2022 தமிழக பட்ஜெட்: புதியதாக 500 எலக்ட்ரிக் பேருந்துகள்!! 6 வழிச்சாலையாக மாறும் கிழக்கு கடற்கரை சாலை!
தமிழகத்தில் புதியதாக 2000 எலக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக மாநில அரசின் 2022ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விபரங்களையும், ஆட்டோமொபைல் குறித்து 2022 பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மற்ற திட்டங்களையும் பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

தமிழகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று சென்னையில் உள்ள சட்டமன்றத்தில் தொடங்கியது. எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் சபாநாயர் அப்பாவு திருக்குறள் கூறி அவையை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் 2022-2023ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு சட்டசபையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட்டை போல் காகிதமில்லா பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்கும்போது, எம்.எல்.ஏ.க்கள் இருக்கையில் தங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த டேப்லெட்டில் பட்ஜெட் விவரங்களை பார்த்தனர்.

நடப்பு ஆண்டிற்கான இந்த பட்ஜெட்டில் விவசாயம், காவல்துறை, தமிழ் மொழி வளர்ச்சி, பள்ளி கல்வி துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, விளையாட்டு துறை உள்பட பல்வேறு துறைகளுக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், மிக முக்கிய சிறப்பம்சமாக புதியதாக 500 எலக்ட்ரிக் பேருந்துகள் பசுமையான போக்குவரத்தை பேணும் பொருட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காகவும், மற்ற பேருந்துகளை நவீனமயமாக்கலுக்காகவும் சுமார் ரூ.5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்கிற அறிவிப்பு மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றுவருவதாகவும், அரசு பேருந்துகளை பயன்படுத்தும் மகளிரின் எண்ணிக்கை 40%இல் இருந்து 60% அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாலை மேம்பாட்டு பணிகளில், சிங்கார சென்னை என்கிற பெயரில் கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாமல்லபுரத்தில் இருந்து NHAI சாலை 4-பாதைகளை கொண்டதாக அகலப்படுத்தப்பட உள்ளது. மொத்தமாக சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

மீஞ்சூர் முதல் வண்டலூர் வரையிலான 62கிமீ நீளம் கொண்ட வெளிவட்ட சாலை(ORR)-இன் கிழக்கு பகுதி 50 மீட்டர் அகலப்படுத்தப்பட உள்ளது. தரைப்பாலங்களை உயர்மட்ட மேம்பாலங்களாக மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு நகரும் தகவல்தொடர்பு மையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன.

முதற்கட்டமாக இந்த நகரும் தகவல்தொடர்பு மையங்கள் புலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகம் உள்ள திருப்பூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிப்புரம் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் மாநிலம் முழுவதும் புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக 2022 பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய எலக்ட்ரிக் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாகவும் வழிவகுக்கும் என கருதப்படுகிறது.

தீயணைப்பு துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மெட்ரோல் ரெயில், புறநகர் ரெயில், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகள் உள்ளிட்டவற்றின் சில வழித்தடங்களில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், அருகில் உள்ள பகுதிகளில் தற்போதுள்ள ஃப்ளோ ஸ்பேஸ் குறியீடு (FSI)ஐ உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 2021 ஆகஸ்ட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல தாராளமான அறிவிப்புகளுடன் 2021-22 ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை வெளியிட்டு இருந்தார். இதில் பெட்ரோலின் வரி விகிதத்தை லிட்டருக்கு ரூ.3 குறைப்பது என்பது முக்கிய அம்சமாக இடம் பெற்றிருந்தது. மேலும், இந்த முடிவால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications








