சீரியல் நடிகரிடம் இப்படிப்பட்ட பைக்கா!! இந்தியாவிலேயே வெறும் 10 பேர் கிட்ட மட்டும்தான் இந்த பைக் இருக்கு!
அல்ட்ராவயலட் எஃப்77 (Ultraviolette F77) எலக்ட்ரிக் பைக்கை நடிகர் ஒருவர் வாங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையிலான படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவது நம் மக்களிடத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் உள்ள சின்ன பிரச்சனை என்னவென்றால், இத்தகைய வாகனங்கள் நமக்கு முற்றிலும் புதியவை. அவற்றை எவ்வாறு சார்ஜ் செய்வது? நீண்ட தொலைவிற்கு சார்ஜ் பயமின்றி கொண்டுச் செல்ல முடியுமா? என பல கேள்விகள் எழுவது உண்டு.

அதுமட்டுமின்றி, பெரும்பாலான எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்வது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகும். அதாவது, சந்தைக்கு புதியதாக நுழைந்த, அனுபவம் இல்லாத நிறுவனங்கள். இதன் காரணமாக, சிலர் எலக்ட்ரிக் வாகனங்களில் பணத்தை செலவழிக்க யோசிக்கின்றனர். ஆனால், கோடிகளில் புரளும் விஐபி-களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் இந்த பிரச்சனை இல்லை.
இதனாலேயே, சினிமா பிரபலங்கள் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை பார்க்க முடிகிறது. இந்த வகையில், எலக்ட்ரிக்கில் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கி வந்த சினிமா நட்சத்திரங்கள், சமீப காலமாக எலக்ட்ரிக் பைக்குகளையும் வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் சூப்பர் பைக் என அழைக்கப்படும் அல்ட்ராவயலட் எஃப்77 அறிமுகம் செய்யப்பட்ட பின்பு நிறைய பேர் அதனை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில், பிரபல இந்தி சீரியல் நடிகர் ரோகித் ராய் புதியதாக அல்ட்ராவயலட் எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை வாங்கி உள்ளார். நாக்பூரில் பிறந்தவரான ரோகித் ராய் இந்தி சீரியல்களில், சில கதாபாத்திரங்களில் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளார். எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை ரோகித் ராயின் இருப்பிடத்திற்கு வந்து அல்ட்ராவயலட் ஷோரூம் அதிகாரிகள் டெலிவிரி செய்துள்ளனர்.
டெலிவிரி செய்யப்பட்ட பைக்கில் அமர்ந்து ரோகித் ராய் எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இவர் வாங்கி இருப்பது எஃப்77 எலக்ட்ரிக் பைக்கின் ஸ்பேஸ் எடிசன் ஆகும். எஃப்77 பைக்கில் ஸ்பேஸ் எடிசனை சமீபத்தில்தான், சந்திரயான்-3 நிலவு பயணத்தை முன்னிட்டு அல்ட்ராவயலட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

சந்திரயான் விண்கலத்தை போன்று, இந்த பைக் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டிருப்பதை ரோகித் ராய் வெளியிட்டுள்ள படங்களில் காணலாம். அத்துடன், இஸ்ரோவின் லோகோவையும் முன் சக்கரத்திற்கு பின்னால் காணலாம். 'எஃப்77' லோகோ ஸ்டிக்கர்கள் பைக்கின் முன் சஸ்பென்ஷன்களில் ஒட்டப்பட்டு உள்ளன.
எஃப்77 ஸ்பேஸ் எடிசன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.60 லட்சமாக தற்சமயம் உள்ளது. எஃப்77 பைக்கில் ஸ்பேஸ் எடிசன் வெறும் 10 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் என அறிமுகத்தின் போதே அல்ட்ராவயலட் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அந்த 10 உரிமையாளர்களுள் பாலிவுட் சீரியல் நடிகர் ரோகித் ராயும் ஒருவர் ஆவார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.5.6 லட்சத்தில் எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் யோசனை எல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும். வெறும் 10 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட பைக் ஒன்றை வாங்கியுள்ளார் எனும்போது, நடிகர் ரோகித் ராய்க்கு எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை வாங்கும் ஆசை அதிகமாக இருந்துள்ளதை அறிய முடிகிறது. அந்த ஆர்வத்தில்தான் எஃப்77 ஸ்பேஸ் எடிசனின் அறிமுகத்திற்காக காத்திருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications









