இந்த அளவுக்கு நொறுங்கியும் டிரைவருக்கு கீறல் கூட விழுகலயா! அவங்க தயாரிப்பா இது! இனி கண்ண மூடிட்டு வாங்கலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பாதுகாப்பான கார்களை (Safest Cars) விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) திகழ்கிறது. அந்த நிறுவனத்தின் நிறைய கார்கள் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் (Global NCAP) 5 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.
டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்கள் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன. அதே நேரத்தில் டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) ஆகிய கார்கள், 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளன.

இந்த கார்கள் அனைத்தும் மிக கொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து கூட பல முறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன. குறிப்பாக டாடா டியாகோ கார் சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய செய்திகளை நீங்கள் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திலேயே பலமுறை படித்திருக்க கூடும்.
இந்த வரிசையில் மீண்டும் ஒரு அதிசய சம்பவத்தை டாடா டியாகோ கார் நிகழ்த்தியுள்ளது. இந்திய நெடுஞ்சாலைகளில் லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களால் நிறைய முறை சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த சூழலில் டாடா டியாகோ கார் ஒன்று சமீபத்தில் 2 லாரிகளுக்கு இடையில் சிக்கி, அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

ஆனால் காருக்கு உள்ளே இருந்த டிரைவர், அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான காயமும் இல்லாமல் உயிர் தப்பியுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட் எக்ஸ்பிரஸ்வே சாலையில் இந்த விபத்து நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில், டாடா டியாகோ கார் எதிர்பாராதவிதமாக ஒரு லாரியின் பின் பகுதியில் சிக்கி கொண்டுள்ளது.
அந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு லாரி ஒன்று, காரின் மீது மோதியுள்ளது. இதனால் 2 லாரிகளுக்கும் இடையில் சிக்கி, கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில், டாடா டியாகோ கார் பயங்கரமாக சேதமடைந்திருப்பதை தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் மிகவும் தெளிவாக காண முடிகிறது.
குறிப்பாக பின் பகுதிதான் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இப்படி ஒரு கோர விபத்து நிகழ்ந்தபோதிலும், காருக்கு உள்ளே இருந்த டிரைவர் காயங்கள் இன்றி தப்பியிருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான். விபத்து நிகழ்ந்தபோது, அவர் ஒருவர் மட்டுமே காரில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நகர சாலைகளை விட, நெடுஞ்சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற கோர விபத்துக்களை தடுக்க முடியும். நகர சாலைகளில் வாகனங்களின் வேகம் குறைவாக இருக்கும். ஆனால் நெடுஞ்சாலைகளில் சூழலே வேறு என்பதை அனைவரும் மனதில் வைத்து கொண்டு செயல்படுவது சிறந்தது.


Click it and Unblock the Notifications








