கடந்த ஆண்டு 1.83 லட்சம் பேர் சாலை விபத்தில் பலி... தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்... அதிர்ச்சி தகவல்
கடந்த 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1.83 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும் 59 சாலை விபத்துக்கள் நடப்பதாகவும், 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்." 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 5.13 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 1.83 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 507 பேர் உயிரிந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போதும் இந்த எண்ணிக்கை கவலைக்குரியது," என்று அவர் குறிப்பிட்டார்.

சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்
மேலும், சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாநிலாக இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 71,387 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. அதேபோன்று, நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரசேத மாநிலத்தில் 27,550 பேர் சாலை விபத்துக்களில் உயிரந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல், அதிக வாகன பயன்பாடு மற்றும் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக அதிகாரிகள் கருதுகின்றனர். அதே நேரத்தில், உயிரிழப்புகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முன்னணியில் உள்ளது.
அலட்சியத்தால் விபரீதம்
இந்தியாவில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அதிவேகமாக வாகனங்களை ஓட்டுதல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாதது, அவசர கதியில் ஓவர்டேக் செய்வது, கவனக்குறைவு மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது போன்றவை தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன. இருசக்கர வாகன பயணிகள் மற்றும் பாதசாரிகளே அதிகளவில் பாதிக்கப்படும் பிரிவாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இருசக்கர வாகனங்கள்தான் அதிக அளவில் சாலை விபத்துக்களில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை
இந்த நிலையை மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விபத்துகள் அதிகம் நடைபெறும் 'Black Spot' பகுதிகளை கண்டறிந்து சீரமைத்தல், தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்துதல், மேம்பட்ட சாலை வடிவமைப்பு, கடுமையான போக்குவரத்து அமலாக்கம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் அவசர மருத்துவ உதவி அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அதேபோல், வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகளிலும் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பான ஓட்டுநர் பழக்கத்தை உருவாக்குவதன் மூலமே விபத்துகளை குறைக்க முடியும் என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
கடந்த ஆண்டு மட்டும் 1.83 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியிருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்லது. சாலை பாதுகாப்பில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதை காட்டுகிறது. அரசின் நடவடிக்கைகள் முக்கியமானவை என்றாலும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதும், பொறுப்புடன் வாகனம் ஓட்டுவதும் ஒவ்வொரு வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கடமையாகவே கடைபிடித்தால் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications