தமிழக அரசுக்கு வருஷத்துக்கு இவ்வளவு கோடி நஷ்டமா? வெளி மாநில பதிவெண் கொண்ட பஸ்களுக்கு ஆப்பு!
வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்கள் (Omni Bus) எல்லாம் வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்குள் தமிழக பதிவில் கொண்ட பஸ்களாக மாற்ற வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிடப்பட்டுள்ளது.நீண்ட நாட்களாக இருந்தவந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ்கள் பல வெளிமாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு (Other State Registraion omni Bus) அங்கிருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் டிக்கெட் வசூல் செய்யும் ஆம்னி பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் எல்லாம் முற்றிலும் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக அரசுக்கு பல தரப்பிலிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பஸ்கள் தமிழகத்திற்கு வரும்போது சுற்றுலா பஸ்களாக வரி செலுத்தி விட்டு பின்னர் தமிழகத்திற்கு உள்ளேயே டிக்கெட் வசூலித்து ஆம்னி பஸ்களாக ஸ்டேஜ் கேரேஜ் (Stage Carriage)முறையில் இயக்கி வருகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் விழா காலங்கள், விடுமுறை காலங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 27, அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் ஆம்னி பஸ் சங்கம் மற்றும் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழகத்திற்குள் இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பிரச்சனை, தமிழக அரசுக்கு வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இயங்கி வரும் மொத்தமுள்ள 17,825 ஆம்னி பஸ்களில் 2,502 ஆம்னி பஸ்கள் விதிமுறைகள் மீறப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆம்னி பஸ்களுக்கு எல்லாம் ரூபாய் 72,53,830 அபராதமாக விதிக்கப்பட்டது. இதில் 39,92,518 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆயுத பூஜை பண்டிகை காலத்தை ஒட்டி தமிழகத்தில் 125 ஆம்னி பஸ்கள் முடக்கம் செய்யப்பட்டன.
இது அப்பொழுது பெரும் பிரச்சனையாக வெடித்தது. இப்படி முடக்கம் செய்யப்பட்ட 125 ஆம்னி பஸ்களில் 65 ஆம்னி பஸ் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னிபஸ்கள் ஆகும். மொத்தம் இயங்கி வரும் பஸ்களில் 652 பஸ்கள் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டிற்குள் சுற்றுலா பஸ்கள் என்ற பதிவு செய்யப்பட்டு கொண்டுவரப்பட்ட பஸ்கள் இங்கு ஸ்டேஜ் கேரியராக மாறி முழுவதும் தமிழகத்திற்கு உள்ளேயே சேவை வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிமாநிலத்தில் உள்ள பஸ்கள் தமிழகத்திற்குள் வரும் போது சுற்றுலா பஸ்களாக வரி செலுத்தி வரவேண்டும். இந்த பஸ்கள் சுற்றுலா சேவையை மட்டுமே வழங்க முடியும். ஒவ்வொரு தனி நபருக்கும் டிக்கெட் வசூலித்து ஸ்டேஜ்கேரேஜ் போல சேவை வழங்க அனுமதியில்லை. ஸ்டேஜ் கேரேஜ் போல சேவை வழங்க வேண்டும் என்றால் அந்த பஸ் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு அதற்கான வரி செலுத்தப்பட்ட பின்னர் தான் டிக்கெட் வழங்கும் சேவையை வழங்க முடியும்.
தமிழகத்தில் ஸ்டேஜ்கேரேஜ் முறையில் பஸ்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கினால் ஒரு பஸ்க்கு ஒரு காலாண்டுக்கு ரூ1,08,000 விதம் ஒரு ஆண்டிற்கு ரூ4.32லட்சம் என்ற வகையில் ஒரு பஸ் மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தமிழகத்தில் தற்போது இயக்கி வரும் 652 பஸ்கள் மூலம் ஆண்டுக்கு ரூ28.16கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் மீண்டும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படும் பஸ்கள் முறைகேடாக இயங்கி வந்தால் அந்த பஸ்களை தமிழக பதிவிற்க்கு மாற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்குள் தமிழகத்தில் இயக்கப்படும் வெளிமாநில பஸ்களின் பதிவு எண்களை எல்லாம் தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அதன்படி வரும் டிசம்பர் 16-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட பஸ்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென உத்தரவிட்டுள்ளனர். தற்போது அந்த 652 பஸ்களை இயக்கி வரும் உரிமையாளர்கள் வெளிமாநிலத்திற்கு சென்று அங்கு இந்த பஸ்ஸின் பதிவெண்ணை நீக்கி தடையில்லா சான்று பெற்று மீண்டும் அந்த பஸ்களை தமிழக ஆர்டிஓ விற்கு கொண்டு வந்து இங்கு அந்த பஸிற்கான வரியை செலுத்தி பதிவெண் பெற வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் சட்ட விதிமுறைகளை மீறி சுற்றுலா அனுமதி பெற்று ஸ்டேஜ் கேரேஜ் முறையில் இயங்கி வருவதால் அரசுக்கு மட்டுமல்ல அதில் பயணிக்கும் பயணிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த பஸ் விபத்தில் சிக்கினால் அந்த விபத்திற்கான இன்சூரன்ஸ் பணம் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருக்கிறது. இதை உணர்ந்து கொண்டு பஸ் உரிமையாளர்கள் உடனடியாக முறையான பதிவெண் பெற வேண்டும்


Click it and Unblock the Notifications








