வெயிலில் நிறுத்தியதால் உருகிய கார் பாகங்கள்! அந்த நிறுவனமா இவ்ளோ மோசமா தயாரிச்சிருக்கு! மக்கள் கழுவி ஊத்தறாங்க
இந்தியாவில் கோடை காலம் (Summer) தொடங்கி விட்டது. வெப்பம் (Heat) சுட்டெரிப்பதால், மக்கள் தாங்க முடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மட்டுமின்றி, வாகனங்களுக்கும் (Vehicles) இந்த கோடை காலம் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது. ஆம், இதற்கு முன் நாம் யாரும் கேள்விபட்டிராத ஒரு சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் (Bangalore), குளிர்ச்சியான சீதோஷண நிலைக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் பல்வேறு நகரங்களை காட்டிலும், இங்கு வெப்பம் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் நடப்பாண்டு கோடை காலத்தில், பெங்களூர் நகரிலேயே மக்களை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.

இங்கு சூரிய வெளிச்சத்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு காரின், க்ரில் மற்றும் பம்பர் ஆகியவை கடும் வெப்பத்தால் உருகிய சம்பவம், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக டாடா கார்களை (Tata Cars) வைத்திருப்பவர்கள் இந்த சம்பவத்தால் கவலை அடைந்துள்ளனர். ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான கார்களில் ஒன்றான ஹாரியர் (Tata Harrier), கார்தான் கடும் வெயிலால் இந்த பிரச்னைக்கு ஆளாகியுள்ளது.
சௌரவ் நகாடா என்பவர் ட்விட்டர் (Twitter) மூலம் இந்த தகவலை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். அவரது பதிவின் சாராம்சம் பின்வருமாறு: 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து டாடா ஹாரியர் காரை ஓட்டி வருகிறேன். நல்ல ரிவியூ-க்களை படித்த காரணத்தால்தான், டாடா ஹாரியர் காரை வாங்கினேன். ஆன்லைனில் இந்த காரின் கட்டுமான தரம் தொடர்பாக நான் கண்ட சிறப்பான ரிவியூக்களும் இந்த காரை நான் வாங்க காரணமாக அமைந்தன.
ஆனால் கடந்த ஏப்ரல் 12ம் தேதியன்று, பெங்களூர் நகரில், சுமார் 10 மணி நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்த எனது டாடா ஹாரியர் காருக்கு என்ன ஆனது? என்பதை நீங்களே பாருங்கள் (டாடா ஹாரியர் காரின் உருகிய பம்பர் மற்றும் க்ரில் அமைப்பின் பேனல்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்).
இதை சரி செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தினர் கட்டணம் செலுத்த வேண்டும் என என்னிடம் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''இதுபோன்ற சம்பவங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எளிதாக எடுத்து கொள்வது ஆச்சரியம் அளிக்கிறது.
அதே இடத்தில், அதே சூரிய வெளிச்சத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களில் எல்லாம் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார். மிகவும் விசித்திரமான இந்த சம்பவம், சமூக வலை தளங்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பிரச்னையை விரைவில் சரி செய்யும் என எதிர்பார்க்கலாம்.
அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஹாரியர் காரை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி, கடுமையான சூரிய வெப்பத்தால்தான் பாகங்கள் உருகியதா? அல்லது இதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பதையும் கண்டறிந்து, கூடிய விரைவில் அறிக்கை வெளியிடும் எனவும் நாம் நம்பலாம். கடும் வெப்பத்தால் பாகங்கள் உருகியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டாடா ஹாரியர் காரானது, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தற்போது நேரம் சரியில்லை என்றுதான் எண்ண தோன்றுகிறது. ஏனெனில் வெகு சமீபத்தில்தான், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) தீப்பற்றி எரிந்திருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், டாடா ஹாரியர் காரின் பாகங்கள் வெயிலால் உருகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








