1 லட்சம் லாரிகள் தேவைனு ஆசை வார்த்தை கூறினாங்களே... இந்திய கம்பெனிகள் வளர கூடாதுனு ஒரு முடிவோட தான் இருக்காங்க
இந்தோனேஷியா அரசாங்கம் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனங்களிடம் இருந்து சிறிய ரக லாரிகள் (Lorries) வாங்க திட்டமிட்டு இருந்த செய்தியை உங்களில் பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதுவும் ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள்.
மேட்-இன்-இந்தியா வாகனங்களின் தரத்தை உலக நாடுகளுக்கு இதன் மூலம் நிரூபிக்க முடியும் என்கிற அளவிற்கு கூறப்பட்ட இந்த விஷயத்தில் தற்போது எதிர்மறையான சூழல் நிலவுகிறது. இந்தோனேஷியா நாட்டின் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்திய நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவற்றிடம் இருந்து சுமார் 105,000 லாரிகள் இறக்குமதி செய்வதை அந்நாட்டு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

4x4 மற்றும் ஆறு சக்கர லாரிகள் அடங்கிய இந்த வாகனங்களின் இறக்குமதியை நிறுத்தி வைக்கும் முடிவு, இந்தோனேஷியா அரசு மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெறும் வரை தொடரும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெர்ரி ஜூலியன்டோனோ தனது சமீபத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியா நாட்டின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ-வின் முக்கிய திட்டமான நாடு முழுவதும் 80,000-க்கும் மேற்பட்ட சமூக கூட்டுறவு சங்கங்களை நிறுவும் முயற்சியில் இந்த லாரிகள் பயன்படுத்தப்படவிருந்தன. கிராமப்புறங்களில் அடிப்படைப் பொருட்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் மானிய விலையில் உரங்கள் போன்றவற்றை வழங்குவதற்கான மையங்களாக இந்தக் கூட்டுறவுகள் செயல்படும் என்று கருதப்படுகிறது.

இதற்காக இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக்கொண்டதன் பெயரில் மஹிந்திரா நிறுவனம், இந்த ஆண்டு 35,000 ஸ்கார்பியோ பிக்-அப் (Scorpio Pick-up) வாகனங்களை வழங்குவதாக இந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து, டாடா மோட்டார்ஸின் இந்தோனேசிய பிரிவு, சுமார் 35,000 யோதா (Yodha) பிக்-அப் டிரக்குகள் மற்றும் 35,000 அல்ட்ரா டி.7 (Ultra T.7) லாரிகளுக்கான ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், இது இந்தோனேசியாவிற்கான தங்களது மிகப்பெரிய ஆர்டர் என்றும் தெரிவித்திருந்தது.
ஆக, மொத்தம் 105,000 வாகனங்களுக்கான இந்த ஒப்பந்தம், இரண்டு இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கும் ஒரு பெரிய ஏற்றுமதி ஆர்டராக அமைந்திருக்கும். ஆனால், உள்நாட்டு இந்தோனேசிய நிறுவனங்களின் எதிர்ப்பால் இந்த பெரும் ஆர்டருக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. "சர்ச்சையைத் தவிர்ப்பதற்கான சரியான நடவடிக்கை இந்த தற்காலிக நிறுத்தம்" என்று அமைச்சர் ஜூலியன்டோனோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து இந்த இறக்குமதி திட்டம் ஜகார்த்தாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், டொயோட்டா (Toyota) போன்ற பெரிய இந்தோனேசிய உற்பத்தி தளங்களைக் கொண்ட பிற வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூட கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார சந்தையான இந்தோனேசியாவில் மீண்டும் பெறுவதற்கு போராடி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை போன்று உள்நாட்டு தொழில்மயமாக்கலையும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் ஊக்குவிக்கும் இந்தோனேசிய அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு இந்த இறக்குமதி திட்டம் சற்று முரணாக இருப்பது உண்மையே. அதுமட்டுமின்றி, நாட்டின் வாகனச் சந்தை தற்போது அழுத்தத்தில் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.
இந்தோனேசியாவின் வாகனத் தொழில் ஆண்டுக்கு சுமார் ஒரு மில்லியன் பிக்கப் டிரக்குகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. டொயோட்டா, சுஸுகி மோட்டார் (Suzuki Motor) மற்றும் மிட்சுபிஷி மோட்டார்ஸ் (Mitsubishi Motors) போன்ற வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்தோனேசிய நாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளன.
சுமார் 70,000 பிக்கப் லாரிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டால், இந்தோனேசிய பொருளாதாரத்திற்கு சுமார் 27 டிரில்லியன் ரூபியா (தோராயமாக ரூ.146.30 கோடி) நன்மைகளையும், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று தற்போது அந்நாட்டு அரசு கருதுகிறது. ஆதலால், மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுடான இந்த ஆர்டர் ரத்து செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
Source: Tempo


Click it and Unblock the Notifications








