தமிழகத்தில் நூதன முறையில் பஸ் டிக்கெட் விலையை உயர்த்த ஏற்பாடு!
தமிழகத்தில் பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்காக தனி ஆணையம் அமைக்க தற்போது அரசுக்கு போக்குவரத்து கழக வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் இயங்கும் பஸ்களுக்கான செலவுகளை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து கழகங்கள் பெரும் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் தற்போது எட்டு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பஸ்களும், மாவட்டத்திற்கு உள்ளேயே சிறுசிறு கிராமங்களை இணைக்கும் வகையிலாக செயல்படும் பஸ்களும் இதில் உள்ளடக்கம். இந்த பஸ்கள் தான் தமிழக மக்களின் போக்குவரத்து வசதிக்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருக்கிறது.

தமிழக முழுவதும் தற்போது 20,300 அரசு பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சராசரியாக ஒரு நாளுக்கு 1.76 கோடி பேர் பயணம் செய்து வருகிறார்கள். இந்த பஸ்களை இயக்குவதற்காக தமிழக அரசு தினம் தோறும் 17 லட்சம் லிட்டர் அளவிலான டீசலை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறது. இவ்வளவு இருந்தும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறது.
கடந்த 2023-24ம் தேதி ஆண்டில் மட்டும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூபாய் 6317 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இதனால் போக்குவரத்து கழகங்கள் அரசு தரப்பிலிருந்து நிதி பெற்றே கழகத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திற்கு டிக்கெட் விலை குறைவாக இருப்பது மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.

தமிழக அரசு பஸ்களின் டிக்கெட் விலையை விட அண்டை மாநிலங்களில் உள்ள அரசு பஸ்களில் உள்ள டிக்கெட் விலை ஒரு கிலோமீட்டருக்கு 8 முதல் 10 காசுகள் வரை அதிகமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் அவ்வப்போது டீசல் விலையில் ஏற்பட்டு வரும் மாற்றம் மற்றும் சுங்க கட்டண வசூல் ஆகியவற்றையும் கணக்கு செய்ய வேண்டியது இருக்கிறது. இவை எல்லாம் செலவு செய்தால் தான் பஸ் போக்குவரத்தை நடைமுறைப்படுத்த முடியும்.
இந்நிலையில் பஸ்ஸில் வரும் வருமானத்திற்கு ஏற்ப செலவு தொகை அதிகமாகி வருவதால், தற்போது வருமானத்தை அதிகரிக்க பஸ்ஸின் டிக்கெட் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இயங்கும் பஸ் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்துவது குறித்த முடிவை எடுக்க தனி ஆணையம் அமைக்க தற்போது போக்குவரத்து கழக அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.
இந்த ஆணையம் அமைக்கப்படும் பட்சத்தில் இந்த ஆணையம் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படுவதற்கான செலவீனங்களை கணக்கிடுவார்கள். உதாரணமாக டீசல் செலவு பஸ்களுக்கான பராமரிப்பு செலவு உதிரி பாகங்களின் விலை டிரைவர் மற்றும் நடத்துவதற்கான சம்பளம் ஆகியவற்றை கணக்கிட்டு அந்த பஸ் செயல்படுவதற்கான செலவை கணக்கிட்டு டிக்கெட் விலையை நிர்ணயம் செய்வார்கள்.
இப்படியாக டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் போது தற்போது இருக்கும் டிக்கெட் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு போக்குவரத்து கழகங்கள் மூலம் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தை குறைக்கவோ அல்லது லாபமாக மாறவும் கூட வாய்ப்புள்ளது.
தமிழக அரசு பஸ் டிக்கெட் விலை அதிகரித்தால் இது கணிசமாக அனைத்து பொருட்களின் மீதும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பஸ் டிக்கெட் விலை என்பது ஒரு அடிப்படையான விலையாக இருப்பதால் பலர் அதைப் பொறுத்து தங்கள் பொருட்களின் விலையை அதிகரித்தால் நாடு முழுவதும் விலைவாசி அதிகமாகிவிடும் என்பது மற்றொரு கருத்தாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு பஸ்களை இயக்குவதில் மிக அதிக செலவை பராமரிப்பு பணியில் தான் செய்ய வேண்டியது இருக்கிறது. தமிழக அரசு பஸ்கள் அதிகமாக பராமரிக்கப்படுவதில்லை, தனியார் பஸ்கள் அளவுக்கு அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இதை செய்தாலே போக்குவரத்துக்கான செலவு குறையும் வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








