தமிழக அரசே உருவாக்கப்போகும் புதிய ஆப்; ஓலா உபேர் எல்லாம் தலையில துண்ட போட்டுட்டு போக வேண்டியது தான்!
ஓலா, உபேருக்கு போட்டியாக தமிழக அரசே புதிய செயலியை வெளியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா அரசு ஏற்கனவே இப்படியான ஒரு செய்தியை வெளியிட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நடிகர் ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் வரும் ஒரு பாடலில் "கைத்தட்டுனா ஆட்டோ வரும்னு சொல்லுவாங்க" என்ற வரி இடம் பிடித்திருக்கும். அந்த காலகட்டத்தில் எல்லாம் ரோட்டில் செல்லும்போது ஆட்டோக்களை கைத்தட்டி தான் கூப்பிடுவோம். மக்களின் இந்த பழக்கத்தை வைத்து பாடலில் இப்படியான வரி இடம்பெற்றது.

இப்படி கைதட்டி ஆட்டோ கூப்பிட்ட காலம் போய் இன்று செல்போன் செயலியில் ஆட்டோவை அழைக்கும் காலம் வந்துவிட்டது. பயணத்திற்காக ஒருவர் ஒரு இடத்தில் இருந்தபடியே தங்கள் செல்போனை தட்டினால் அருகில் இருக்கும் ஆட்டோ அல்லது கார் அவர் இருக்கும் இடத்திற்கே வந்து அவரை பிக்கப் செய்து செல்லும் இடம் வரை சென்று டிராப் செய்யும் வசதி வந்துவிட்டது.
இப்படியான சேவையை தனியார் நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் முக்கியமான நகரங்களில் வழங்கி வருகிறது. குறிப்பாக ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை செய்து வருவதால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கார் ஓட்டுநர்கள் தங்களை இந்த நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டனர்.

இது போக தற்போது பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகளும் வந்துவிட்டது. ஆப் மூலம் இயக்கப்படும் ஆட்டோ கார் போன்ற சேவைகளுக்கு வாடிக்கையாளர் தரும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை தனியார் நிறுவனங்கள் சேவை கட்டணமாக கழித்துக் கொண்டு பாக்கித்தொகையை கார், ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்குகிறது.
இந்நிலையில் சமீப காலமாக ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களில் ஆட்டோ மற்றும் கார்களை இணைத்து இயக்கும் வருகின்றனர். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் மிக அதிகமான பணத்தை தனியார் நிறுவனங்கள் சேவை கட்டினமாக வசூலிப்பதாகவும் இதனால் தங்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை எனவும் கூறி வருகின்றனர்.

இந்தப் புலம்பல் ஆட்டோ, கார்களில் செல்லும் பயணிகள் பலருக்கும் தெரியும் பயணிகளிடம் அழுது புலம்பும் நிலைக்கு டிரைவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனையை சீர் செய்ய கர்நாடக மாநிலத்தில் முதன்முறையாக ஆட்டோ, கார் டிரைவர்கள் சங்கம் சார்பில் மாநில அரசு பிரத்தியேகமாக ஆப் ஒன்றை வடிவமைத்து கொடுத்தது.
அதில் பயணிகளுக்கும் குறைவான கட்டணம் வசூலித்து அதே நேரம் சேவை கட்டணமாகவும் குறைந்த கட்டணம் வசூலிப்பதால் ஆட்டோ டிரைவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில் இதே போன்ற ஒரு திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழக அரசு விரைவில் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக அரசே ஆப் ஒன்றை வடிவமைத்து அதை அறிமுகப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது மட்டுமல்ல ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கான மற்றொரு இனிப்பாக செய்தியையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழக அரசு ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கான மீட்டர் கட்டணத்தை தற்போது உள்ள பெட்ரோல், டீசல் விலை வாசியை பொறுத்து மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது உள்ள கட்டணத்தை விட அதிகமான கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
இப்படியாக புதுப்பிக்கப்பட்ட கட்டணத்துடன் தான் புதிதாக அறிமுகம் செய்யப்படும் செல்போன் செயலி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை விட குறைவான கட்டணத்தில் இந்த அரசு அறிமுகப்படுத்தும் ஆப் மூலம் பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனியார் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த ஆப் மூலம் இயங்கும் ஆட்டோ மற்றும் கார்கள் பிரிவில் தற்போது அரசும் களமிறங்கியுள்ளது. இது மார்கெட்டில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்களுக்கும் ஆட்டோ, ஓட்டுனர்களுக்கும் அதே நேரம் அரசுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









