இந்தியா பேரை கேட்டாலே இனி இந்த சம்பவம் தான் ஞாபகத்துக்கு வரும்! ஷோரூமில் இப்படிப்பட்ட ஆட்கள் கூடவா இருக்காங்க?
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் மூலமாக, நாட்டின் பொருளாதாரம் வளரும் என்பதால், இந்திய அரசும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் கடந்த பல வருடங்களாகவே மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அவ்வாறு, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளை கொண்ட இந்தியாவை சுற்றி பார்க்க வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய மக்களோடு மக்களாக நாட்டை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பதற்காக நீண்ட தொலைவு மோட்டார்சைக்கிள் பயணங்களை கூட மேற்கொள்வது உண்டு.
அதற்காக இந்தியாவில் ஏதேனும் ஒரு பைக்கை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவர், அல்லது ஒரு சில வெளிநாட்டு பயணிகள் தங்களது சொந்த பைக்கையே இந்தியாவிற்கு கொண்டுவருவது உண்டு. அவ்வாறு, தங்களது நாட்டில் பயன்படுத்தி வந்த பைக்கை இந்தியாவிற்கு கொண்டுவருபவர்கள் சாலை மார்க்கமாகவே மாதக்கணக்கில் பயணம் செய்து இந்தியாவிற்கு வந்துள்ள நிகழ்வுகளை எல்லாம் கூட இதற்கு முன்னர் பார்த்துள்ளோம்.

அவ்வாறு, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியாவில் பல பகுதிகளை தனது விலையுயர்ந்த ஹோண்டா டிரான்சால்ப் எக்ஸ்.எல்650வி (Honda Transalp XL650V) என்கிற அட்வென்ச்சர் ரக பைக்கில் சமீபத்தில் சுற்றி பார்த்துள்ளார். இந்த ஹோண்டா பைக் இந்தியாவில் விற்பனையில் இல்லை; இதற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டதும் இல்லை.
நம் இந்தியர்கள் நேரில் பார்த்திடாத இத்தகைய பைக்கில் இந்தியாவின் சுற்றுலா தளங்களை பார்வையிட்ட இந்த ஸ்வீடன் நாட்டு பெண் சில நாட்கள் கழித்து இந்தியாவில் இருந்து நேபாளம் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இது அவர் ஏற்கனவே போட்ட திட்டமே ஆகும். அதன்படி, ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்குள் சாலை வழியாக நுழைவதற்கு அனைத்து அனுமதிகளையும் ஏற்கனவே பெற்று வைத்திருந்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் இருந்து பீகார் வழியாக நேபாளத்திற்குள் நுழைவதுதான் இவரது திட்டமாக இருந்துள்ளது. அதன்படி, பீகார் மாநிலத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியுள்ளது. போதாக்குறைக்கு சாலைகளும் குறுகலாக இருந்ததால், இவர் சென்ற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்துள்ளது.
பின்னால் தனது சுமைகளை வைத்துக் கொண்டு அந்த சாலைகளில் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருந்ததால், பீகாரை நெருங்கிய உடன் சாலை ஒரமாக இருந்த கடையில் நிறுத்தி சற்று இளைப்பாறலாம் என நினைத்து, ஏற்கனவே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கனரக லாரிக்கு பின்னால் தனது ஹோண்டா டிரான்சால்ப் எக்ஸ்எல்650வி பைக்கை நிறுத்தி உள்ளார்.
ஆனால், சிறிது நேரத்தில் முன்னால் நின்றிருந்த லாரியை ஓட்ட ஆரம்பித்த டிரைவர் முன்னோக்கி செல்வார் என பார்த்தால், பின்னோக்கி ரிவர்ஸில் வந்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த இந்த ஸ்வீடன் நாட்டு பெண் என்ன நடக்கிறது என்பதை சூதாரிப்பதற்குள் அவரது பைக் மீது லாரி ஏறிவிட்டது. உடனே லாரியை நிறுத்திவிட்டாலும், இந்த பெண்ணின் பைக் பலத்த சேதாரங்களை சந்தித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போதும், இளைப்பாறும்போதும் எந்த அளவிற்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சாட்சியாகும். நல்லவேளையாக, சுற்றியிருந்தவர்கள் இந்த வெளிநாட்டு பயணிக்கு உதவினர். மேலும், அருகில் இருந்த ஹோண்டா டீலர்ஷிப் ஷோரூமுக்கு பைக்கை கொண்டு சென்றதிலும் அங்கிருந்த அதிகாரிகள் இந்த வெளிநாட்டு பயணிக்கு இலவசமாக பழுது பார்த்து கொடுத்துள்ளனர்.
Source: Cartog (https://www.cartoq.com/)


Click it and Unblock the Notifications








