இது நல்ல ஐடியாவா இருக்கே! இதை பாத்துட்டு இனி ஆள் ஆளாளுக்கு காருக்கு உள்ளே நீச்சல் குளத்தை உருவாக்க போறாங்க!
இந்தியாவில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்ற பெங்களூர் போன்ற நகரங்களில் கூட, மக்கள் வெயிலில் வாடி வதங்கி வருகின்றனர். இனி வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு புதிய வழிகளை கண்டறிந்து வருகின்றனர்.
இதில் ஒரு சில வினோதமான வழிமுறைகள், மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றன. அப்படி ஒரு வினோதமான வழி குறித்த சுவாரஸ்யமான தகவலைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். நீங்கள் நீச்சல் குளங்களை தரையில் பார்த்திருக்கலாம். கட்டிடங்களின் மொட்டை மாடியில் பார்த்திருக்கலாம். ஆனால் கார்களுக்கு உள்ளே பார்த்துள்ளீர்களா? இந்த கேள்விக்கு, பெரும்பாலானோரின் பதில் 'இல்லை' என்பதாகதான் இருக்கும். ஏனெனில் நம்மில் பலரும், காருக்கு உள்ளே நீச்சல் குளத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இங்கே நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து, காருக்கு உள்ளே நீச்சல் குளத்தை உருவாக்கியுள்ளனர்.

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ஹூண்டாய் சான்ட்ரோ (Hyundai Santro) காருக்கு உள்ளே நீச்சல் குளம் உருவாக்கப்பட்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது பழைய ஹூண்டாய் சான்ட்ரோ கார் ஆகும். இந்த காரின் முன் பகுதி பயணியின் இருக்கை அகற்றப்பட்டுள்ளது.
அதேபோல் பின் இருக்கைகளும் அகற்றப்பட்டுள்ளன. இருக்கைகள் அகற்றப்பட்ட பிறகு, காருக்கு உள்ளே நீல நிற தார்பாலினை போட்டு தண்ணீர் ஊற்றி, நீச்சல் குளமாக மாற்றியுள்ளனர். இந்த கார் நீச்சல் குளத்தில் நண்பர்கள் சிலர் 'என்ஜாய்' செய்து கொண்டிருப்பதை வைரல் வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

காருக்குள் நீச்சல் குளம் என்ற 'கான்செப்ட்' புதுமையாக உள்ளதால், இந்த வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது. பொதுவாக வெளியில் இருப்பதை விட, காருக்கு உள்ளே வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருக்கும். சூடான இடங்களில் ஒரு சில நிமிடங்கள் பார்க்கிங் செய்து விட்டு, காருக்குள் ஏறினால் கூட, உட்காரவே முடியாத அளவிற்கு வெப்பம் தகிக்கும். எனவே கடந்த காலங்களில் கோடை காலத்தின்போது, கார்களை மாட்டு சாணத்தால் 'கோட்டிங்' செய்வது ஒரு 'ட்ரெண்ட்' ஆக இருந்தது. இந்த வரிசையில் வரும் காலங்களில் காருக்கு உள்ளே நீச்சல் குளத்தை ஏற்படுத்துவது ஒரு 'ட்ரெண்ட்' ஆக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
ஏனெனில் இந்தியாவில் தற்போது வெயில் அந்த அளவிற்கு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் காருக்கு உள்ளே நீச்சல் குளம் ஏற்படுத்தப்பட்டிருப்பது இது முதல் முறை கிடையாது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் மாருதி 800 (Maruti 800) காரில் நீச்சல் குளத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அவரும், இவர்களை போலவே, இருக்கைகளை எல்லாம் அகற்றி, தண்ணீர் நிரப்பிதான், காருக்கு உள்ளே நீச்சல் குளத்தை உருவாக்கியிருந்தார். தற்போது அதே பாணியில் மற்றொரு காரில் நீச்சல் குளம் ஏற்படுத்தப்பட்டிருப்பது, அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. கோடை காலம் முடியும் வரை, இது போன்ற இன்னும் புதுமையான விஷயங்கள் பலவற்றை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய மக்கள் வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கு பெயர் பெற்றவர்கள். எளிமையான அதே நேரத்தில் புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் திறமை இந்தியர்களுக்கு உண்டு. இந்த கார் நீச்சல் குளம் இதற்கு ஒரு உதாரணம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








