புல்லட் ப்ரூஃப் கார் வேண்டாம்... ஒரு மாநிலத்தின் சிஎம் இவ்வளவு சிம்பிளாக இருக்க முடியுமா?
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் மிகவும் பாதுகாப்புமிக்க கார்களில் செல்வார் என்பதை பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டு இருக்கிறோம். மாநில முதல்வர் செல்கிறார் என்றால் அவரது காருக்கு முன்னாலும், பின்னாலும் பாதுகாப்புக்காக பல்வேறு கார்கள் மற்றும் வாகனங்கள் செல்வது வழக்கம். இதனாலேயே முதலமைச்சர் எந்த காரில் செல்கிறார் என்பது மற்றவர்களுக்கு தெரியாத அளவிற்கு கான்வேயில் எல்லா கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் கவர்ச்சிக்கரமான விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரில் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மாநிலம் ஆகும். ஆந்திர பிரதேசத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு காரச்சாரமான விஷயங்கள் இந்த மாநிலத்தில் நடந்துள்ளன. தற்போது முதலமைச்சராக இருக்கும் அனுமுலா ரேவந்த் ரெட்டி கூட யாரும் எதிர்பாராத நேரத்தில் முதலமைச்சர் ஆனவர் ஆவார். ஏனெனில், தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நிறைய பேர் நினைவிக்கவில்லை.

இதனால், காங்கிரஸில் இருந்து யார் முதலமைச்சராக முன்னிறுத்தப்படுவார் என்பதை அறியவும் பெரிதாக மக்கள் ஆர்வமாக இல்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்பும் கூட தங்களது புதிய முதல்வர் யார் என்பது தெலுங்கானா மக்களுக்கு தெரியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தெலுங்கானா முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அனுமுலா ரேவந்த் ரெட்டி சமீபத்தில் கேரளாவிற்கு சென்றுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்ற அனுமுலா ரேவந்த் ரெட்டி, மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 என்கிற விலையுயர்ந்த சொகுசு காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளார். ஏற்கனவே கூறியதுபோல், பொதுவாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் புல்லட்ஃப்ரூஃப் காரில் மிகவும் பாதுகாப்பு அம்சங்களுடன் செல்வதே வழக்கம்.

ஆனால், தெலுங்கானா முதல்வர் சொகுசு வசதிகள் மிகுந்த பிராண்ட்-நியூ மெர்சிடிஸ்-மேபக் காரில் வந்திறங்கியுள்ளார். இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 லக்சரி எஸ்யூவி காரை ஒரு மாநிலத்தின் முதல்வர் பயன்படுத்தி இருப்பதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறோம். இத்தகைய காரில் தெலுங்கானா முதல்வர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
வீடியோவில், கருப்பு மற்றும் கோல்டு என இரு நிறங்களில் காட்சிதரும் மெர்சிடிஸ் மேபக் ஜி.எல்.எஸ்600 காரில் கேரளா மாநிலத்தின் பதிவெண்ணை கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த கார் தெலுங்கானா முதலமைச்சர் உடையதோ அல்லது தெலுங்கானா அரசாங்கத்திற்கு சொந்தமானதோ கிடையாது.

காருக்கு முன்பக்கத்தில் 'MP' என சிவப்பு நிற பலகை உள்ளதால், இது கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான காராக இருக்கலாம் என யூகித்து இதுகுறித்து நாங்கள் ஆராய ஆரம்பித்தோம். அப்போதுதான், இந்த மெர்சிடிஸ் கார் கேரள இராஜ்யசபா எம்பி அப்துல் வாஹப்பிற்கு சொந்தமானது என்பது எங்களுக்கு தெரியவந்தது. ஒரே காங்கிரஸ் கட்சியில் இருப்பதால், தெலுங்கானா முதல்வருக்கும், எம்பி அப்துல் வாஹப்பிற்கும் நெருங்கிய பிணைப்பு உள்ளது.
சரி மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 காரை பற்றி பார்க்கலாம். பொதுவாகவே, மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும் மெர்சிடிஸ்-மேபக் கார்கள் விலைமிக்கவை ஆக விளங்குகின்றன. அதற்கேற்ப மேபக் கார்கள் நன்கு உயர் தரத்தில் உருவாக்கப்படுகின்றன. தெலுங்கானா சிஎம் பயன்படுத்தியுள்ள மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை இந்தியாவில் தற்சமயம் ரூ.3.35 கோடியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாடாளுமன்ற எம்பியாக இருந்தாலும் வேறொருவரது காரை பயன்படுத்துவதை மிகவும் அரிதாகவே பார்க்க முடியும். முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் இதற்கு அனுமதிக்க மாட்டார்கள். ஆளும் மாநிலத்தை விட்டு வெளியே வந்தால் முதலமைச்சரின் பாதுகாப்பு விஷயத்தில் இன்னும் தீவிரமாக இருப்பார்கள். இருந்தும், தெலுங்கானா முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி வேறொருவரது காரை பயன்படுத்தியுள்ளார் என்றால் அதற்கு நிச்சயமாக ஒரு காரணம் இருக்கும்.


Click it and Unblock the Notifications









