சுங்கச்சாவடிகளை பயன்படுத்துவதா வேண்டாமா... தமிழ்நாட்டு வாகன ஓட்டிகளின் தலையில் இடி இறக்கிய மத்திய அரசு!
சுங்கச்சாவடிகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தலையில் இடி இறக்கியது போல் ஓர் அதிரடி அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. அது என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணத்தை உயர்த்துவதாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 38 சுங்கச்சாவடிகளில் இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
எந்தவொரு நாடும் பொருளாதார வளர்ச்சி அடைய சிறப்பான மற்றும் தரமான நெடுஞ்சாலைகளை கொண்டிருப்பது அவசியமாகும். ஏனெனில், கப்பல்கள் மூலமாக கொண்டுவரப்படும் டன் கணக்கிலான பொருட்களை நாட்டின் உட்பகுதிகளுக்கு கொண்டு சென்று வணிகத்தை பெருக்க அந்த பகுதிகளுக்கு சாலை வசதியும், அவை நல்ல நிலையிலும் இருக்க வேண்டி உள்ளது.

இதனை நன்கு உணர்ந்து வைத்துள்ள மத்திய அரசு அதன் காரணமாகவே நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. இவ்வாறு சாலைகளை அமைப்பதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. இதற்கு மக்களின் வரிகள் மூலமாக மத்திய அரசாங்கத்திற்கு பணம் கிடைக்கிறது என்றாலும், சுங்கச்சாவடி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
அவ்வாறு வசூலிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணத்தை தான் தற்போது குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் (NHAI) அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் இந்த 2025ஆம் ஆண்டில் மத்திய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கொண்டுவந்துள்ள 2வது விலை உயர்வு இதுவாகும். தமிழ்நாட்டில் மொத்தம் 89 சுங்கச்சாவடிகள் உள்ளன.

இதில் 82 சுங்கச்சாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளிலும், 7 சுங்கச்சாவடிகள் மாநில நெடுஞ்சாலைகளிலும் செயல்படுகின்றன. ஆனால், இந்த 89 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பவை 78 மட்டுமே ஆகும். இந்த 78 சுங்கச்சாவடிகளில் பாதி எண்ணிக்கையிலான சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கட்டணம் உயர்வு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீதி 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சுங்கச்சாவடிகள் மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம், ஓமலூர், மேட்டுக்குடி மற்றும் சென்னை- புதுச்சேரி நெடுஞ்சாலை அமைந்துள்ள மோர்டண்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன. செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வின்படி சுங்கச்சாவடி கட்டணங்கள் ரூ.5இல் இருந்து ரூ.45 வரையில் அதிகரிகப்பட்டு உள்ளன.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டின் மற்ற சுங்கச்சாவடிகளில் ரூ.25 முதல் ரூ.40 வரையில் கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டு இருந்தது. ரூ.5- ரூ.45 கட்டண உயர்வானது ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணங்களில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டண உயர்வாகும். அதுவே, அந்த சுங்கச்சாவடி வழியாக திரும்பி வர வசூலிக்கப்படும் கட்டணங்களில் ரூ.10இல் இருந்து ரூ.65 வரையில் கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக, கார், வேன், ஜீப் போன்ற எடை குறைவான 4-சக்கர வாகனங்களில் ஒருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.85இல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.125இல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோன்று, ஒவ்வொரு வருடமும் இவ்வாறு இரு கட்டங்களாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு அரசியல் எதிர்கட்சிகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், நாடு முழுவதும் தரமான நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் அமைக்க இவ்வாறான கட்டண உயர்வுகளை கொண்டுவர வேண்டியதாக உள்ளது. குறிப்பாக, நம் மத்திய அரசு விரைவுச்சாலைகள் விஷயத்தில் முனைப்புடன் உள்ளது. மேற்கூறப்பட்ட புள்ளி விபரங்கள் அனைத்தையும் லைவ் சென்னை (Live Chennai) இணையத்தள பக்கத்தில் இருந்து பெற்றோம்.


Click it and Unblock the Notifications









