பில்கேட்ஸை ஒரேயொரு முறைதான் சந்தித்தார் இப்போது லம்போர்கினி காரில்!! வாழ்க்கை எப்படி மாறிடுச்சு!
உலகின் பெரும் தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு டீ போட்டு கொடுத்ததன் மூலம் சமீபத்தில் நாடு முழுவதும் பிரபலமாகிய சாலையோர டீக்கடைக்காரர் ஒருவர் விலையுயர்ந்த லம்போர்கினி ஹூராகென் காரில் பயணம் செய்து பார்த்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.
மொபைல் போனில் அவ்வப்போது ரீல்ஸ்களை பார்ப்பவராக இருந்தால் உங்களுக்கு டோலி சாய்வாலா (Dolly Chaiwala)-ஐ பற்றி தெரிந்திருக்கும். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சாலையோரத்தில் டீக்கடை வைத்திருக்கும் டோலி சாய்வாலா தனது அன்றாட தொழிலை மொபைல் போனில் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிடுவதன் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக விளங்குகிறார்.

இதற்கு முக்கிய காரணம், வழக்கமான டீக்கடைக்காரரை போல் இல்லாமல், டோலி சாய்வாலா வாடிக்கையாளர்களுக்கு டீ போட்டு கொடுப்பதில் தனித்துவமான பாணியை பின்பற்றுகிறார். அதன் மூலமாகவே பில்கேட்ஸ் வரையிலான மக்களின் கவனத்தை இவர் ஈர்த்துள்ளார். சாலையோரத்தில் தள்ளுவண்டியில் டீக்கடையை நடத்தி வந்த டோலி சாய்வாலா சமீபத்தில்தான் புதிய கடைக்கு தனது வியாபாரத்தை மாற்றி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது, கார் ஷோரூம் ஒன்றிற்கு சென்ற போது எடுத்துக் கொண்ட வீடியோவை டோலி சாய்வாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கார் ஷோரூமுக்கு சென்ற டோலி சாய்வாலா அங்கிருந்த விலையுயர்ந்த கார்களை பார்வையிட்டதோடு, சிவப்பு நிறத்திலான லம்போர்கினி ஹூராகென் (Lamborghini Huracan) கார் ஒன்றில் பயணம் செய்தும் பார்த்துள்ளார்.

டோலி சாய்வாலா சென்றது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காவாகா ஷோரூம் ஆகும். விலையுயர்ந்த சொகுசு கார்களை மெருக்கேற்றி டீயெலிங் செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக காவாகா ஷோரூம் விளங்குகிறது. இந்த ஷோரூமில் இருந்த லம்போர்கினி ஹூராகென் காரை சாலைக்கு கொண்டுவந்து ஸ்டார்ட் செய்தது டோலி சாய்வாலாவாக இருந்தாலும், காரை ஓட்டியது வேறொரு நபர் ஆவார்.
டோலி சாய்வாலா அமர்ந்து பயணித்தது ஓல்டு ஜென்ரேஷன் லம்போர்கினி ஹூராகென் கார் ஆகும். அதாவது, தற்சமயம் விற்பனையில் உள்ள ஹூராகென் கார் தோற்றத்தில் இன்னும் புத்துணர்ச்சியானதாக உள்ளது. இந்த லம்போர்கினி காரில் பொருத்தப்படும் 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 638 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்தியாவில், விற்பனையில் இருந்த லம்போர்கினி கல்லார்டோ காருக்கு பதிலாக ஹூராகென் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கார் ஆர்வலர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலமானதாக விளங்கும் ஹூராகென் காரை நடிகை ஷ்ரத்தா கபூர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஹூராகென் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.4 கோடியில் இருந்து ரூ.4.99 கோடி வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வளவு கோடி ரூபாய் மதிப்பிலான காரை சும்மா ஓட்டி பார்ப்பதற்கு எவரொருவருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும். ஏனெனில், கொஞ்சம் மிஸ் ஆகினால் பல இலட்ச ரூபாய்களில் பில் கட்ட வேண்டியதாகிவிடும். ஆதலால், டோலி சாய்வாலா இந்த லம்போர்கினி காரை ஓட்டாமல், பத்திரமாக டிரைவருக்கு அருகே அமர்ந்து பயணித்ததில் எந்த ஆச்சிரியமும் இல்லை. இருப்பினும், எதிர்காலத்தில் டோலி சாய்வாலா சொந்தமாக ஒரு லம்போர்கினி காரை வாங்கினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









