1000 ரூபாவ கொடுத்துட்டு எல்லாத்தோட விலையையும் ஏத்திட்டு இருக்காங்க! சரக்கை தொடர்ந்து இவற்றின் விலையும் உயருதா!
தமிழக அரசு சமீபத்தில் டாஸ்மாக்கில் விற்பனைக்குக் கிடைக்கும் மதுபான வகைகளின் விலையை ரூ. 10 முதல் ரூ. 50 வரை உயர்த்தப் போவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக, இந்த தகவல் குடிமகன்களுக்கு பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. அரசு, மகளிருக்கான உதவி தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதத்தில் செயல்படுத்தியது.
இந்த திட்டமே மதுபான வகைகளின் விலையை அரசு உயர்த்த காரணம் என சிலர் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் அரசு மதுபான வகைகளின் விலையை மட்டுமல்ல இன்னும் சிலவற்றின் விலையையும் உயர்த்த இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இதர வாகனங்களின் விலையே தமிழகத்தில் உயர இருக்கின்றன. தமிழக அரசு இதற்கான வழிவகைகளையே தற்போது செய்திருக்கின்றது. புதிய வாகனங்களுக்கான வரியை உயர்த்துவதற்கான சட்ட மசோதாவை சட்டசபையில் நேற்று (அக்டோபர் 11) தமிழக அரசு நிறைவேற்றியது.
ஆகையால், மாநிலத்தில் அனைத்து வகை வாகனங்களின் விலையும் உயர இருக்கின்றது. மாநிலத்தின் வருவாயை உயர்த்தும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. இதே நோக்கிலேயே அரசு மதுபான வகைகளின் விலையை உயர்த்தும் பணியிலும் களமிறங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. சமீபத்தில் கடும் எதிர்ப்புகள் காரணமாக அரசு சுமார் 500 அரசு டாஸ்மாக் கடைகளை மூடி இருந்தது.

இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்டும் முயற்சியாகவும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு வருகின்றன. தற்போது, பைக், கார், ஆட்டோ, சரக்கு வாகனம், வாடகை வாகனம், சுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படும் வாகனம், ஒப்பந்த வாகனம், ஆம்னி பேருந்துகள், பேருந்துகள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் வாகனம் என அனைத்திற்குமான வரியும் உயர்த்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, ஷேர் ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் டிரக்குகளுக்கான வரி சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், சரக்கு மற்றும் பயண செலவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய வாகனங்களின் விலை பல ஆயிரம் ரூபாய் வரை உயர்வதற்கான சூழலையே அரசு தற்போது உருவாக்கி இருக்கின்றது.
இதற்காக தமிழக மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்பு சட்டம், 1974 இல் திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான விலைக் கொண்ட இருசக்கர வாகனத்திற்கு வாழ்நாள் வரியாக செலத்தப்படும் வரியின் சதவீதம் 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. முன்னதாக 8 சதவீதம் மட்டுமே இந்த வகை வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்பட்டு வந்தது.
ஆகையால், முன்பு 9,600 ஆக இருந்த வரி தொகை தற்போது அது ரூ. 14,400ஆக உயர்ந்து உள்ளது. அதேவேளையில், 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலைக் கொண்ட டூ-வீலராக இருப்பின் அதற்கு வாழ்நாள் வரியாக 10 சதவீத தொகையை வாகனத்தின் முழு விலையில் இருந்து வரியாக செலுத்த வேண்டும்.
இதேபோல், கார்களுக்கான வரியும் 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. நீங்கள் வாங்கும் காரின் விலை ரூ. 5 லட்ச ரூபாய்க்கும் குறைவு என்றால் அந்த வாகனத்திற்கு உங்கள் வாகனத்தின் முழு விலையில் இருந்து 12 சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டும் என்று புதிய வரி மசோத தெரிவிக்கின்றது.
இதேபோல், 5 லட்ச ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலைக் கொண்ட கார்களுக்கு 13 சதவீத வரியும், 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரையிலான விலைக் கொண்ட கார்களுக்கு 18 சதவீதமும் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உச்சபட்சமாக 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்ட கார்களுக்கு 20 சதவீதம் வரி விதிப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. முன்னதாக 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான கார்களுக்கு 10 சதவீதம் வரியும், 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலைக் கொண்ட கார்களுக்கு 15 சதவீதம் வரியும் வசூல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவ்வாறு அனைத்து வாகனங்களின் வரியும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, புதிய வாகன உரிமையாளர்கள் தாங்கள் வாங்கி இருக்கும் வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம், பசுமை வரி, இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் பிற சேவை வரிகளைச் செலுத்த வேண்டி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவை அனைத்தும் சேர்ந்தே மலிவு விலை வாகனங்கள் சிலவற்றை காஸ்ட்லியானவையாக மாற்றுகின்றன. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் எஸ்.ராஜ்வேல் கூறுகையில், "மற்ற எந்த மாநிலமும் வரியை உயர்த்தவில்லை. தமிழக அரசின் இந்த வரி உயர்வு நடவடிக்கை மாநிலத்தின் ஆட்டோமொபைல் தொழிலைப் பாதிக்கச் செய்யும்.
ஏற்கனவே வாகனங்களின் எக்ஸ்-ஷோரூம் விலை 40 சதவீதம் உயர்ந்து உள்ளது. இது மேலும் சுமையை அதிகரிக்கச் செய்யும்" என தெரிவித்தார். இத்துடன், இருசக்கர வாகனங்கள் சொகுசு வாகனங்கள் அல்ல, அவை அத்தியாவசிய பொருள் என்பதை அரசு உணர வேண்டும் என்கிற தன்னுடைய கருத்தையும் அவர் முன் வைத்தார்.
புதிதாக பதிவுச் செய்யப்படும் வாகனங்களுக்கு மட்டுமில்லைங்க, வெளி மாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் வாகனங்களும் அதிக வரி செலுத்த வேண்டும் என்கிற சூழலையே புதிய வரி திருத்த மசோதா உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு கூடுதல் பாரத்தை இந்த அரசு வரி என்கிற பெயரில் சுமத்தி இருக்கின்றது.
இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வரியாக ரூ. 6 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆகையால், அரசின் இந்த புதிய வரி திருத்தத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ மற்றும் கால்டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றது. அரசின் இந்த வரி விதிப்பு எப்படியோ கடைசியில் பொதுமக்கள் மத்தியில் பாரமாக வந்து சேர இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசு ரூ. 1000த்தை பெண்களுக்கு உதவியாக வழங்கிவிட்டு பல அவசியமான பொருட்களின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பதாக, பொதுமக்களும், எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். எதுவாக இருந்தாலும், கடைசியில் பாதிக்கப்பட இருப்பவர்கள் என்னமோ நம்மை போன்ற சாதாரண மக்கள்தான். அரசு வாடகை வாகனங்களுக்கான வரியையும், இருசக்கர வாகனங்களுக்கான வரியையும் அதிகரித்திருக்க கூடாது என்பதே பலரின் கோரிக்கையாக இருக்கின்றது.
இருசக்கர வாகனம் கை வசம் இல்லாதவர்கள் ஷேர் ஆட்டோவையே தங்களின் முக்கிய போக்குவரத்து வாகனமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் அவர்களுக்கு வரியை ஏற்றி இருப்பது, அவர்களை அதிக கட்டணம் வசூலிக்க கட்டாயப்படுத்தி இருப்பதாகவே இந்த செயலை நம்மால் பார்க்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








