தாஜ் ஹோட்டலுக்கே டஃப் கொடுக்கும் போலையே.. டாடா இண்டிகாவை ஹோட்டலாக மாற்றி நல்லா கல்லா கட்டும் ரெஸ்டாரன்ட் ஓனர்!
நம்மில் பலர் காரைக் கொண்டு உணவகம், ஹோட்டல் போன்றவற்றிற்கு சென்றிருப்பீர்கள். ஆனால், இங்கு காரே உணவகமாக மாறிய அதிசய சம்பவமே அரங்கேறியிருக்கின்றது. இதனை உங்களால் நம்ப முடியவில்லை, நீங்க நம்பிதான் ஆக வேண்டும். இந்தியர் ஒருவரே கார்களை உணவங்களாக மாற்றி அசத்தி இருக்கின்றார். மேலும், அவற்றிற்கு மேப்பிள் பாட் (Maple Pods) என்கிற பெயரையும் அவர் சூட்டி இருக்கின்றார்.
இந்த உணவகங்களில் அமர்ந்து வெறும் உணவு மட்டுமல்ல உங்களால் பொழுதையும் போக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்காக, டிவி அதற்குள் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில், டிவி சீரிஸ், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் திரைப்படங்களை உங்களால் காண முடியும். இதுபோன்று இன்னும் ஏராளமான அம்சங்களையே மேப்பில் பாடில் வழங்கி இருக்கின்றனர். வாருங்கள் இதுகுறித்த இன்னும் பல விரிவான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் விற்பனைக்குக் கிடைத்த மிக சிறப்பான கார் மாடல்களில் இன்டிகா-வும் ஒன்றாகும். இந்தியாவில் ஒரு டைமில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை இந்த கார் மாடல் பெற்று வந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இப்போது இந்த கார் விற்பனையில் இல்லை. அதேவேளையில், பெரிய அளவில் பயன்பாட்டிலும் இல்லை.
இந்த நிலையிலேயே டாடாவின் இந்த தயாரிப்பை இந்தியாவைச் சேர்ந்தவர் மினி ரெஸ்டாரண்ட் (உணவகம்)-ஆக மாற்றி அசத்தி இருக்கின்றார். அவரின் இந்த செயல் அக்காருக்கு பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. பெரும்பாலும் பழைய கார்களை எடைக்கு போட்டு அதை ஸ்கிராப் செய்யவே விரும்புவார்கள்.

அதாவது, மறு சுழற்சி செய்வார்கள். ஆனால், மும்பையைச் சேர்ந்த இளைஞர் அக்காரை உணவகமாக மாற்றி அதற்கு மறு வாழ்வு அளித்திருக்கின்றார். இதனால், உணவகம் செல்ல காரில் பயணித்த காலம் மாறி தற்போது காரிலேயே உணவகம் என்கிற நிலை வந்திருக்கின்றது. இந்த பிசினஸை நான்கு முக்கிய நகரங்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கின்றார், இந்த ரெஸ்டாரண்டின் உரிமையாளர்.
மும்பை, புனே, குர்கான் மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளிலேயே இந்த மேப்பில் பாட் ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகின்றது. மும்பையின் அந்தேரி பகுதியில் மிட்ரோன் கஃபே எனும் பெயரில் அது இயங்கி வருகின்றது. காரை கஃபேவாக மாற்றுவதற்காக பல்வேறு வேலைகளை அதில் செய்திருக்கின்றனர்.

குறிப்பாக, காரில் இருந்த காருக்கு தேவைப்படும் முக்கிய கருவிகள் அனைத்தும் அகற்றப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, ஸ்டியரிங் வீல், எஞ்ஜின் மற்றும் கியர் லிவர் என அனைத்தையும் அவர்கள் அகற்றி இருக்கின்றனர். நகராமல் ஒரே இடத்தில் இருப்பதற்கு இந்த அம்சங்கள் எதுவும் தேவைப்படாது.
இதன் காரணத்தினாலேயே அவர்கள் அனைத்து கருவிகளையும் அகற்றி இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து, கார்களின் நான்கு கதவுகளும் அகற்றப்பட்டு, இரண்டு இரண்டாக இருந்தவற்றை தற்போது ஒன்று ஒன்றாக மாற்றி இருக்கின்றனர். இதுதவிர, இரண்டு பேர் மட்டுமே பின்னால் அமர்ந்து பயணிக்கின்ற வகையில் இருக்கைகளை அவர்கள் சேர்த்திருக்கின்றனர்.

ஆகையால், ஜோடிகள் தனிமையில் மிக சிறந்த விருந்து அனுபவத்தை பெற்றுக் கொள்ள ஏதுவான ஸ்பாட்டாக இது காட்சியளிக்கின்றது. உணவு உண்பதற்காக ஸ்லைடிங் வகை டேபிள் காருக்குள் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடனேயே சிறிய டிவியும் அந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அந்த காரின் முன் பக்க விண்ட்ஷீல்டை முழுமையாக மறைக்கும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
எனவே தடையில்லாமல் அதை கெஸ்ட்டுகளால் பார்க்க முடியும். இத்துடன், காரின் தரை பகுதியில் லைட் கன்ட்ரோல் ஸ்விட்சுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், மெனு கார்டு மற்றும் சர்வரை அழைக்கும் பட்டன் ஆகியவையும் அந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மிக முக்கியமான அம்சமான ஏசி வசதியும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோன்று மிக சிறந்த வசதிகள் இந்த காரில் இருக்கின்ற காரணத்தினாலேயே அதில் உணவருந்துவதும் சற்றே காஸ்ட்லியாக இருக்கின்றது. பேக்கேஜ் திட்டங்கள் இதற்கு வழங்கப்படுகின்றன. 1-3 மணி நேர பேக்கேஜை உங்களால் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான கட்டணம் ரூ. 3 தொடங்கி ரூ. 6 ஆயிரமாக உள்ளது. அதேவேளையில், இன்டிகா ஓர் குட்டியான கார் மாடல் என்பதால் இதில் சௌகரியமாக அமர்ந்து உணவை என்ஜாய் பண்ண முடியும் என்பது சந்தேகமே.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமில்லைங்க உலக நாடுகள் சிலவற்றிலும் இதுபோன்று வாகனங்களை மாற்றி அமைத்து தனித்துவமான பயன்பாட்டிற்கு உட்படுத்தும் நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. அந்தவகையில், சமீபத்தில் விமானத்தையே ஒருவர் லக்சூரி வில்லாவாக மாற்றி பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல் இந்தியாவிலும் ரயில்கள், பழைய பேருந்துகள் வீடுகள், உணவகங்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









