வந்தாச்சு புது சட்டம்... ரோட்டில் இந்த தப்பை செய்வதற்கு முன் இனி இதை நியாபகத்தில் வெச்சிக்கோங்க!!
உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நம் இந்தியா இருப்பதற்கு அதிவேக பயணம், மது போதையில் வாகனம் ஓட்டுவது என பல காரணங்களை சொல்லலாம். ஆனால், இதற்கெல்லாம் மூலக் காரணமாய் இருப்பது சாலை போக்குவரத்து குறித்த போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாதது ஆகும். இதனை கருத்தில் கொண்டு, சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு மாநில அரசாங்கம் ஒன்று அதிரடியான தண்டனையை அறிவித்துள்ளது. இதுதான் தற்போதைக்கு அந்த மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.
நேரத்தையும், பெட்ரோலையும் மிச்சப்படுத்துவதில் நம் இந்தியர்கள் கில்லாடிகள். நோ-எண்ட்ரீயில் கார்/ பைக்குகளை பல கிமீ தொலைவிற்கு ஓட்டியுள்ளவர்களும் இருக்கின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் நோ-எண்ட்ரீயில் செல்வதை பெரும்பாலும் வாடிக்கையாக கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. அத்தகையவர்களுக்கு தான் இங்கு ஒரு மாநில அரசாங்கம் பெரிய ஆப்பு வைத்துள்ளது.

அதாவது, நோ-எண்ட்ரீயில்/ சாலையின் எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசன்ஸ் எந்தவொரு பாரப்பட்சமும் இன்றி ரத்து செய்யப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பாகும். இந்த அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருப்பது, தெலுங்கானா மாநில அரசு ஆகும். மாநிலத்தின் சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அறிவிப்பை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது.
சாலை விபத்துகளுக்கும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் தவறான-திசை டிரைவிங் காரணமாக இருப்பதாக ஹைதராபாத் டிராஃபிக் போலீசாரும் தெரிவிக்கின்றனர்.மாநில அரசின் ஆணையின்படி, சாலையின் எதிர்திசையில் வாகனம் ஓட்டி பிடிப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது டிரைவிங் லைசன்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே தவறான-திசை டிரைவிங் ஆனது டிராஃபிக் போலீசாருக்கு பெரிய தலைவலியாக உள்ளது.

குறிப்பாக, சென்னை, ஹைதராபாத் போன்ற வாகனங்கள் அதிகம் இயங்கும் நகரங்களில் நோ-எண்ட்ரீயில் செல்வது சில நேரங்களில் பெரிய போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகி விடுகிறது. யாரோ சிலர் செய்யும் தவறினால், வாகன ஓட்டிகள் அனைவரும் நீண்ட நேரத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டியதாகிறது. இதனை தடுக்கும் விதமாகவே தற்போது டிரைவிங் லைசன்ஸ் ரத்து என்கிற அதிரடியான அறிவிப்பை தெலுங்கானா அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து தெலுங்கானா மாநில மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த டிரைவிங் லைசன்ஸ் ரத்து அறிவிப்பு ஆனது அனுமதிக்காக போக்குவரத்து துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. அனுமதி கிடைத்த பின் இந்த சட்ட விதிமுறை முதற்கட்டமாக ஹைதராபாத் மாநகரம் முழுவதும் அமல்படுத்தப்படும் என அந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்வதற்கான சட்டம் ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில், தற்போது அதனுடன் சாலையின் எதிர் திசையில் வாகனம் ஓட்டுபவர்களின் டிரைவிங் லைசன்ஸும் ரத்து செய்யும் விதிமுறையும் இணைந்துள்ளது. இதனால், புதிய சட்டம் அமலுக்கு வந்த பின் ஹைதராபாத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு இணையாக வ்ராங்-சைடு டிரைவிங்கும் குற்றமாக பார்க்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முக்கியமான மாநகரங்களுள் ஒன்றாக மாறிவரும் ஹைதராபாத்தில் அதேநேரம் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. ஆதலால் இவ்வாறான புதிய விதிமுறைகளால் வாகன ஓட்டிகளின் அசவுகரியத்தை குறைக்க முடியும் என்பது மட்டுமின்றி, சாலை விபத்துகளையும் குறைக்க முடியும். சாலையில் எதிர்திசையில் வாகனம் ஓட்டினால்/ நோ-எண்ட்ரீயில் வாகனம் ஓட்டினால் டிரைவிங் லைசன்ஸ் ரத்து என்கிற திட்டம் நம் சென்னை போன்ற நகரத்திற்கும் கொண்டுவரலாம்.


Click it and Unblock the Notifications









