Subscribe to DriveSpark

மோசடி, ரீகால் பிரச்னைகளால் ஆட்டோமொபைல் துறையை உலுக்கிய டாப் 10 சம்பவங்கள்!!

Posted By:

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களில் மாசு அளவு நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக அளவு இருப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் மீதான நம்பகத்தன்மையை வெகுவாக குறைக்கும் விதத்தில், இந்த மோசடி குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற மோசடிகள் வாகன தயாரிப்பு உலகுக்கு புதிதல்ல. ஏற்கனவே, இதுபோன்ற பல மோசடிகளும், ஊழல்களும், ரீகால்களும் ஆட்டோமொபைல் துறையை உலுக்கியுள்ளன. அவ்வாறு, ஆட்டோமொபைல் துறையை உலுக்கிய 10 மாபெரும் மோசடிகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
01. தி டக்கர் 48

01. தி டக்கர் 48

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், அமெரிக்காவை சேர்ந்த கார் டிசைனரான ப்ரெஸ்டன் டக்கர், அப்போதைய காலக்கட்டத்தில் இருந்ததைவிட ஒரு படி மேலான தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட மாடர்ன் கார் ஒன்றை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார். தி டக்கர் 48 என்ற பெயரிலான அந்த கார் குறித்த தகவல்கள் வாடிக்கயாளர்களை கவர்ந்தது. இந்த காரை தயாரிப்பதற்காக பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகளை விற்பனை செய்ததார். மேலும், காரின் புரொட்டோடைப்பை தயாரிக்கும் முன்பே டீலர்ஷிப்புகளுக்கான உரிமையையும் விற்பனை செய்தார். இது பங்கு முதலீட்டுக் கொள்கைகளுக்கு எதிரானது என்று அந்நாட்டு செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் அவர் மீது புகார் பதிவு செய்து விசாரணையை துவங்கியது. இது அவரது கார் திட்டத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை தந்தது. பெரும் கார் நிறுவனங்கள் தனது திட்டத்தை நசுக்க திட்டமிட்டிருப்பதாகவும், பொதுமக்களின் வரிப்பணத்தை வீணாக செலவு செய்து, தன்னை அரசு ஒடுக்க நினைப்பதாகவும் கொந்தளித்தார். மேலும், தனது முதல் காரை கொண்டு வருவதற்கு கடுமையான முயற்சிகளை செய்தார். அதன் விளைவாக கார் உருவாக்கப்பட்ட டக்கர் 48 கார் ஒரு வழியாக வெளியானது. மொத்தம் 51 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அதற்குள் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, அவரது நிறுவனத்தை அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, அவரது மரணமும் அந்த மாடர்ன் காரின் ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1950களில் இந்த விவகாரம் அமெரிக்க ஆட்டோமொபைல் துறையை உலுக்கி எடுத்தது.

Photo credit: Bonhams

02. தி ஃபோர்டு பின்ட்டோ

02. தி ஃபோர்டு பின்ட்டோ

1977ம் ஆண்டு மதர் ஜோன்ஸ் இதழில் ஃபோர்டு பின்ட்டோ காரில் இருந்த ஒரு அபாயத்தை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது. ஃபோர்டு பின்ட்டோ காரை கிராஷ் டெஸ்ட் செய்தததில், பின்புற மோதல்களின்போது காரின் எரிபொருள் குழாய் எளிதில் சேதமடைந்து தீப்பிடிக்கும் ஆபத்து இருப்பதை ஃபோர்டு எஞ்சினியர்கள் கண்டறிந்தனர். ஆனால், அதனை மறைத்து ஃபோர்டு நிறுவனம் அந்த காரை உற்பத்திக்கு அனுமதித்தது. 7 ஆண்டுகள் கழித்து இந்த விவகாரத்தை மதர் ஜோன்ஸ் இதழ் அம்பலப்படுத்தியது. மேலும், சிறிய அளவிலான பிரச்னையை சரி செய்யாமல், வாடிக்கையாளர்களின் உயிருடன் விளையாடிய விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1978ல் பின்ட்டோ கார்களின் எரிபொருள் டேங்க்கில் மாறுதல்களை செய்வதற்காக ரீகால் செய்தது. இந்த மாபெரும் மோசடி ஃபோர்டு நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது.

03. அடுத்ததும் ஃபோர்டுதான்...

03. அடுத்ததும் ஃபோர்டுதான்...

1980ல் ஃபோர்டு மோட்டார் வாகனங்களில் பார்க்கிங் கியரிலிருந்து தானாகவே நழுவி ரிவர்ஸ் கியருக்கு மாறும் பிரச்னை இருந்தது குறித்து அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்துக்கு 23,000 புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த பிரச்னை தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஃபோர்டு நிறுவனத்துக்கு தெரியும் என்றும், அதற்கான ஆதாரத்தையும் மதர் ஜோன்ஸ் இதழ் வெளியிட்டது. இந்த பிரச்னையை சரி செய்ய ஒரு காருக்கு, அதன் விலையில் 3 சதவீதம் செலவாகும் என்பதால், இதனை ஃபோர்டு நிர்வாகம் சரி செய்ய முற்படாமல் தொடர்ந்து கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தது. மேலும், 1966ல் இருந்து 1980 வரை தயாரிக்கப்பட்ட 20 மில்லியன் ஃபோர்டு வாகனங்களில் இந்த பிரச்னை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. விழி பிதுங்கிய ஃபோர்டு பிரச்னையை சரிசெய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டு, ஒவ்வொரு காரிலும் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கார் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை உரிமையாளர்களுக்கு வழங்கி ஒட்டியது. இந்த பிரச்னையால் 77 உயிர்கள் பறிக்கப்பட்டிருப்பதும், பின்னால் நடந்த ஆய்வுகள் மூலம் தெரியவந்தது.

04. ஆடி கார் பிரச்னை

04. ஆடி கார் பிரச்னை

1986ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிபிஎஸ் செய்தியில் ஆடி 5000 கார் உரிமையாளர்களிடத்தில் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. அப்போது, பல உரிமையாளர்கள் தங்களது ஆடி 5000 கார் திடீரென ஆக்சிலரேசன் அதிகரித்து, கட்டுப்பாட்டை இழந்துவிடுதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆடி நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டன. இதன் எதிரொலியால் ஆடி நிறுவனத்தின் கார் விற்பனை அதலபாதாளத்திற்கு சரிந்தது.

 05. தகட்டா சீட்பெல்ட்

05. தகட்டா சீட்பெல்ட்

உலகின் மிகப்பெரிய வாகன உதிரிபாகங்கள் சப்ளையரான ஜப்பானை சேர்ந்த தகட்டா நிறுவனம் சமீபத்தில் தொழில்நுட்ப கோளாறு கொண்ட ஏர்பேக்குகளை சப்ளை செய்ததால், பல கார் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதே நிறுவனம் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய பிரச்னையில் சிக்கியது. தகட்டா தயாரித்து வழங்கிய சீட்பெல்ட்டுகளின் பக்கிள்களில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 1986 முதல் 1991 வரை தயாரிக்கப்பட்ட 8 மில்லியன் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சீட்பெல்ட்டுகளுக்கு ஆயுட்கால வாரண்டி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. மொத்தம் 700 புகார்கள் மற்றும் 60 பேர் இந்த பிரச்னையால் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த பிரச்னையை சரிசெய்வதற்காக செலவிடப்பட்டது.

06. ஃபயர்ஸ்டோன் டயர்கள் பிரச்னை

06. ஃபயர்ஸ்டோன் டயர்கள் பிரச்னை

ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருந்த ஃபயர்ஸ்டோன் டயர்கள் போதிய அளவு தரைப் பிடிப்பை தராமல் கவிழும் நிலை ஏற்படும் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இந்த விபத்துக்களால் 60 பேர் வரை உயிரிழந்துவிட்டதாக ஆய்வுகளில் தெரியவந்தது. டயரிலிருந்து மேல் அடுக்கான ட்ரெட் தனியாக கழன்றுவிடுவதே பிரச்னைக்கு காரணமாகியது. இதன்மூலம், 6.5 மில்லியன் டயர்களை மாற்றித் தரும் நிலை ஃபயர்ஸ்டோன் நிறுவனத்துக்கு ஏற்பட்டது. அதுதவிர, ஃபோர்டு நிறுவனம் 13 மில்லியன் டயர்களை மாற்றித் தருவதற்கு ரீகால் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, இரு நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக உறவு முறிந்தது.

07. டெய்ம்லர் ஊழல்

07. டெய்ம்லர் ஊழல்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டெய்ம்லர் 22 நாடுகளில் முறைகேடான விஷயங்களுக்கும், லஞ்சமாகவும் பணம் செலுத்தி மோசடி செய்ததாக, அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் தெரிவித்தது. ஐ.நா. சபையின் உணவுக்காக எண்ணெய் என்ற திட்டத்திற்காக ஈராக் அமைச்சர்களுக்கு முறைகேடாக லஞ்சம் கொடுத்து டெய்ம்லர் மோசடி செய்துள்ளதாகவும், இதன் மூலமாக 1.9 பில்லியன் டாலர்கள் வருவாயையும், 90 மில்லியன் சட்டவிரோதமான முறையில் லாபம் சம்பாதித்துள்ளதாகவும் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து, அந்த திட்டத்திற்கு மீண்டும் 185 மில்லியன் டாலர்களை செலுத்துவதாக டெய்ம்லர் ஒப்புக்கொண்டது.

 08. டொயோட்டா கார்களில் பிரச்னை

08. டொயோட்டா கார்களில் பிரச்னை

2009ம் ஆண்டில் டொயோட்டா கார்களில் தானாகவே ஆச்சிலரேசஷன் அதிகரிக்கும் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2004ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்களின் ஆக்சிலரேட்டர் பெடல்களை மாற்றித் தருவதற்கு பல மில்லியன் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டன. மேலும், டொயோட்டா நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் டாலர்களை அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விதித்தது.

 09. ஜெனரல் மோட்டார்ஸ்

09. ஜெனரல் மோட்டார்ஸ்

2001ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஞ்சினியர்கள் கார்களின் இக்ஷனிஷன் சுவிட்சில் பிரச்னை இருப்பதை கண்டறிந்தனர். அந்த சமயத்தில் இந்த பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2004ல் மீண்டும் செவர்லே கோபால்ட் கார்களில் இந்த இக்னிஷன் சுவிட்ச் பிரச்னையால் ஏர்பேக் செயலிழப்பு, ஸ்டீயரிங் மற்றும் பிரேக் சிஸடம் செயலிழப்பு என பல்வேறு பிரச்னைகள் இருப்பது குறித்து புகார்கள் எழுந்தன. இதனை சரிசெய்வதற்கு பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்பதால், ஜெனரல் மோட்டார்ஸ் சரிசெய்யாமலேயே கார்களை விற்றுள்ளது. இந்த நிலையில், இந்த பிரச்னைகளால் 124 பேர் உயிரிழந்துவிட்டதாக வெளியான ஆய்வு முடிவுகளையடுத்து, 2014ம் ஆண்டு ரீகால் அறிவிப்பை வெளியிட்டது. 5 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த பிரச்னைக்காக செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுடன், 900 மில்லியன் டாலர்களும் அபாரதமும் விதிக்கப்பட்டது.

10. தகட்டா ஏர்பேக்ஸ்

10. தகட்டா ஏர்பேக்ஸ்

ஜப்பானிய நிறுவனமான தகட்டா சப்ளை செய்த ஏர்பேக்குகளில் தொழில்நுட்ப குறைபாடுடைய உதிரிபாகம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்ட 10 முன்னணி கார் தயாரிப்பாளர்களின் பல மில்லியன் கார்கள் ரீகால் செய்யப்பட்டன. பல கார் நிறுவனங்களுக்கு பல மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்காக அமெரிக்காவில் ஹோண்டா நிறுவனத்துக்கு 70 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால், தகட்டாவின் வர்த்தகம் அடியோடு சரிந்தது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ten Biggest Automotive Scandals Ever.
Please Wait while comments are loading...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark