வேலையை சுலபமாக்கும் ஸ்மார்ட் கையுறைகள்... ஸ்கோடா ஆலையில் புதுமை...

Written By: Krishna

முதன் முதலில் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு மாஸ் கீ எனப்படும் முறை மூலம் பொத்தானை அழுத்தி ஒலி வழித் தகவல் கொடுக்கப்படும் (கிட்டத்தட்ட வாக்கி - டாக்கி மாதிரி). அதை அவர்கள் கையால் எழுதி, சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு பல்வேறு பரிணாமங்கள் தந்தி சேவையில் உருவாகின. கடைசியாக இணையவழியே தகவல் அனுப்பப்பட்டது.

கால ஓட்டத்தின் அசுர வேகத்துக்கு முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தந்தி சேவை நிறுத்தப்பட்டது.

ஸ்கோடா கையுறைகள்

இதுபோலவே, நாம் ஒரு காலத்தில் வியந்து பார்த்த தொழில்நுட்பம், இன்று பழைமையாக மாறிப் போய் வழக்கொழிந்து விடுகிறது. பழைய தொலைக்காட்சிப் பெட்டி, பெரிய கணினி என சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த கால தொழில்நுட்பங்களை கொன்று புதைத்துவிட்டு நாள்தோறும் புதுப்புது டெக்னாலஜிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில் செக் குடியரசைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, தனது ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக புதியதொரு தொழில்நுட்பத்தைக் கையாண்டு வருகிறது.

கையுறைகள்

உதிரி பாகங்கள் உற்பத்திப் பிரிவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் அதி நவீன கையுறைகள் வழங்கப்படுகின்றன. அதில் டிஜிட்டல் சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. விஷேசம் என்னவென்றால், தொழிலாளர்கள் செய்யும் பணி சரியாக இருக்கிறதா? அவர்கள் தகுந்த பாகத்தை எடுத்துப் பொருத்துகின்றனரா? என்பதைக் கண்காணித்து அந்த சாதனம் தகவல் தெரிவிக்கும்.

உதிரி பாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பார் கோடு எனப்படும் சங்கேதக் குறியீட்டை ஸ்கேன் செய்து, அதன் அடிப்படையில் இத்தகைய தகவல்களை அந்த சமயோஜித கையுறைகள் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கும்.

ஒலி எழுப்பியோ அல்லது அதிர்வுகளை (வைப்ரேசன்) உருவாக்கியோ, தகவல் அளிக்கும் வகையில் அந்த டிஜிட்டல் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைகள் எளிமையாவதுடன், பணி நேரமும் குறையும் என்று தெரிவிக்கின்றனர் ஸ்கோடா நிர்வாகிகள்.

தொழிலாளர்களின் நண்பன் என்று இந்த கையுறைகளுக்குப் பெயரிட்டுள்ளனர் (ப்ரோ க்ளவ்ஸ்). கார் விற்பனையில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் ஸ்கோடா நிறுவனம், பணிச் சூழலில் இதுபோன்ற புதுமைகளைப் புகுத்தி, தொழிலாளர்களின் நலன் காப்பதிலும் முதலிடத்தில் உள்ளது.

இத்தகைய புதிய முயற்சிகள் வெற்றி பெற்று, மேலும் பல தொழில்நுட்ப வசதிகள் அனைத்து இடங்களிலும் வியாபிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்...

English summary
Technology At Your Fingertips — Skoda Brings Smart Gloves To Its Factory.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark