நல்ல மனுஷன்யா... தமிழக மக்களின் மனங்களை வென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்... என்ன செய்தார் தெரியுமா?
தமிழக மக்களின் மனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வென்றுள்ளார். சமூக வலை தளங்களின் வாயிலாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய சாலைகள் ஆபத்து நிறைந்தவை. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதே கிடையாது. இதன் விளைவாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இதுதவிர பல லட்சக்கணக்கானோர் படுகாயமடைகின்றனர்.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவது என இந்தியர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்களை அடுக்கி கொண்டே போகலாம். இவைதான் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஒரு பக்கம் போக்குவரத்து விதிமீறல்கள் என்றால், மறுபக்கம் பொதுமக்களின் பயமும் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிரை குடிக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆம், விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு உதவி செய்ய நம்மில் பலர் முன்வருவதில்லை. கோர்ட், கேஸ் என வீணாக அலைய வேண்டியிருக்கும் என்ற பயம் காரணமாகவே பலர் உதவி செய்ய முன் வர மறுக்கின்றனர்.

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஆனால் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்க தவறியதால், பலர் உயிரிழக்கும் சோகமும் இந்தியாவில் நடந்து கொண்டுதான் உள்ளது. இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்ச நீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தவர்களை அலைக்கழிக்க கூடாது, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த கூடாது என்பது போன்ற பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு நீங்கள் உதவி செய்தால், உங்களுக்கு எவ்விதமான பிரச்னையும் ஏற்படாது. சட்ட ரீதியில் உங்களுக்கு அனைத்து பாதுகாப்புகளும் உள்ளன.

எனவே தயங்காமல் உதவி செய்யலாம். ஆனாலும் பலரது மனதில் இன்னமும் ஒரு வித தயக்கம் கலந்த பயம் இருக்கவே செய்கிறது. இது ஒரு புறம் என்றால், மறுபக்கம் ஒரு சிலர் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளாமல், அதனை வீடியோ எடுத்து பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக்கி கொண்டுள்ளனர்.

இத்தகைய நபர்கள் எல்லாம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பாடம் கற்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார். இதன்பின் ஆவுடையார் கோவில் பகுதிக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.

அவர் சென்ற வழியில் சாலை விபத்து ஒன்று நடைபெற்றிருந்தது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு, அந்த இளைஞரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அமைச்சர் மூலம் அந்த இளைஞருக்கு உரிய நேரத்தில் முதலுதவி கிடைத்தது.

இதன்பின் அந்த இளைஞரை சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அனுப்பி வைத்தார். அமைச்சர் விஜயபாஸ்கருடன் வந்த பாதுகாப்பு வாகனத்தில் அந்த இளைஞர் அழைத்து செல்லப்பட்டார். இதன்பின் அறந்தாங்கி தலைமை மருத்துவரை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அந்த இளைஞருக்கு தரமான சிகிச்சையை வழங்கும்படி அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டார். அவசரமாக சென்று கொண்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவி செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தயங்காமல் உதவி செய்ய வேண்டும் என்பதில் அமைச்சர் விஜயபாஸ்கர் தற்போது அனைவருக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார். மேலும் இது தொடர்பான விழிப்புணர்வையும் அவர் டிவிட்டரில் மேற்கொண்டுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் டிவிட்டர் பதிவை நீங்கள் கீழே காணலாம்.

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வருவதை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சாலை விபத்துக்களில் சிக்கிய நபர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மாநில அரசும் கூட இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு, விழிப்புணர்வை மேற்கொள்ளலாம். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் எடுக்க வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றி ஒரு சில சர்ச்சைகள் இருந்தாலும் கூட, அவரது இந்த மனிதநேய செயல் உண்மையில் பாராட்டுக்குரியது.


Click it and Unblock the Notifications