தமிழகத்தில் கார்/ பைக் விலை தாறுமாறா ஏறப்போகுது! சாலை வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு?
தமிழகத்தில் சாலை வரிகளை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் கார்,பைக் என அனைத்து விதமான வாகனங்களின் விலைகளும் கிடு கிடுவென ஏற வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு சாலை வரியை ஐந்து சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாநில அரசுக்கு அதிக வருவாய் தரும் துறைகளில் போக்குவரத்து துறையும் ஒன்று. தமிழகம் முழுவதும் விற்பனையாகும் வாகனங்களில் குறிப்பிட்ட சதவீதம் சாலை வரியாக மாநில அரசு வசூலிக்கிறது. இந்த வரியுடன் சேர்த்து தான் ஒரு வாகனத்தின் ஆன்-ரோடு விலை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு டூவீலர்களுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு கார்களுக்குமான சாலை வரி உயர்த்தப்பட்டது. அதன் பின்பு அதே சதவீதத்தில் தான் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சாலை வரிகள் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் ரூ5,873 கோடி வருமானமாக தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.
தற்போது தமிழகத்தில் டூவீலர்களுக்கு 8 சதவீதமும் கார்களுக்கு ரூ 10 லட்சத்திற்குள் இருந்தால் 10 சதவீதமும் அதற்கு மேல் இருந்தால் 15 சதவீதமும் சாலை வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த சாலை வரி சதவீதத்தை உயர்த்த தான் தற்போது தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்து 2023ம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை வெளியிடும்போது தமிழக நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் சாலை வரி உயர்வு குறித்து பேசி இருந்தார். தற்போது இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இது குறித்து உயர்மட்ட அளவில் அதிகாரிகள் மத்தியில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதன்படி தற்போது உள்ள சாலை வரியை விட கூடுதலாக 2 முதல் 5 சதவீதம் வரை வரி உயர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது. இது வாகனத்தை பொறுத்து மாறுபடும் என தெரிகிறது. இது குறித்த சற்று விரிவான தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளன.

புதிய வரி உயர்வுக்குப் பிறகு தமிழகத்தில் சாலை வரிகள் டூவீலர்களுக்கு ரூ1 லட்சம் வரை இருந்தால் அதற்கு 10 சதவீதமும், ரூ1 லட்சத்திற்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், சாலை வரியாக வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அப்படி என்றால் தற்போது உள்ள வரியிலிருந்து 2 முதல் 4 சதவீதம் வரை வரி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதே போல கார்களுக்கு ரூ5 லட்சம் வரை ரூ12 சதவீதமும் ரூ5 லட்சம் முதல் ரூ10 லட்சம் வரை 13 சதவீதமும் ரூ10 லட்சம் முதல் ரூ20 லட்சம் வரை 15 சதவீதமும் ரூ20 லட்சத்துக்கு மேல் 20 சதவீதமும் சாலை வரி விதிக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழக அரசு இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை இதுவரை வெளியிடவில்லை. தற்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் இது குறித்த பேச்சுவார்த்தை நிகழ்ந்து வருகிறது. இந்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாலை வரி உயர்வால் தமிழகம் முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டூவீலர்களுக்கு ரூ16 ஆயிரம் வரையிலும் கார்களுக்கு லட்சக்கணக்கிலும் விலை உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. இது வாகனத்தை பொருத்து மாறுபடும். இதனால் தமிழகத்தில் வாகனங்களில் விலை தாறுமாறாக ஏற வாய்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை வரியில் நல்ல வருமானம் தான் கிடைத்து வருகிறது. இது போக வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சுங்க கட்டணம் வேறு செலுத்துகின்றனர். இது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். இந்த சாலை வரியை உயர்த்துவது குறித்து மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும்


Click it and Unblock the Notifications









