இந்தியால யாரு கிட்டையும் இந்த காரு இல்ல.. முதல் ஆளா காங்கிரஸ் எம்எல்ஏ வாங்கிட்டாரு! யாரு அந்த கோடீஸ்வர எம்எல்ஏ
இந்தியாவில் யாரிடமும் இல்லாத ஆடம்பர கார் ஒன்றை நமது அண்டை மாநிலத்தின் எம்எல்ஏ ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோஹித் மைனம்பள்ளி, இவரே நாட்டில் யாரிடமும் இல்லாத அந்த சொகுசு காரை வாங்கி எம்எல்ஏ ஆவார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இவர் திகழ்கிறார். அதுமட்டுமல்ல செல்வம் கொழுத்த அரசியல்வாதியாகவும் இவர் காட்சியளிக்கின்றார். இந்த நிலையிலேயே நாட்டையே திரும்பி பார்க்கச் செய்கின்ற வகையில் அவர் ஓர் ஆடம்பர காரை வாங்கி இருக்கின்றார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் ஜி580 இக்யூ (G580 EQ) மாடல் ஆகும். புகழ்பெற்ற ஜி-வேகன் (G-Wagen) கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனே இந்த கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலை சமீபத்திலேயே இந்தியாவில் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' வாயிலாகவே இந்த காரை அந்நிறுவனம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே முதல் ஆளாக எலெக்ட்ரிக் காரை எம்எல்ஏ ரோஹித் வாங்கி இருக்கின்றார். பயணங்கள் மீதும், வாகனங்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக ரோஹித் காட்சியளிக்கின்றார்.
இவரிடத்தில் சொந்தமாக தனி பிரைவேட் ஜெட்-கூட இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில், இந்த நபரிடத்தில் ஆடம்பர கார்களுக்கு சற்றும் குறைச்சலில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அந்தவகையில், அவரிடத்தில் ஹம்மர் எச்2 (Hummer H2) கார் மாடல் கூட இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.
அதுமட்டுமல்ல, ஃபெர்ராரி 488 ஸ்பைடர் (Ferrari 488 Spider), மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் (Mercedes-Benz G63 AMG), மெர்சிடிஸ் மேபேக் எஸ்560 (Mercedes-Benz Maybach S560), ஜிஎம்சி சைரா (GMC Sierra) மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) உள்ளிட்ட கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இவை போதாதென்றே தற்போது இந்த எம்எல்ஏ புதிதாக மின்சாரத்தில் இயங்கும் பென்ஸ் ஜி580 இக்யூ-வையும் வாங்கி இருக்கின்றார். இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 3 கோடிக்கும் அதிகம் ஆகும். விலைக்கு ஏற்ப பிரீமியம் அம்சங்கள், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சொகுசு அம்சங்கள் என அனைத்தையும் மிக தாராளமாக இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

மிக முக்கியமாக இரண்டு 12.3 அங்குல அளவிலான திரை வழங்கப்பட்டு இருக்கும். அதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று கிளஸ்டராகவும் செயல்படும். இதுதவிர, மின்சாரத்தால் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிக் கொண்ட இருக்கைகளை குளிர்ச்சியாகும் மற்றும் சூடாகும் வசதியுடனும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர்.
அத்துடன், பன்முக ஜோன்கள் கொண்ட கிளைமேட் கன்ட்ரோல், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அம்சங்களையும் இந்த காரில் வழங்கியுள்ளனர். இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 473 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக, 116 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதுமட்டுமல்ல 587 பிஎஸ் மற்றும் 1,164 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்களே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக வெறும் 5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும். ஆனால், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 180 கிமீட்டராக லிமிட் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய காரையே முதல் ஆளாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த காரை இவர் மட்டுமல்ல சூரத்தைச் சேர்ந்த ஓர் தொழிலதிபரும் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து இன்னும் பல செல்வந்தர்கள் இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








