மீறினால் நடக்கறதே வேற! தமிழ்நாடு அரசு பஸ் டிரைவர்களுக்கு அதிரடி உத்தரவு! இனிமேலாச்சும் நிம்மதியா போலாம்!
உலகிலேயே அதிக சாலை விபத்துக்களை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பது வேதனையான விஷயம். கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துக்களால் சுமார் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 474 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி உயிரை பறிகொடுத்துள்ளனர். உலக அளவில் சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ள நிலையில், இந்திய அளவில் பார்த்தால் தமிழ்நாடு (Tamil Nadu) ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களால் 18,074 பேர் உயிரிழந்துள்ளனர்.
மோசமான நிலையில் உள்ள சாலைகள் மற்றும் வாகனங்களில் பழுது ஏற்படுவது போன்றவற்றை இதற்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. அத்துடன் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதும், சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, வேக வரம்பை மீறி அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது மற்றும் செல்போனில் பேசி கொண்டே வாகனங்களை இயக்குவது என வாகன ஓட்டிகளால் மீறப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பட்டியலிட்டால், அந்த பட்டியல் அனுமாரின் வால் போல் நீண்டு கொண்டே செல்லும்.
பொதுமக்கள்தான் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகிறார்கள் என்றால், மறுபக்கம் அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்களும் சில சமயங்களில் தங்கள் இஷ்டம் போல் செயல்படுகின்றனர். இதற்கு சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒரு உதாரணம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பணிமனையை சேர்ந்த டிரைவர் ஒருவர் செல்போனில் பேசியபடி பஸ் ஓட்டி சிக்கியுள்ளார்.

அவரது பெயர் கனகராஜ் என்பதாகும். தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்த சமயத்தில், டிரைவர் கனகராஜ் செல்போனில் பேசியபடியே அரசு பஸ்ஸை ஓட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், பஸ் டிரைவர் கனகராஜ் தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் (Suspend) செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அரசு பஸ் டிரைவர்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தற்போது அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, இனிமேல் செல்போனில் பேசியபடி அரசு பஸ்களை இயக்கும் டிரைவர்கள், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு உத்தரவுதான். ஆனால் முறையாக அமல்படுத்தப்படுமா? என்பதுதான் பெரிய சந்தேகம். கடந்த காலங்களிலும் இது போன்ற உத்தரவுகள் பல முறை பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த உத்தரவுகள் எதையும் போக்குவரத்து கழக அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை.
டிரைவர்கள் தொடர்ந்து செல்போனில் பேசி கொண்டே பஸ் ஓட்டி வரும் காட்சிகளே இதற்கு சாட்சி. ஆனால் முன்பு போல் இல்லாமல், இம்முறை இந்த உத்தரவை முறையாக அமல்படுத்தினால், டிரைவர்கள் செல்போனில் பேசி கொண்டே பஸ் ஓட்டுவது வெகுவாக குறையும். இது நடக்கும்பட்சத்தில், சாலை விபத்து அச்சம் இல்லாமல், பயணிகள் நிம்மதியாக பயணம் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








