எல்லா அடியையும் வாங்கிட்டு, கடவுள் போல் பயணிகளை காப்பாற்றிய கார்! டாடாவின் தயாரிப்பு என்றால் சந்தேகமே வேண்டாம்
டாடா டியாகோ (Tata Tiago) கார் ஒன்று இரவு நேரத்தில் கண்ட்ரோலை இழந்து சாலைக்கு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இவ்வளவு பெரிய கோர சம்பவம் நடைபெற்றுள்ள போதிலும், காருக்குள் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி பார்க்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் அவற்றின் வலிமையான பாதுகாப்பு தரத்தினால் கஸ்டமர்கள் மத்தியில் பிரபலமானவைகளாக விளங்குகின்றன. இதற்கு சாட்சியாக நிறைய டாடா கார்கள் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் முழு 5 மதிப்பெண்களை பெற்றுள்ளன. என்னதான் கிராஷ் டெஸ்ட்களை நடத்தி கார்களுக்கு மதிப்பெண்களை வழங்கினாலும், நிஜ உலகில் விபத்துகளின் போது கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் முக்கியம் அல்லவா...

ஆனால், இந்த விஷயத்திலும் டாடா கார்கள் சிறந்தவை என பலமுறை நிரூப்பித்துள்ளன. விபத்துகளின் போது பயணிகளின் உயிரை காப்பாற்றிய டாடா கார்களை பற்றி நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பலமுறை பார்த்துள்ளோம். அந்த வரிசையில், டாடா கார்களின் தரத்தை மீண்டும் வெளிக்காட்டும் வகையில், விபத்தில் சிக்கிய டியாகோ கார், உள்ளே இருந்த பயணிகள் அனைவரது உயிரையும் காப்பாற்றியுள்ளது.
இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தலைக்கீழாக கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்து கிடக்கும் டாடா டியாகோ காரை காணலாம். இப்படி கிடக்கும் காரில் இருந்து பயணிகள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் எனும்போது மகிழ்ச்சியாகவும், அதேநேரம் சற்று ஆச்சிரியமாகவும் உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, சம்பவத்தின்போது இந்த டியாகோ காரினுள் 4 பயணிகள் இருந்துள்ளனர்.

இந்த விபத்து ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் இரவு நேரத்தில் நடந்துள்ளது. மற்றப்படி, இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்த விபரங்கள் இல்லை. டிரைவர் தெரியாமல் தூங்கியிருந்தாலோ அல்லது சாலையின் குறுக்கே ஏதேனும் ஒன்று திடீரென வந்தாலோ டிரைவர் கண்ட்ரோலை இழந்து கார் இவ்வாறு சாலையில் இருந்து விலகி சென்றிருக்கலாம்.
நமக்கு கிடைத்துள்ள படங்களிலும் வீடியோவிலும் கார் கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்து கிடக்கிறது. இவ்வாறு, கார் கவிழ்ந்துள்ளது என்றால் விபத்தின்போது மேட்டில் இருந்து கார் பெல்டி அடித்தால் மட்டுமே உண்டு. அதாவது, மேடான சாலையில் இருந்து விலகி, பள்ளத்தை நோக்கி பாய்ந்த காரின் முன்பகுதி பள்ளத்தில் சொருகிக் கொண்டதால், காரின் பின்பகுதி தானாக தரையில் இருந்து எழும்பி பள்ளத்தில் விழுந்திருக்க கூடும்.

ஒருவேளை விபத்து இவ்வாறு நடந்திருந்தால், டிரைவர் உள்பட முன் இருக்கை பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால், டியாகோ காரின் மேற்கூரை மற்றும் விண்ட்ஷீல்டு கூட எந்த அளவிற்கு வலிமையானதாக உருவாக்கப்படுகிறது என்பதை பாருங்கள்...
இருப்பினும், இந்த விபத்தில் டியாகோ காரின் முன்பக்க பம்பர் முற்றிலுமாக சேதாரமாகி தனியாக கழன்று விழுந்துள்ளது. இந்த விபத்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடந்துள்ளதால், விபத்து நடந்த பின் உதவிக்கு ஆட்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. காருக்குள் இருந்த பயணிகள் தாமாக வெளியே வந்து தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விபத்தின்போது கார் எவ்வளவு வேகத்தில் இயங்கியது என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். ஏனெனில் அப்போதுதான் காரின் தரத்தை பற்றி இன்னும் தெளிவாக அறிய முடியும். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த விபத்து குறைவான வேகத்தில் கார் சென்ற போது நடந்திருக்கும் என நினைக்கிறோம். ஏனெனில், காரின் பாடிஷெல்லில் பெரியதாக எந்த சேதாரமும் இல்லை.


Click it and Unblock the Notifications









