பஸ், மெட்ரோ, எலெக்ட்ரிக் ரயில் எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் போதுமா? இது செம ஐடியாவா இருக்குதே!
சென்னை மாநகரில் மெட்ரோ , மாநகர பேருந்து, புறநகர் ரயில்களுக்கு ஒரே டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளூர் போக்குவரத்து வசதி என்பது மிகவும் முக்கியம். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ, பஸ் என அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்துகின்றனர்.

தற்போது சென்னை மெட்ரோவை பொருத்தவரை விம்கோ நகரிலிருந்து அண்ணா நகர் வழியாகச் சென்னை விமான நிலையம் வரையிலும், சென்னை சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் என மொத்தம் 2 வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வருகிறது. மேலும் இதை விரிவுப்படுத்தம் பணியும் நடந்து வருகிறது.
தற்போது மெட்ரோ ஸ்டஷன் அருகே அலுவலகத்தைக் கொண்ட ஒருவருக்கு வீட்டின் அருகே மெட்ரோ ஸ்டேஷன் இல்லை என்றால் அவர் வீட்டிலிருந்த பஸ் மூலம் அருகில் உள்ள மெட்ரோ ஸ்டேஷனிற்கு வந்து, அங்கிருந்து அலுவலகத்திற்கு மெட்ரோவில் செல்கிறார். அதனால் அவர் பஸ்சில் தனி டிக்கெட், மெட்ரோவிற்கு தனி டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இதே போலச் சென்னையில் எலெக்ட்ரிக் ரயில் வசதியும் இருக்கிறது. சென்னை செங்கல்பட்டு முதல் பீச் வரையிலும், சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரையிலும், சென்னை பார்க் முதல் வேளச்சேரி வரையிலும் எலெக்ட்ரிக் ரயில் சேவை இருக்கிறது இதையும் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பயணிக்கவும் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாநகர போக்குவரத்து அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், புறநகர் எலெக்ட்ரிக் ரயில்வே அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் இந்த 3 போக்குவரத்து வசதிகளுக்கும் ஒரே முறையிலான டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் முறை குறித்துப் பேசவிருக்கின்றனர்.
இதன் படி ஒரு கார்டில் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொண்டால் அதை மாநகர பேருந்து, மெட்ரோ, புறநகர ரயில் பயணம் என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பயணம் எளிதாக அமையும். மேலும் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி டிக்கெட் என மக்கள் சிரமமும் குறையும், அந்தந்த நிறுவனங்களின் சிரமமும் குறையும் என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுக்க அரசு முன் வந்துள்ளது.
இப்படியான திட்டம் ஒன்று புதிதல்ல பல வெளிநாடுகளில் இப்படியா பஸ் மற்றும் மெட்ரோ ரயில்களுக்கு ஒரே டிக்கெட் முறை இருக்கிறது. இதைத் தமிழகத்திலும் கொண்டு வர அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு மாநகர பேருந்து, மெட்ரோ நிர்வாகம், எலெக்ட்ரிக் ரயில் நிர்வாகம் ஆகிய நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் இன்னும் சில நாட்களில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications








