இந்தியாவுக்கே முன்னுதாரணமா தமிழ்நாடு அறிவித்த திட்டம்! எலக்ட்ரிக் பஸ் கம்பெனிகளில் யாருக்கு கிடைக்க போகுதோ...!
2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamil Nadu Budget) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 என பல அசத்தலான திட்டங்களை கொண்டிருக்கும் 2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், ஆன்லைன் சார் தொழிலில் ஈடுப்படுவோருக்கு வாகனங்களை வாங்குவதற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்ய பயன்படும் குறைக்கடத்திகளை உருவாக்குவதற்கு ஆலை அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
மேலும், வாகன உற்பத்தி உள்பட தொழில் வளர்ச்சியை மேம்படுத்த மாநிலம் முழுவதும் 9 புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தியா முழுவதும் சிஎன்ஜி (CNG) எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசாங்கம் உள்பட பல மாநில அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் தனது பங்கிற்கு ஓர் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

மாநிலத்தில் இயங்கும் 700 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி மூலமாக இயங்கக்கூடிய பேருந்துகளாக மாற்றுவதற்கு ரூ.70 கோடி நிதி தமிழ்நாடு பட்ஜெட்டில் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதைவிட அசத்தலான அறிவிப்பாக, மாநிலத்தின் முக்கியமான மாநகரங்களில் சுமார் 1,125 எலக்ட்ரிக் பேருந்துகள் (Electric Buses) பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. இதில் பெரும்பாலான எலக்ட்ரிக் பேருந்துகள் தலைநகர் சென்னைக்கு தான் ஒதுக்கிடப்பட்டு உள்ளன.
மொத்த 1,125 எலக்ட்ரிக் பேருந்துகளில் சென்னையில் 950 எலக்ட்ரிக் பேருந்துகளும், மதுரையில் 100 மற்றும் கோயம்புத்தூரில் 75 எலக்ட்ரிக் பேருந்துகளும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. எந்த நிறுவனத்தில் இருந்து இந்த எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன என்கிற விபரம் தற்போதைக்கு கிடைக்கப் பெறவில்லை. 1,125 என்பது அதிக எண்ணிக்கை என்பதால் பல நிறுவனங்களில் இருந்தும் பெறப்படலாம்.

இந்தியாவில் தற்சமயம் பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் பேருந்துகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. அவற்றுள் முக்கியமானவை, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், ஒலெக்ட்ரா க்ரீன்டெக், பிஒய்டி, ஜேபிஎம் ஆட்டோ உள்ளிட்டவை ஆகும். இதில் அசோக் லேலண்டிற்கு சென்னைக்கு அருகே எண்ணூரிலும், ஓசூரிலும் தொழிற்சாலைகள் உள்ளதினாலேயே கடந்த காலங்களில் இருந்து தமிழ்நாடு அரசுக்கும், அசோக் லேலண்ட் நிர்வாகத்திற்கும் தொடர்பு உள்ளது.
சீன நிறுவனமான பிஒய்டி-க்கு இந்தியாவில் தொழிற்சாலைகள் இல்லை. ஆனால், சிறிய அசெம்பிளி தொழிற்சாலை ஒன்று தமிழ்நாட்டில் திருவள்ளூரில் உள்ளது. அதாவது, வாகனங்களை வெளிநாட்டில் இருந்து பாகங்களாக இந்தியா கொண்டுவந்து, திருவள்ளூரில் உள்ள ஆலையில் வைத்து முழு வாகனமாக உருவாக்கி விற்பனை செய்கிறது. எலக்ட்ரிக் பேருந்துகளை உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் செயல்படும் ஓலெக்ட்ரா நிறுவனத்துடன் பிஒய்டி கூட்டணியில் உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கும் கர்நாடகாவில் தொழிற்சாலை உள்ளது. ஆக, முக்கியமான எலக்ட்ரிக் பேருந்து உற்பத்தி நிறுவனங்கள் எல்லாமே தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிற்கு அருகேயும் தான் செயல்படுகின்றன. இதில், எந்த நிறுவனத்தில் இருந்து தமிழ்நாடு அரசு 1,125 எலக்ட்ரிக் பேருந்துகளை ஆர்டர் கொடுத்து வாங்க உள்ளது என்பதுதான் கேள்வியே.
இந்த முன்னணி எலக்ட்ரிக் பேருந்து உற்பத்தி நிறுவனங்கள் இல்லாமல், டெக்கான் ஆட்டோ, ஈச்சர்ஸ் மோட்டார், சோலாரிஸ் பஸ் & கோச், சோங்டாங் பஸ் & ஹோல்டிங், அசோக் லேலண்ட்டின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி, பி.எம்.ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் எலக்ட்ரிக் பேருந்துகளை உற்பத்தி செய்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பசுமையான போக்குவரத்தை பெற விரும்பினால் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்வதுதான் தற்போதைக்கு ஒரே வழியாக தெரிவதினாலேயே, மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கடந்த பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது, 2025-26 மாநில பட்ஜெட்டில் சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசும் அதே எண்ணத்தில் இருப்பது மீண்டும் உறுதியாகிறது.


Click it and Unblock the Notifications









