கார் மொத்தமும் இரும்பில் செய்தார்களா என்ன...! டாடா கார்களுக்கு ரேட்டிங்கை சும்மா தூக்கி கொடுத்திடல!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்களுள் பெரும்பாலானவை பாதுகாப்பான கார்களாக உள்ளன. அவற்றுள் ஒன்று, டிகோர் (Tigor) ஆகும். டாடாவின் விலை குறைவான செடான் (Sedan) ரக காரான டிகோர், அதன் வலிமையான உடலமைப்பினால் விபத்துகள் பலவற்றில் இருந்து பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளது. அதேபோல், பல்வேறு சம்பவங்களில் டிகோர் கார்கள் அவற்றின் கட்டுக்கோப்பான உடலமைப்பின் மூலமாக ஓனர்களை ஆச்சிரியப்படுத்தி உள்ளன. அந்த வரிசையில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் (Global NCAP Crash Test)-இல் நெக்ஸான், பஞ்ச், சஃபாரி, ஹெரியர் என பல டாடா கார்கள் 5க்கு முழு 5 நட்சத்திர ரேட்டிங்கை பாதுகாப்பிற்காக பெற்றுள்ளன. அதேநேரம், சில டாடா கார்கள் 5க்கு 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்று, போதுமான பாதுகாப்பை வழங்கக்கூடிய கார்களாக விளங்குகின்றன. அவ்வாறு, 4-ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற டாடா கார்களுள் ஒன்று டிகோர் ஆகும்.

குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 17க்கு 12 மதிப்பெண்களையும், குழந்தை பயணிகளின் பாதுகாப்பில் 49க்கு 37.24 மதிப்பெண்களையும் டாடா டிகோர் கார் பெற்றுள்ளது. இத்தனை மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டதற்கு இதுதான் காரணம் என கூறுவதை போல், இங்கு ஒரு டிகோர் கார் விபத்தில் சிக்கிய போதும் பெரிய அளவில் சேதமடையவில்லை.
சாலையில் ரிவர்ஸ் (Reverse)-இல் வரும்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரின் மீது இந்த டிகோர் கார் மோதி உள்ளது. இந்த மோதலில் சுவர் பெரிய அளவில் இடிந்து விழுந்துள்ளது. இந்த டிகோர் கார் இத்தனைக்கும் ரிவர்ஸில் வந்து மோதிய போதிலும், மோதிய வேகத்திலேயே நன்கு தடிமனாக இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இந்த காட்சிகள் யாவும் அருகில் இருந்த சிசிடிவி கேமரா (CCTV Camera)-இல் பதிவாகி உள்ளன. மோதிய வேகத்தில் டிகோர் காரின் பின் சக்கரங்கள் சுவருடன் சிக்கிக் கொண்டுள்ளன. இதனால், விபத்து நடந்த பின் சில மணிநேரத்திற்கு கார் சுவரின் மீது தொங்கியப்படி இருந்துள்ளது. பின்னர், சுவரை மேலும் இடித்து, காரின் பின் சக்கரங்களை தூக்கிப்பிடித்து, காரை அங்கிருந்து மீட்டுள்ளனர்.
இதனால், நிச்சயமாக இந்த காரின் அடிப்பகுதி சேதமடைந்திருக்கும். ஆனால், நாம் இந்த விஷயத்தில் பார்க்க வேண்டியது, சுவர் உடனான மோதலினால் இந்த டிகோர் காரில் ஏற்பட்ட சேதங்கள் ஆகும். வீடியோவை வைத்து பார்க்கும்போது, இந்த டிகோர் காரின் பின்பகுதியில் மட்டும் சில டொக்குகள் (Dents) ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த டிகோர் காரை 18 வயதிற்கும் கீழ் உள்ள இளைஞர் ஒருவர் ஓட்டி இந்த விபத்தை ஏற்படுத்தி உள்ளார். சாலையின் ஒரு முனையில் இருந்து, சாலையை கடந்து மறுப்பக்கத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதியுள்ளார். நல்ல வேளையாக அந்த நேரத்தில் சாலையில் எந்த வாகனமோ அல்லது பாதசாரியோ செல்லவில்லை. இதனால், இந்த விபத்தினால் எவரொருவருக்கும் காயம் ஏற்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ரிவர்ஸில் தான் மோதியது என்றாலும், மோதிய வேகத்தில் காரில் பலத்த சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும் என்றே சிசிடிவி வீடியோவை பார்த்த எவரொருவருக்கும் தோன்றி இருக்கும். ஆனால், காரில் சில டொக்குகள் மட்டுமே ஏற்பட்டிருப்பது மிகவும் ஆச்சிரியப்படுத்துகிறது. இது டாடா டிகோர் காரின் வலிமையான உடல் அமைப்பை காட்டுகிறது.
மேலும், டிகோர் காரில் பாதுகாப்பு தொழிற்நுட்பங்களுக்கும் எந்தவொரு குறையும் இல்லை. விலை குறைவான டாடா செடான் காராக இருப்பினும், டிகோரில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, தானாக மடங்கக்கூடிய வெளிப்பக்க கண்ணாடிகள் மற்றும் டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் மற்றும் 2 ஏர்பேக்குகள் உள்பட ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








