இந்தியாவே தமிழகத்தை தான் திரும்பி பார்க்கபோகுது! வேற லெவல் பஸ்கள் ரெடியாகிடுச்சு!
தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களுக்கு தயாரிக்கப்பட்டு வரும் புதிய தாழ்தள பஸ்களை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தயாரிக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்பொழுது இந்த பஸ்களில் பொருத்தப்படும் வசதிகள் குறித்த விரிவான விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். இது குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்காக மொத்தம் 7,682 பஸ்களை வாங்க தற்போது ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு விதமான பயன்பாட்டிற்கு இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட போகிறது. இதில் முதல் கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைக்காக 100 பஸ்கள் ரூபாய் 66.15 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டன.

இந்த பஸ்களை எல்லாம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிலையில் அடுத்த கட்ட பஸ்கள் எல்லாம் தயாராகி வருகின்றன. இந்த பஸ்களுக்கான ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் தான் தற்போது பெற்றுள்ளது. இந்நிறுவனம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் என்ற பகுதியில் நடத்திவரும் ஆலையில் தான் இந்த பஸ்களை தயாரித்து வருகின்றன.
இதில் தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரடியாக ராஜஸ்தானுக்கு சென்று அங்கு அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தமிழக அரசுக்காக தயாரிக்கப்படும் பஸ்களை பார்வையிட்டார். மேலும் இந்த பஸ்களில் பொருத்தப்படும் வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டார்.

அதன்படி தமிழகத்திற்கு புதிதாக வரவுள்ள பஸ்களில் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கான வசதிகள் தானியங்கி கதவுகள், எல்இடி ஸ்க்ரீன், மைக் ஸ்பீக்கர்கள், சொகுசான இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் பஸ்ஸிலிருந்து ஏறி இறங்க இலகுவான சாய்வு தளம், அகலமான ஜன்னல்கள், உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பஸ்களிலும் இது போன்ற அம்சங்கள் எல்லாம் இருந்தது.
இது போக கூடுதலாக சென்சாருடன் கூடிய தீயணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்ஸில் அதிக பயணிகள் பயணிக்க வேண்டும், அதே நேரம் பயணிகளுக்கு போதுமான இடவசதி வேண்டும் என்பதற்காக பஸ் நீளம் 12 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. பஸ் நீளம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ்ஸின் பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ் நீளம் அதிகமாக இருப்பதால் பஸ்க்கு பின்னால் வரும் வாகனங்கள் குறித்து பஸ் டிரைவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் அதை தெரிந்து கொள்வதற்காக பஸ்ஸில் உள்ளேயே டிரைவர் கேபின் பக்கத்தில் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. அதில் ரியர்வியூவில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் காட்சிகள் எப்பொழுதும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சீட்டிற்கும் சீட்பெல்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இதுபோக டிரைவருக்கான தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பஸ் முழுவதும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் கிளட்ச் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை பஸ்ஸின் நிலைமை மற்றும் வேகம் பொறுத்து ஆட்டோமேட்டிக்காக கிர் மாற்றிக் கொள்ளும் வகையில் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வரப்போகும் பஸ்களை தயாரிப்பதை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டதோடு கட்டுமான பணிகளை உரிய நேரத்தில் முடித்து பஸ்களை டெலிவரி செய்யும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். விரைவில் தமிழக முழுவதும் இந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம். தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்கள் எல்லாம் மாற்றி இந்த புதிய பஸ்கள் கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அரசு பஸ்கள் எல்லாம் மிக மோசமாக இருப்பதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பஸ்களை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு முயற்சி செய்து புதிய பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். இதன் மூலம் தமிழகத்தில் இயங்கி வரும் பாடாதி பஸ்கள் எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









