டாடா லோகோ ஏன் ப்ளூ கலர்ல இருக்கு தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா!
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors), அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு (Ford) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்கள், உலக கார் சந்தையில் மிகவும் முக்கியமான இடத்தை வகித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் லோகோக்களை (Logos) நன்றாக கவனித்தால், ஒரு ஒற்றுமை இருப்பது உங்களுக்கு தெரியவரும்.
நீல நிறம்தான் (Blue Colour) அந்த ஒற்றுமை. ஆம், டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்களின் லோகோக்களில் நீல நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கும். கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, ஃபேஸ்புக் (Facebook) போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றின் லோகோவும் நீல நிறத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் ஏன் நீல நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்து வந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. உலகின் முன்னணி நிறுவனங்களின் லோகோக்கள் ஏன் பெரும்பாலும் நீல நிறத்தில் உள்ளன? என்ற கேள்விக்கான விடையை இந்த செய்தியில் வழங்கியுள்ளோம்.
ஒவ்வொரு நிறத்திற்கும் மனிதர்களின் மனது வெவ்வேறு வகையில் வினையாற்றும் என்பது அறிவியல் ஆராய்ச்சிகளில் ஏற்கனே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு நிறமும், ஒவ்வொரு வகையான உணர்வை மனிதர்களின் மனதில் ஏற்படுத்தும். நாம் இங்கே உதாரணத்திற்கு சிகப்பு நிறத்தை எடுத்து கொள்ளலாம்.

சிகப்பு நிறமானது, போர், ரத்தம், கோபம் மற்றும் வன்முறை போன்றவற்றை அடையாளப்படுத்துகிறது. சிகப்பு நிறம் என்றாலே, இவை எல்லாம்தான் நம் நினைவிற்கு வரும். எனவே சிகப்பு நிறத்தை பார்ப்பவர்களின் மனதில் ஒரு வித பயம் தோன்றுகிறது. மறுபக்கம் நீல நிறமானது, அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கிறது.
நீல நிறத்தை பார்ப்பவர்களின் ரத்த அழுத்தம் குறைவது ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே நீல நிறத்தை பார்ப்பவர்கள், பாதுகாப்பான மற்றும் சௌகரியமான உணர்வை பெறுகிறார்கள். முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்கள் லோகோக்களில் நீல நிறத்தை பயன்படுத்துவதற்கு இதுவே முக்கியமான காரணம்.
பாதுகாப்பான உணர்வு வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு வணிகம் வெற்றி பெற வேண்டுமென்றால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியம். எனவேதான் உலகின் முன்னணி நிறுவனங்கள் நீல நிறத்திற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் நீல நிற லோகோக்களுக்கு பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது.
ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், உலக மக்கள் பலரின் விருப்பமான நிறமாக நீலம் இருப்பதுதான் அந்த காரணம். ட்யூலக்ஸ் (Dulux) பெயிண்ட் (Paint) நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 42 சதவீத ஆண்களும், 30 சதவீத பெண்களும் நீல நிறம்தான் தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளனர் என்பது இங்கே நினைவுகூறதக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய காரணத்தால்தான், பெரும்பாலான விமானங்களின் இருக்கைகள் (Airplane Seats) நீல நிறத்தில் இருக்கின்றன. இது விமானத்தில் பறக்கும்போது பயணிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவதற்காக, முன்னணி நிறுவனங்கள் பலவும் நீல நிறத்தை உபயோகிக்கின்றன.


Click it and Unblock the Notifications