அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
உலகில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்க கூடிய வாகனங்கள் அதிகளவில் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பிரச்னைகளையும் இந்தியா சந்தித்து வருகிறது. இதில், சுற்றுச்சூழல் மாசுபாடு (Environment Pollution) மிகவும் முக்கியமானது.
இதுதவிர பெட்ரோல் மற்றும் டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதிக்காக செலவழிக்கப்படும் தொகையும், இந்தியாவிற்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த 2 பிரச்னைகளையும் குறைக்க வேண்டும் என்பதற்காக, எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

ஆனால் சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) பற்றாக்குறை காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க பொதுமக்கள் தயங்குகின்றனர். எனவே இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பெட்ரோலிய நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) நிறுவனமும் ஒன்றாகும். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுக்க 3,050 சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்துடன் தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கூட்டணி அமைத்துள்ளது.

நாடு முழுக்க உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் (Petrol Bunks), எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா முழுவதும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சுமார் 21,500 பெட்ரோல் பங்க்குகள் இருக்கின்றன.
இதில் முதற்கட்டமாக 5,000 சார்ஜர்களை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 5 ஆயிரம் சார்ஜர்களும் நிறுவப்பட்டு விடும். டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் நடவடிக்கை மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க அதிகளவிலான மக்கள் முன்வருவார்கள் என்பதுதான் இதற்கு காரணம். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் தற்போது தனி சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) என 4 எலெக்ட்ரிக் கார்களை டாடா விற்பனை செய்து வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் (Market Share) சுமார் 70 சதவீதம் ஆகும்.
எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்கு என தனியாக ஷோரூம்களை எல்லாம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திறக்க தொடங்கி விட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் ஆதிக்கம் செலுத்தும் என கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மூலம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதுடன், வரும் காலங்களில் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.
இதற்கிடையே இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நுழைய, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அவை எல்லாம், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருவதை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








