இதுக்கெல்லாம் தைரியம் வேணும்! பிரேக் பிடிக்காத அரசு பஸ்ஸை இயக்க சொன்ன அதிகாரிக்கு பாடம் புகட்டிய டிரைவர்!
அரசு பஸ்ஸில் பிரேக் பிடிக்காததால் பஸ் டிரைவர் பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டு விட்டு பஸ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேக் பிடிக்காத பஸ்ஸை இயக்க வலியுறுத்துவதாக பஸ் டிரைவர் சொன்ன குற்றச்சாட்டு பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் மேல சங்கரன் குழியைச் சேர்ந்தவர் ஞான பெர்க்மான்ஸ் இவர் அரசு பஸ்ஸில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று நாகர்கோவிலை அடுத்த வடசேரியில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் பஸ்ஸில் டிரைவராக பணியில் ஏறினார். அந்த பஸ்சை அவர் ஓட்டி செல்லும் போது அது சரியான முறையில் பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளது. இதற்கு முன்னரும் பஸ்சில் இந்த பிரச்சனை இருந்துள்ளது.

நேற்று அவர் நிலைமையைச் சமாளித்துக் கொண்டு முடிந்த அளவு குறைவான வேகத்தில் மற்றவர்களுக்கு பாதிப்பில்லாமல் பஸ்ஸை ஒட்டி வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பஸ் வள்ளியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்தபோது அவருக்கு இதற்கு மேல் பஸ்ஸின் பயணத்தைத் தொடர முடியாது என்பதை அறிந்து வள்ளியூர் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்ஸை நிறுத்தினார்.
அங்குப் பயணிகளிடம் அவர் பஸ்ஸில் சரியாக பிரேக் பிடிக்கவில்லை இதனால் தொடர்ந்து பயணித்தால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறி பயணிகளை எல்லாம் பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டு வேறொரு திருநெல்வேலி பஸ்ஸில் மாற்றி விட்டுள்ளார். பயணிகள் எல்லாம் பத்திரமாக வேறு ஒரு பஸ்ஸிற்கு மாறிய பிறகு இந்த பஸ் டிரைவர் பஸ்ஸை அப்பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்று ஆர்டிஓ அலுவலரிடம் பஸ்சை ஒப்படைத்து பஸ்ஸில் பிரேக் பிடிக்கவில்லை என்றும் பஸ்சில் ஏராளமான பழுதுகள் இருப்பதாகக் கூறி இந்த பஸ்ஸை தன்னை இயக்கச் சொல்லி டிப்போ அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்றும். அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பஸ் டிரைவர் கூறும் போது: " பஸ்ஸில் நடந்த சில நாட்களாகவே பிரேக் பிரச்சனை இருந்துள்ளது. வலது பக்கம் திரும்பினால் இடது பக்கம் திரும்புகிறது இடது பக்கம் திரும்பினால் வலது பக்கம் திரும்பியது. இதைச் சரி செய்யப் பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பிரச்சனைகளுடன் இந்த பஸ்சையே இயக்கி வந்தேன்.
புகார் நோட்டிலும் தொடர்ந்து இதுபோன்று பயணித்தால் பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல முடியாது என்ற என எழுதி வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இன்று பஸ் மோசமான நிலைக்கு சென்று விட்டதால் பயணிகளின் நலன் கருதி அவர்களைப் பத்திரமாக இறக்கி வேறு பஸ்க்கு மாற்றி விட்டேன்" எனக் கூறினார்.
இது குறித்து இந்த பஸ்ஸை சீரமைக்கப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் இந்த பஸ் சீரமைப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. தற்போது பஸ் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குச் சென்றுவிட்டது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பஸ்கள் பெரும்பாலும் பழுதான பஸ்களாக இருப்பதாகப் பெருமளவில் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அரசு பேருந்துகள் நடுவழியில் நிற்பது, திடீரென பிரேக் ஃபெயிலியர் ஆவது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் வட மாவட்டங்களை விடத் தென் மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு பஸ்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. வட மாவட்டங்களில் இயக்கப்பட்டு ஆயுள் குறைந்த பஸ்கள் எல்லாம் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு இயக்கப்படுகிறது. அங்கும் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாமல் இது போன்ற சிக்கல்கள் இருக்கிறது. இதைத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் உடனே சரி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








