ஒருமுறை ஆவது பயணம் செய்து பார்த்திடனும்... 17 வருஷத்துக்கு பின் வந்த டபுள்-டக்கர் பேருந்தில் இத்தனை வசதிகளா!!
சென்னையின் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், எலெக்ட்ரிக்கில் இயங்கும் புதிய இரு அடுக்கு பேருந்து (Double-decker Bus) சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 12, 2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அசோக் லேலண்ட் (Ashok Leyland), ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) ஆகிய நிறுவனங்களும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோரும் இணைந்து தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு இந்தப் பேருந்தை பரிசளித்துள்ளனர்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினக் கொண்டாட்டத்தின்போது, ரூ.1.89 கோடி மதிப்பில் உருவான இந்த டபுள்-டக்கர் பேருந்தை, அமெரிக்க-வாழ் தமிழர்கள் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனத்தினர் மும்பையில் உள்ள இந்துஜா அறக்கட்டளை (Hinduja Foundation) மூலம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திற்கு வழங்கினர்.

இந்தப் புதிய சேவை ஆனது சென்னை-வாழ் மக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் சிறப்பான நகர பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப நகரின் முக்கிய பாரம்பரிய தளங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களை இணைத்து, பேருந்தின் உயரமான தளத்தில் இருந்து நகரத்தின் அழகை கண்டுகளிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது.
முதற்கட்டமாக, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக (TTDC) தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, எல்.ஐ.சி (LIC), ஸ்பென்சர் பிளாசா (Spencer Plaza), மக்கா மஸ்ஜித் (Makka Masjid), பி.ஓர் & சன்ஸ் (P.Orr & Sons), பல்லவன் சாலை, பாடிகார்டு முனீஸ்வரர் கோயில், ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி, சென்னை துறைமுக அறக்கட்டளை, போர் நினைவுச் சின்னம், நேப்பியர் பாலம் வழியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களைச் சுற்றி வரும்.

இதற்கிடையில், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவகங்கள், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், சாந்தோம் தேவாலயம், அகில இந்திய வானொலி, தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், ராணி மேரி கல்லூரி, விவேகானந்தர் இல்லம், மாநிலக் கல்லூரி, எழிலக வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம், தூர்தர்ஷன் கேந்திரா, ராஜாஜி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இந்த டபுள்-டக்கர் பேருந்து சேவை இருக்கும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த எலெக்ட்ரிக் பேருந்துகள் அசோக் லேலண்டின் எலெக்ட்ரிக் வாகனப் பிரிவான ஸ்விட்ச் மொபிலிட்டி தயாரித்த ஸ்விட்ச் இவ்-22 (EiV-22) மற்றும் இவ்-28 வகையைச் சேர்ந்தவை ஆகும்.

65 முதல் 90 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த டபுள்-டக்கர் பேருந்தில் மேல்தளத்தில் 35 இருக்கைகளும், கீழ்த்தளத்தில் 30 இருக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வாகனங்கள் சுமார் 9.8 மீட்டர் நீளமும் 4.75 மீட்டர் உயரமும் கொண்டவை. இந்த டபுள்-டக்கர் பேருந்துகளில் பனோராமிக் (panoramic) மேற்கூரை மற்றும் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று மேலும் 20 டபுள்-டக்கர் பேருந்துகளை வாங்க சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னைக்கு டபுள்-டக்கர் பேருந்துகள் ஒன்றும் புதியது அல்ல. ஒரு காலத்தில் சென்னை சாலைகள் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த டபுள்-டக்கர் பேருந்துகளை தமிழ்நாடு அரசு, 17 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட இடைவெளிக்குப் பிறகு குளிரூட்டப்பட்ட வசதி உடன் எலெக்ட்ரிக்கில் மீண்டும் கொண்டுவருவது மூலம் சென்னையின் செழுமையான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் சுற்றுலா பயணிகள் வாயிலாக உலகிற்கு வெளிப்படுத்த முடியும். மேலும், இந்த நவீன எலெக்ட்ரிக் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வாகவும் அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications









