ரூ.4.39 லட்சம் கோடியாக உயர்ந்த டாடா மோட்டார்ஸ் வருவாய்... தூக்கி நிறுத்தியதில் மோகனூர் சந்திரசேகரனின் பங்கு!!
நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்த என்.சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 20ந் தேதியுடன் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவரது இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் என எண்ணற்ற நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சந்திரசேகரனின் முடிவு நேற்று பங்கு சந்தை வரை எதிரொலித்தது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் பெற்றுள்ள வளர்ச்சியில் சந்திரசேகரனின் பங்கும் மிக முக்கியமானதாக இருந்துள்ளது.

சவால்களை கடந்து சாதனை
கடந்த தசாப்தத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை பல்வேறு சவால்களை சந்தித்து வந்தது. ஆனால், சந்திரசேகரனின் வருகைக்கு பின்னர் டாடா மோட்டார்ஸ் கார் தயாரிப்பு புத்துயிர் பெற்றது. 2017ம் ஆண்டு பதவிக்கு வந்த முதல் ஆண்டு அறிக்கையிலேயே, டாடா மோட்டார்ஸ் மறுசீரமைப்பு குறித்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.
டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரிகளாக இருக்கும் சைலேஷ் சந்திரா, வர்த்தக வாகனப் பிரிவு தலைவர் கிரிஷ் வாக் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் திட்டங்களை ஆதரித்து நிர்வாகக் குழுவின் முடிவுகளை வலுப்படுத்தினார். ஆண்டுக்கு ரூ.20,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரையிலான முதலீடுகளுக்கும் ஒப்புதல் அளித்தார். தனது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

புதிய உத்வேகம்
இதனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி பிரிவு புதிய கார் மாடல்களை உருவாக்குவதிலும், வர்த்தகத்தை விரிவாக்குதிலும் உத்வேகம் பெற்றது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவதற்கு ஏற்ப தனித்தனி பிரிவுகளாக மாற்றி அதற்கு முதலீட்டு ஆதரவையும சந்திரசேகரன் வழங்கினார்.
இவர்களின் தலைமையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான், ஹாரியர், பன்ச், கர்வ், ஹாரியர் எலெக்ட்ரிக் உள்ளிட்ட ஏராளமான புதிய மாடல்களை களமிறக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்த புதிய மாடல்கள் மிகவும் வெற்றிகரமான மாடல்களாக மாறி இருப்பதுடன், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமைக்கும் உயர்த்தி உள்ளது.

ஜாகுவார் லேண்ட்ரோவர் வளர்ச்சி
மேலும், ஜாகுவார் லேண்ட்ரோவர் சொகுசு கார் நிறுவனங்களின் Reimagine என்ற திட்டம் மூலமாக மின்சார வாகன உருவாக்கம் மற்றும் பிரிமீயம் கார் தயாரிப்புகளுக்கு குறிப்பிடத்தக்க முதலீடுகளையும், செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கினார். இதனால், அந்த நிறுவனமும் உலக அரங்கில் முக்கிய போட்டியாளராக தன்னை மாற்றிக் கொள்ள முடிந்தது.
தவிரவும், தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பனப்பாக்கம் பகுதியில் புதிய கார் ஆலை அமைப்பதற்கும் முக்கிய ஆதரவை வழங்கினார். இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த ஆலையின் துவக்க விழாவில் அவர் நேரில் கலந்து கொண்டு ஆலையில் கார் உற்பத்திப் பணிகள் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து துவங்கி வைத்தார்.
கணிசமாக உயர்ந்த வருவாய்
கடந்த 2016-17 நிதி ஆண்டு காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் என்பது ரூ.2,74,492 கோடியாக இருந்த நிலையில், கடந்த 2024-25 நிதி ஆண்டு காலத்தில் (அதாவது, வணிக வாகனப் பிரிவு தனியாக பிரிப்பதற்கு முந்தைய கடைசி முழு ஆண்டு) வருவாய் ரூ.4,39,695 கோடியாக உயர்ந்தது. அதாவது, முதல் எட்டு ஆண்டுகளில் வருவாய் 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.
வரும் 2031 நிதி ஆண்டு காலத்தில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு ஆண்டுக்கு 12 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளது. இதற்கு ஏற்ப பல புதிய மாடல்களும், சிறப்பான வர்த்தகக் கொள்கையுடன் முன்னெடுக்கும் முனைப்பில் டாடா மோட்டார்ஸ் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு பெருமை
இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியில் தனது ஆதரவு மற்றும் தொலைநோக்கு திட்டங்களால் முக்கிய பங்களிப்பை வழங்கிய என்.சந்திரசேகரன் 1963ம் ஆண்டு தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தவர். அரசுப் பள்ளியில் படித்து பின்னர் கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கழத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும், திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் எம்சிஏ முதுகலை பட்டம் பயின்றவர்.
1987ம் ஆண்டு டாடா சன்ஸ் குழுமத்தின் அங்கமான டிசிஎஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அந்நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளில் 30 ஆண்டுகள் பதவி வகித்தார். டாடா நிறுவனத்தின் மிகவும் நம்பகமான ஊழியராக இருந்ததால், டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பில் அமர்ந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications
