டாடா நானோ கார் இதுனால தான் ஃபெயிலியர் ஆச்சா? மம்தா பானர்ஜிக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்!
டாடா நானோ காருக்கான ஆலை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மேற்குவங்க அரசு டாடா நிறுவனத்திற்கு ரூபாய் 766 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலேயே குறைந்த விலை காரை தயாரிக்கப் போவதாக முடிவு செய்தது. டாடா நிறுவனம் டாடா நானோ என்ற காரை வடிவமைத்து இந்த காரை ரூபாய் ஒரு லட்சம் என்ற மதிப்பில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர வேண்டும் என திட்டமிட்டு இருந்தது. இதற்காக முதலில் மேற்கு வங்க மாநிலத்தில் அதற்கான பிரத்தியேக ஆலை அமைக்க முடிவு செய்தது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசின் நிறுவனமான மேற்கு வங்க தொழிற்சாலை டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு மேற்கு வங்கத்தில் சிங்கூர் என்ற பகுதியில் டாடா நிறுவனம் தனது தயாரிப்பு ஆலையை நிறுவ முடிவு செய்தது. இதற்காக ரூபாய் ஆயிரம் கோடி வரை முதலீடு செய்திருந்தது. இந்நிலையில் இந்த ஆலையை அமைக்க விடாமல் அப்பொழுது திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.
இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் அமைக்கப்படவிருந்த ஆலை டாடா நிறுவனத்தால் மாற்றப்பட்டு குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதிக்கு மாற்றப்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்பொழுது மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இருந்தது.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு 34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சியை மாற்றிவிட்டு அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்று மம்தா பானர்ஜி முதலமைச்சரானார் இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்த ஆலை அமைப்பதற்காக சுமார் 1000 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களை நம் மாநில அரசு அப்போது கையகப்படுத்தி இருந்தது.
அதற்கு எதிராக தான் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தி சட்டப் போராட்டங்கள் மூலம் டாடா ஆலை மேற்கு வங்க மாநிலத்திற்கு வருவதை தடுத்தார். இந்நிலையில் முந்தைய கம்யூனிஸ்ட் அரசு 1000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு ஒப்படைத்திருந்த நிலையில் அதை நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து டாடா நிறுவனத்திடமிருந்து மேற்குவங்க அரசு திரும்ப பெற்றது. மேலும் அந்த நிலத்தை உரிய விவசாயிகளிடமே மேற்குவங்க அரசு ஒப்படைத்தது.

இப்படியாக தங்களுக்கு ஆலையமைக்க நிலம் வழங்குவதாக ஒப்புதல் அளித்து பின்னர் அதை திருப்பி வாங்கியதால் டாடாவிற்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என டாடா கடந்த 2016-ம் ஆண்டு நடுவர்மன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்படி இது குறித்த விசாரணையும் நடுவர்மன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 7ஆண்டுகள் வரை இந்த வழக்கு குறித்து விசாரணை நடந்து வந்தது. மூன்று நடுவர்கள் கொண்ட மன்றம் இந்த வழக்கை விசாரித்தது.
தற்போது அந்த மூன்று நடுவர் கொண்ட மன்றம் இந்த விசாரணையில் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அதன்படி மேற்கு வங்க அரசு ஆலை வரவிடாமல் செய்தால் டாடா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் டாடா நிறுவனத்திற்கு மேற்கு வங்க தொழிற்சாலை டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரூபாய் 765.78 கோடியை நஷ்ட ஈடாக வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆண்டுக்கு 11 சதவீதம் என வட்டி கணக்கிடப்பட்டு வட்டி மற்றும் நஷ்டஈடு தொகை என கூட்டாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நடத்திய டாடா நிறுவனத்திற்கு வழக்கை நடத்துவதற்கான செலவாக ரூபாய் ஒரு கோடி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
டாடா நிறுவனம் குஜராத் மாநிலத்திற்கு சென்று அங்கு ஆனந்த் பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு டாடா நானோ கார்களை தயாரிக்க ஆலை அமைத்திருந்தாலும் தற்போது அந்த ஆலை செயல்பாட்டில் இல்லை. டாடா நிறுவனம் அந்த ஆலையை விற்பனை செய்வதற்காக மூடி வைத்துள்ளது. அங்கு கார்கள் எதுவும் தற்போது தயாரிக்கப்படவில்லை. டாடா நானோ கார் விற்பனையிலிருந்து கடந்த 2020ம் ஆண்டே நிறுத்தப்பட்டு விட்டது.
டாடா நிறுவனம் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறி குஜராத் மாநிலத்திற்கு சென்ற செய்தி அப்பொழுது ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக இருக்கும் மம்தா பானர்ஜி இதற்கு சிபிஎம் கட்சி தான் காரணம் என பேசினார். ஆனால் சிபிஎம் கட்சி தரப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் தான் டாடா நிறுவனம் வெளியேறியதற்கான காரணம் என கூறினார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு வாகன தயாரிப்பு ஆலை என்பது அந்தப் பகுதிக்கு மிகப்பெரிய பொருளாதாரத்தை ஏற்றத்தை கொண்டு வரக்கூடிய தொழிற்சாலை ஆகும். ஒரு இடத்தில் தொழிற்சாலை அமைந்தால் அந்த இடத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் தொழில் வளம் பெறுகும். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதன் மூலம் மேற்கு வங்கத்திலிருந்து அந்த தொழிற்சாலை தற்போது குஜராத்திற்கு சென்று விட்டது.


Click it and Unblock the Notifications









