இந்த லிங்கை கிளிக் பண்ணீடாதீங்க! டாடா பஞ்ச் கார் இலவசமாக கிடைக்கும் என போலியாக பரவும் லிங்க்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 15வது ஆண்டு விழாவிற்காக டாடா பஞ்ச் காரை இலவசமாக வழங்கவுள்ளதாக போலியாக லிங்க் ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது முற்றிலும் போலியானது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் சைபர் கிரைம் அளவு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. மக்களின் பணத்தையும் மற்ற தகவல்களையும் சில தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி திருடர்கள் திருடி வருகின்றனர். இப்படியாக சமீபத்தில் மக்களின் ஏராளமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட பல தகவல்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இப்படியாக சமீபத்தில் வாட்ஸ் அப்பில் ஒரு லிங்க் ஒன்று வைரலாக பரவி வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 15 வது ஆண்டு விழாவை கொண்டாட இருப்பதாகவும் அதற்காக டாடா பஞ்ச் காரை பரிசாக வழங்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக சில கேள்விகள் கேட்கப்படுகிறது.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் பரிசு பெட்டிகள் வருகிறது. அதில் முதல் பரிசு பெட்டியில் எதுவும் இல்லை. இரண்டாவதாக கிளிக் செய்யப்படும் பரிசு பெட்டியில் டாடா பஞ்ச் கார் பரிசாக விழுந்ததாக அறிவிக்கப்படுகிறது. அதை பெறுவதற்கு இந்த லிங்கை 5 வாட்ஸ் அப் குழுக்கள் அல்லது 20 நபர்களுக்கு அனுப்பும் படி தகவல் வருகிறது.

இந்த லிங்க் வேகமாக பரவி வருகிறது. பலர் இதை கிளிக் செய்து அதில் கேள்விகளுக்கு பதிலளித்து அந்த லிங்கை மற்றவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் ஃபார்வேர்டு செய்து தங்களுக்கு டாடா பஞ்ச் கார் பரிசாக கிடைத்துவிட்டதாக தவறுதலாக நினைத்து வருகின்றனர். சில நாட்களாக இது நடந்து வருகிறது.
ஆனால் இது முற்றிலும் போலியானது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1945ம் ஆண்டே துவங்கப்பட்டுவிட்டது. இது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்படியான விஷயங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்தால் அது குறித்துடாடா மோட்டார்ஸ் இணைதளத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் இப்படியாக எந்த பதிவுகளும் இலலை.
இது முற்றிலும் போலியான லிங்க், இதை கிளிக் செய்தால் உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த லிங்க் மூலம் உங்கள் வங்கி கணக்கும் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் வாட்ஸ் அப்பில் பரவும் இந்த லிங்க்களை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் டாடா பஞ்ச் கார் பரிசாக எல்லாம் கிடைக்காது.
டாடா பஞ்ச் காரை பொருத்தவரை மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது. இந்த காரை மக்கள் பலர் விரும்பி வாங்கி வருவதால் இந்த காரை பரிசாக வழங்குவதாக இந்த போலி லிங்கை பரப்பியவர்கள் பதிவு செய்துள்ளனர். இது போன்று அவ்வப்போது போலியான லிங்குகள் பரவும் அதில் இதுவும் ஒன்று தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போன்ற போலியான லிங்க்கள் மூலம் தகவல் திருட்டு, செல்போன் ஹேக்கிங், வங்கி கணக்கு ஹேக்கிங் போன்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இதனால் மக்கள் உஷாராக இருக்கவேண்டும். இது போன்ற லிங்குகளை கிளிக் செய்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. இது குறித்து அரசாங்கமும் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதை பரவ விடாமல் தடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








