லட்சங்கள் செலவு செய்து கார் வாங்கினால் மட்டும் பத்தாது!! இப்படியொரு நிலைமை எந்த கார் ஓனருக்கும் வர கூடாது!
பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஹெரியர் கார் தீப்பிடித்த எரிந்துள்ள சம்பவம் பஞ்சாப்பின் லூதியானா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
சாலையில் இயங்கிக் கொண்டிருந்த அல்லது ஓர் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்களை சமீப காலமாக சிலமுறை பார்த்துள்ளோம். ஆனால் அவை யாவும் எலக்ட்ரிக் வாகனங்களாகவே இருந்துள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படும் பேட்டரிகள் நம் ஊர் வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் எரிந்தன.

குறிப்பாக, சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பொருத்தப்படும் சிறிய அளவிலான பேட்டரிகளால் வெப்பத்தை எதிர்கொள்ள முடிவதில்லை. இந்த பிரச்சனையை சமாளிக்க, எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் புது புது முயற்சிகளிலும், கண்டுப்பிடிப்புகளிலும் ஈடுப்பட்டு வருகின்றன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, மிகவும் அரிதாக சில எலக்ட்ரிக் கார்கள் கூட சமீப ஆண்டுகளில் தீயில் இரையாகி உள்ளன.
ஆனால், நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் கார் எலக்ட்ரிக் கார் கிடையாது. டாடா சஃபாரி என்ற எரிபொருள் என்ஜின் கார் ஒன்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த வாரத்தில் தீப்பிடித்துள்ளது. இத்தனைக்கும் கார் கட்டத்திற்கு கீழ் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை காரின் உரிமையாளர் வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், "நான் இந்த டாடா சஃபாரி டாப்-எண்ட் வேரியண்ட்டை சொந்தமாக கொண்டுள்ளேன். சர்வீஸ்களையும், பராமரிப்புகளையும் அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலர் மூலமாகவே மேற்கொண்டுள்ளேன். பார்க்கிங்கில் இருக்கும்போது இது தீப்பற்றிக் கொண்டது" என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், காரில் தான் எந்தவொரு மாடிஃபிகேஷனையும் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏனெனில், சில சமயங்களில் மாடிஃபிகேஷன்கள் வாகனத்தில் தீ ஏற்பட வழிவகுத்துவிடும். இவ்வாறு எல்லா விஷயங்களிலும் சரியாக செய்தவரின் கார் தீப்பிடித்து இருப்பது இணையத்திலும் விவாதங்களை உருவாக்கி உள்ளது. பலர், இந்த சம்பவத்தினால் பாதுகாப்புக்கு பெயர் போன டாடா மோட்டார்ஸின் சஃபாரி காரின் பாதுகாப்பில் சந்தேகம் எழுவதாக இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் வைரலானதை தொடர்ந்து இதுகுறித்த விசாரணைக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உத்தரவிட்டது. இந்த நிலையில், விசாரணை முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த விசாரணையின் மூலமாக, தீ விபத்து ஏற்பட்டதற்கு காரில் எந்தவொரு பிரச்சனையும் காரணம் இல்லை என்பதை கண்டறிந்துள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பார்க்கிங் பகுதியை சுற்றிலும் எத்தகைய சூழல் நிலவுகிறது என்பதை அறிவது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த தீ விபத்து காட்டுவதாக கூறியுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில், காரின் சூடான சைலன்சர் பகுதிக்கு அருகே என்ஜின் பாதுகாப்பு தட்டுக்கு கீழே உலர்ந்த இலைகள் மற்றும் காகித டம்ளர்கள் இருந்துள்ளன. இதுவே தீ விபத்துக்கு காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு தீர்வை காண எங்களது குழு கார் உரிமையாளர் உடன் தொடர்பில் உள்ளது" என கூறப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீ பற்றிக் கொண்டதினால், எல்லாருக்கும் காரை தயாரித்த நிறுவனத்தின் மீதே இதற்கு குற்றம் சுமத்த தோன்றும். ஆனால், சற்று ஆழமாக விசாரித்ததினால் எது உண்மை என்பது தெரிய வந்துள்ளது. அதற்காக, எப்போதும் காரை நிறுத்துவதற்கு முன் அந்த இடத்தை சுத்தமாக்க சொல்லவில்லை. குறைந்தப்பட்சம், காரின் சூடான அடிப்பகுதிக்கு கீழ் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








