ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து தமிழக அதிகாரி ஒருவர் விளக்கும் வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகளை மத்திய அரசு பல மடங்கு உயர்த்தியதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

ஆனால் இந்தியாவில் வாகன ஓட்டிகள் பலர் இன்னமும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. குடிபோதையிலும், அதிவேகத்திலும், செல்போனில் பேசிக்கொண்டும், தலை கவசம் அணியாமலும் பலர் தொடர்ந்து வாகனங்களை இயக்கி கொண்டுதான் உள்ளனர். சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்வதும் இந்தியாவில் பொதுவான ஒரு போக்குவரத்து விதிமுறை மீறலாக உள்ளது.

இன்றைய அதிநவீன கார்களில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வந்து விட்டன. இதில், சீட் பெல்ட்கள் மிகவும் முக்கியமானவை. கார் விபத்தில் சிக்கும்போது சீட் பெல்ட் அணியாத பயணிகள் பல்வேறு இடங்களில் மோதி படுகாயம் அடைவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. ஆனால் சீட் பெல்ட் அணிந்திருந்தால், அது உங்களை இருக்கையுடன் தாங்கி பிடித்து விடும்.

எனவே கார் தலை கீழாக உருண்டாலும் கூட, உங்கள் உடலில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை சீட் பெல்ட் வெகுவாக குறைத்து விடுகிறது. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பதால், இந்தியாவில் கார்களில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால் ஓட்டுனர் மற்றும் முன் பக்க பயணி ஆகியோர் மட்டும் சீட் பெல்ட் அணிந்தால் போதும் என சிலர் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம். பின் இருக்கை பயணிகள் உள்பட காரில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். ஆனால் பலர் இந்த விதிமுறையை முறையாக பின்பற்றுவதில்லை என்பதுடன், காவல் துறையினரும் இந்த விதியை முறையாக அமல்படுத்துவதில்லை.

நீங்கள் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதை தவிர்ப்பவர் என்றால், உங்களுக்காகவே ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து இந்த வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ள தகவல்கள் பலரையும் கவர்ந்துள்ளதால், சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

குறிப்பாக பின் இருக்கை பயணிகளும் ஏன் சீட் பெல்ட் அணிய வேண்டும்? என்பதை அந்த அதிகாரி இந்த வீடியோவில் விளக்கியுள்ளார். பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால், விபத்தின்போது நடக்கும் அபாயங்களையும் அவர் எடுத்துரைத்துள்ளார். அத்துடன் விபத்தின்போது ஏர்பேக் பயணிகளை காப்பாற்றுவதில், சீட் பெல்ட்டிற்கு இருக்கும் பங்கு குறித்தும் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
தமிழகத்தில் தற்போது எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எக்ஸ்ட்ரா பம்பர்களை பொருத்துவதால் பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் விபத்தின்போது ஏர் பேக்குகள் சரியான நேரத்தில் விரிவடைவதிலும் எக்ஸ்ட்ரா பம்பர் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால் வாகன ஓட்டிகள் பலருக்கு எக்ஸ்ட்ரா பம்பர்களின் அபாயம் என்னவென்று தெரியாமல் இருந்தது. எனினும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிறகு எக்ஸ்ட்ரா பம்பர்களால் ஏற்படும் ஆபத்துக்களை வாகன ஓட்டிகள் உணர்ந்து கொண்டனர். அந்த வகையில் இந்த வீடியோவை பார்த்த பிறகு, கார்களில் பயணிக்கும் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவார்கள் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








