குளித்து கொண்டே ஸ்கூட்டர் ஓட்டிய தமிழக இளைஞருக்கு நேர்ந்த கதி! விளையாட்டா பண்ண போய் இப்படி ஆயிருச்சே! பாவம்யா!
இந்தியாவில் கோடை காலம் (Summer) உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தமிழக தலைநகர் சென்னையில் (Chennai) 40 °C (40 டிகிரி செல்சியஸ்) வெப்பம் எல்லாம் சர்வ சாதாரணமாக பதிவாகி கொண்டுள்ளது.
வெளியில்தான் வெயில் சுட்டெரிக்கிறது என்றால், வீடுகளுக்கு உள்ளேயும் புழுக்கம் தாங்க முடியவில்லை என பலர் புலம்பி கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாக வீடுகளில் பலர் புதிதாக ஏசி (AC) வாங்கி பொருத்தி வருகின்றனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் நிலையில், தமிழக இளைஞர் ஒருவர் வித்தியாசமான காரியம் ஒன்றை செய்துள்ளார்.

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ ஒன்று (Viral Video) அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில் வெள்ளை நிற ஸ்கூட்டர் (Scooter) ஒன்றை இளைஞர் ஒருவர் ஓட்டி செல்வதை நம்மால் காண முடிகிறது. இதன் முன் பகுதியில் பக்கெட் நிறைய தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த இளைஞர் பக்கெட்டில் இருந்து தண்ணீரை எடுத்து குளித்து (Bath) கொண்டே ஸ்கூட்டரை ஓட்டி செல்கிறார். கோடை வெயிலின் தாக்கத்தை எடுத்துக்காட்டுவதற்காக அந்த இளைஞர் இப்படி வித்தியாசமான காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான செயல் என்பதை அவர் உணரவில்லை.
ஏனெனில் அந்த இளைஞர் ஹெல்மெட் (Helmet) அணியவில்லை. மேலும் ஒரு கையில் தண்ணீரை எடுத்து குளித்து கொண்டு, மற்றொரு கையால் மட்டுமே அவர் ஸ்கூட்டரை ஓட்டுகிறார். ஒரு கையால் ஸ்கூட்டரை அலட்சியமாக ஓட்டி செல்வது சில நேரங்களில் அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடலாம்.
இதை எல்லாம் பொருட்படுத்தாமல், மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டே குளித்துள்ளார். இந்த சம்பவம் தஞ்சாவூர் (Thanjavur) பகுதியில் நடைபெற்றுள்ளது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இளைஞர் மீதும், அவருக்கு உதவிய நண்பர் மீதும் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குளித்து கொண்டே ஸ்கூட்டரை ஓட்டிய இளைஞரின் பெயர் அருணாச்சலம் என்பது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது. பிரசன்னா என்பவர் இதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாயை காவல் துறை அதிகாரிகள் தற்போது அபராதமாக (Fine) விதித்துள்ளனர்.
காவல் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இதுபோன்ற நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், மற்றவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை காவல் துறையினர் குறைத்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெயில் உண்மையிலேயே சுட்டெரிக்கிறதுதான். அதற்காக குளித்து கொண்டே ஸ்கூட்டர் ஓட்டுவது சரியான விஷயம் அல்ல. இந்தக்கால இளைஞர்கள் பலர் சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பல்வேறு வித்தியாசமான காரியங்களை செய்கின்றனர். அது நல்ல விஷயமாக இருந்தால், யாருக்குமே பிரச்னையில்லை.
ஆனால் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சாலை விபத்துக்களை (Road Accident) நாம் ஒருபோதும் கணிக்க முடியாது. ஒரு சிறிய தவறு கூட, மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியப்படுத்தாமல், முறையாக பின்பற்றி வாகனம் ஓட்டுவது நல்லது.


Click it and Unblock the Notifications








