

முதலில் மிகவும் விலையுயர்ந்த எரிபொருள் என்ஜின் வாகனங்களுக்குத் தடை விதிப்பதைப் பற்றி சிந்தியுங்கள். இது சாமானிய மக்களைப் பாதிக்காது. ஏனெனில், இந்திய மக்கள் தொகையில் மிகச் சிறிய பகுதியினர் மட்டுமே அவற்றை வாங்குகின்றனர்," என்றார். மத்திய அரசுக்காக ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, இந்த யோசனையை அரசு ஆதரிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த விஷயத்தில் 13 அமைச்சகங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அரசு இந்த விஷயத்தில் முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார். மனுதாரரான, பொது நல மனுக்களுக்கான மையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் முன்பு அதிகமாக இருந்ததாகவும், மக்களை வாங்க ஊக்குவிக்க சலுகைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், எலெக்ட்ரிக் கார்களுக்கு போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாததும் இப்போதைய முக்கிய சவாலாக உள்ளதாகவும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றஞ்சாட்டி உள்ளார். சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, மேலும் சார்ஜிங் நிலையங்கள் உருவாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. "சார்ஜிங் நிலையங்கள் அதிகம் இல்லாதது, சந்தை தொடர்பான சிக்கல்கள் ஆகும்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, சார்ஜிங் நிலையங்களும் அதிகமாக வரும்," என்று நீதிபதி அமர்வு கூறியது. மேலும், அதிகமான பெட்ரோல் நிலையங்களிலும் சார்ஜிங் வசதிகள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் குறிப்பிட்டது. இதற்காக, அரசாங்கத்தின் எலெக்ட்ரிக் வாகனக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதுவரை அரசாங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய போவதாக தெரிவித்த அட்டர்னி ஜெனரல், இந்த வழக்கு நான்கு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் விசாரணைக்கு வரும் என தெரிவித்தார். ஆக, இந்த பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் அவ்வளவு எளிதானதாக எடுத்துக் கொள்ளாது. நிச்சயமாக இந்த வழக்கின் மூலமாக, மத்திய அரசை எலெக்ட்ரிக் வாகன புரட்சியை நோக்கி மேலும் தள்ளும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதில், கடந்த சில வருடங்களில் மத்திய அரசு சற்று மெதுவாகி விட்டது என்பது உண்மையே. இந்த அமைதிக்கு பின்னால், அதிரடியான நடவடிக்கை எதாவது இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அத்தகைய நடவடிக்கைகளை விரைவாக கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்த இவ்வாறான பொதுநல வழக்குகள் அவசியமாகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களினால், பசுமையான சுற்றுச்சூழலை பெறுவதுடன், நமது போக்குவரத்து முறையே மாறிவிடும் என்பதினால்தான் மத்திய அரசில் இருந்து உச்ச நீதிமன்றம் வரையில் இந்த விஷயத்தில் முனைப்புடன் உள்ளன.


Click it and Unblock the Notifications









