தமிழ்நாட்டிற்கு 4வது இடம் தான் கிடைச்சுது! ரோடு ஃபுல்லா இவி சார்ஜர்களை கொண்டுவந்தா மட்டும் தான் நிலைமை மாறும்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) அதிக எண்ணிக்கையில் ஆர்டிஓ (RTO)-இல் பதிவு செய்யப்பட்ட மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh) தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உத்தரப் பிரதேசத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் (3-wheelers) என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா (Maharashtra) உள்ளது. இந்த மாநிலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' (The Times Of India) வெளியிட்ட சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, மகாராஷ்டிராவில் தற்போது இயங்கும் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களில், 80% இருசக்கர வாகனங்கள் ஆகும். 10 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களில் தலைநகர் மும்பையில் 74,268 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 31,261 எலெக்ட்ரிக் கார்களும், 36,323 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களும் அடங்கும். மும்பையில் தார்டியோ (Tardeo) பகுதியில் அதிகபட்சமாக 10,618 எலெக்ட்ரிக் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வடாலா (Wadala) பகுதியில் அதிக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் (10,041) பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவிற்கு அடுத்து, கர்நாடகாவில் சுமார் 6 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களும், தேசிய தலைநகர் டெல்லியில் 5 லட்சம் மற்றும் குஜராத்தில் 3 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களும் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டு இந்த பட்டியலில் டாப்-6 இடத்திற்குள் இடம்பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025ஆம் நிதியாண்டில் மட்டும் இந்த மாநிலத்தில் 2.46 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மொத்த எலெக்ட்ரிக் வாகன சந்தையில் 12.5% பங்கை மகாராஷ்டிரா பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த வளர்ச்சி அந்த மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.
எலெக்ட்ரிக் வாகன விற்பனையை மேலும் துரிதப்படுத்த, மஹாராஷ்டிரா அரசு 'எலெக்ட்ரிக் வாகனக் கொள்கை 2025-2030'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கைக்காக ரூ.1,993 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பதில் அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்தக் கொள்கையின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும், வாங்கும் மக்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இது இல்லாமல், மும்பை-புனே விரைவுச்சாலை, சம்ருத்தி மகாமார்க், அடல் சேது போன்ற முக்கிய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்து முழு விலக்கு தொடர்கிறது. அதேசமயம், உயர்தர பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கான வரிகள் ரூ.10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹாராஷ்டிராவின் தொலைநோக்கு திட்டம், 2030ஆம் ஆண்டுக்குள் புதியதாகப் பதிவு செய்யப்படும் அனைத்து வாகனங்களில் 30% எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என்பதாகும். மஹாராஷ்டிரா மட்டுமன்றி, நம் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் 2030க்குள் சாலையில் இயங்கும் வாகனங்களில் 30%-ஐ எலெக்ட்ரிக் ஆக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% சாலை வரியை 2027ஆம் ஆண்டு இறுதி வரையில் நீட்டித்தது மட்டுமின்றி, மகாராஷ்டிராவை போல் மாநிலம் முழுவதும் ஃபாஸ்ட் இவி சார்ஜிங் (Fast EV Charging) வசதியை கொண்டு வருகிறது.
Source: The Times Of India


Click it and Unblock the Notifications








