சொல்ல சொல்ல கேட்காமல் சுரங்கபாதையில் தேங்கிய மழை தண்ணீரில் இறங்கிய அரசு பஸ்! வைரலாகும் வீடியோ!
பொதுமக்கள் எச்சரிக்கையை மீறியும் அரசு பஸ் கொண்டு ரயில்வே சுரங்கப்பாதை வழியாக சென்று மழை தண்ணீரில் சிக்கிக் கொண்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த பஸ்ஸில் இருந்த பயணிகளை தீயணைப்பு படையினர் தான் வந்து மீட்டுள்ளார்கள். பஸ் ஏன் சுரங்கப்பாதையில் சிக்கியது? என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. கோடை மழை அதிகமாக பெய்து வருவதால் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் தேங்கிய தண்ணீரில் வாகனத்தை எடுத்து சென்று வருகின்றார்கள். இது ஒரு ஆபத்தான விஷயம் தான்.

இப்படியாக திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் என்ற பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தமிழக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பஸ் வள்ளியூர் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. ரயில்வே சுரங்கப்பாதையில் மழை பெய்ததால் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது.
அப்பொழுது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதில் இருக்கும் அபாயத்தை கருத்தில் கொண்டு அப்kகுதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி தண்ணீருக்குள் செல்ல வேண்டாம் என திருப்பி அனுப்பி வைத்தார்கள். இந்த அரசு பஸ் வரும் போதும் பொதுநல ஆர்வலர் ஒருவர் பஸ்ஸை நிறுத்தி டிரைவரிடம் அதிக தண்ணீர் தேங்கி இருப்பதால் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

ஆனால் அதையும் மீறி அரசு பஸ் டிரைவர் பஸ்சை தண்ணீரில் எடுத்துச் சென்றார். பஸ் தண்ணீருக்குள் செல்வதற்கு முன்பே அங்கிருந்த பொதுமக்கள் ஒருவர் சுமார் நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்பதாகவும், அதனால் பஸ்சை எடுத்துச் செல்ல வேண்டாம், இது ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார். இருந்தாலும் அரசு பஸ் டிரைவர் அதை பொருட்படுத்தாமல் தண்ணீரில் பஸ்ஸை எடுத்துச் சென்றார்.
பஸ் சரியாக தண்ணீர் தேங்கி இருக்கும் மத்திய பகுதிக்கு செல்லும்போது நகர முடியாமல் நின்று விட்டது. தண்ணீர் அதிக அளவு இருந்ததால் பஸ்ஸை அங்கிருந்து எடுத்துச் செல்ல முடியவில்லை. இதனால் இருந்த பயணிகள் அனைவரும் தத்தளித்தனர். அவர்கள் பஸ்ஸை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையும் இருந்தது. அவர்கள் வெளியே வந்தால் அவர்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் இருந்தது.

இதையடுத்து பஸ் சுரங்கப்பாதை தண்ணீரில் சிக்கிக் கொண்டதை உணர்ந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தில் பஸ்ஸில் சிக்கிக்கொண்ட பயணிகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார்கள். பஸ் தண்ணீருக்குள் செல்லும் முன்பு பொதுமக்கள் பஸ் டிரைவரை எச்சரித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மழைக்காலங்களில் இப்படியாக சாலைகள் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி இருந்தால் அது எவ்வளவு உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருப்பது என்பதை நம்மால் எளிதாக பார்க்க முடியாது. பார்க்கும்போது கொஞ்சம் தண்ணீர் இருப்பதாக தான் தெரியும். ஆனால் உள்ளே இறங்கும்போதுதான் அதிக ஆழம் என்பது நமக்கு புரிய வரும். இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் வாகனங்களை இறக்க கூடாது.
குறிப்பிட்ட இந்த பஸ் டிரைவர் தண்ணீர் இருக்கும் அளவை கண்ணாலேயே பார்த்து தவறாக புரிந்து கொண்டு சிறிய வாகனங்கள் சென்றால் தான் சிக்கும் பஸ் பெரியதாக இருப்பதால் பெரிய அளவில் சிக்காது என நினைத்திருப்பார். அதனால் தான் துணிந்து பஸ்ஸை பயணிகள் இருக்கும்போதே தண்ணீரில் இறக்கி உள்ளார். ஆனால் உள்ளே இறங்கிய பின்பு தான் அவர் அதிக ஆழத்தில் தண்ணீர் இருப்பது பற்றி தெரிந்திருப்பார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீங்கள் வாகனங்களில் மழை நேரங்களில் பயணிக்கும் போது தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதியில் குறைவாக தான் தண்ணீர் இருக்கும் என நினைத்து தண்ணீரில் இறக்கி விடாதீர்கள். இது பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் தண்ணீருக்கு நடுவே சிக்கி விட்டால் பின்பு வாகனத்தால் செயல்பட முடியாமல் போய்விடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









