தீபாவளி முடிச்சுட்டு போறவங்க கிட்ட அடிச்சு புடுங்குற மாதிரில இருக்கு!! ரூ.11,230 வரையில் இரயில் கட்டணம்!
இதுவரையில் இல்லாத உச்சமாக ஜெய்பூர்- பெங்களூர் இடையே இரயில் கட்டணம் ரூ.11,000ஐ கடந்துள்ளது. தீபாவளி முடிந்து, சொந்த ஊரில் இருந்து பணி செய்யும் பகுதிக்கு செல்வதற்காக இரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், இந்தியா முழுவதுமே இவ்வாறு இரயில் டிக்கெட் கட்டணங்கள் கூட்டத்தை குறைக்க அதிகரிக்கப்பட்டு உள்ளன.
தீபாவளி என்றாலே கொண்டாட்டமும், மகிழ்ச்சியும் தான் என நமக்கு சொல்லி, சொல்லி வளர்த்து உள்ளார். ஆனால், உண்மையில் கதையே வேறு. 2 -3 நாட்களுக்கு சொந்த ஊருக்கு சென்று, குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாட நினைக்கும் ஏழை, எளிய மக்கள் இந்த சிறு மகிழ்ச்சிக்காக உழைத்து பெற்ற பணத்தை வழக்கத்தை காட்டிலும் அதிகமாக செலவு செய்து, கூட்டம் நெரிசலில் சிக்கித் தவித்து ஊருக்கு செல்கின்றனர்.

தீபாவளிக்காக சொந்த ஊருக்கு செல்லும்போதும் சரி, அதேபோல் மீண்டும் வேலை பார்க்கும் நகரத்திற்கு செல்லும்போதும் சரி இக்கட்டான நிலைமையை தான் பெரும்பாலானோர் சந்திக்கின்றனர். ஏதாவது ஒரு வருடத்தில் இப்படி நடந்தால் பரவாயில்லை. ஆனால், இதே நிலைமையே வருடா வருடம் நடக்கிறது. அதற்கேற்ப நாட்டின் மக்கள் தொகையும் வருடந்தோறும் அதிகரிக்கிறது.
அதிக பணம் செலவழித்து விமானங்களில் செல்வோருக்கு பிரச்சனை இல்லை. அதேபோல், காசு இல்லாமல் சொந்த ஊருக்கு செல்லாமல் இருப்பவர்களுக்கும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லை. ஆனால் இடையில், தன்னையும் ஒரு சாதாரண மனிதனாக காட்டிக் கொள்ள நினைக்கும் மிடில்-கிளாஸ் மக்கள் தான் இந்த சிரமங்களை ஒவ்வொரு வருடமும் வேண்டுமென்றே எதிர்கொள்கின்றனர்.

விமானங்களில் செல்ல முடியாதவர்களுக்காக இருப்பதே இரயில் சேவை. ஆனால், இந்தியன் இரயில்வேயும் இந்த வருடம் தீபாவளி சமயத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க, வேறு வழியில்லாமல் டிக்கெட் கட்டணங்களை குறிப்பிட்ட சில வழித்தடங்களில், சில இரயில்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, சுவிதா விரைவு இரயில்களில் டிக்கெட் கட்டணம் சுமார் ரூ.11,230ஐ தொட்டுள்ளது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து பெங்களூரின் யெஸ்வந்த்பூருக்கு செல்லும் சுவிதா விரைவு இரயில்களில் ஏசி-2 படுக்கை பெட்டிகளில் இவ்வளவு அதிகமான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், மும்பை - பாட்னா இடையேயான வழித்தடத்திலும் சுவிதா விரைவு இரயில்களில் ரூ.9,395 வரையிலான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியன் இரயில்வேயில் மிகவும் சொகுசு வசதிகளை கொண்ட இரயில்களில் ஒன்று சுவிதா விரைவு இரயில்கள் ஆகும். இந்தியாவில் தற்போதைக்கு மேற்கூறப்பட்ட இரு வழித்தடங்களில் மட்டுமே 2 சுவிதா இரயில்கள் இயக்கப்படுகின்றன. மும்பை - பாட்னா இடையே வாரத்திற்கு இருமுறையும், ஜெய்பூர்- யெஸ்வந்த்பூர் இடையே வாரத்திற்கு ஒருமுறையும் சுவிதா இரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த வழித்தடங்களில், சுவிதா விரைவு இரயிலாக இருப்பினும் மற்ற நாட்களில் இவ்வளவு அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படாது. தீபாவளியை முன்னிட்டே இவ்வளவு அதிக டிக்கெட் கட்டணம் ஆகும். தீபாவளி சமயத்தில், எந்தவொரு இரயிலிலும் ஏசி & நான்-ஏசி என இரு விதமான பெட்டிகளிலும் அடிப்படை டிக்கெட் விலையில் 300% வரையில் அதிகரிக்க இந்தியன் இரயில்வே அனுமதிக்க வழங்குவதாக கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா, அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. இதுவே பல சமயங்களில் பிரச்சனையாகவும் அமைகிறது. தீபாவளியை முன்னிட்டு சில வழித்தடங்களில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டாலும், இந்த பிரச்சனையை களையெடுக்க முடியவில்லை. நம் மக்கள் அனைவராலும் விமான சேவையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், தீபாவளி சமயத்தில் இரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க அரசு ஏதேனும் மாற்று வழியை காண வேண்டும்.


Click it and Unblock the Notifications









