காரில் இருக்கவேண்டிய 10 அவசியமான ஆஃப்டர் மார்க்கெட் ஆக்சஸெரீகள்!!
பெருநகரங்களில் தெருவுக்கு ஒரு கார் ஆக்சஸெரீ விற்பனையகங்கள் முளைத்துவிட்டன. காருக்கு தேவையான விதவிதமான பொருட்களையும், ஆக்சஸெரீகளையும் இப்போது எளிதாக வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதில், எது காருக்கு அத்தியாவசியமானது என்பதை தெரிந்துகொள்ளும் விதத்தில் இந்த செய்தியை வழங்குகிறோம். உங்களது காருடனான உறவையும், பயணங்களையும் சிறப்பானதாக்கும் அந்த ஆக்சஸெரீகளின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ஹெட்லைட் பல்புகள்
இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு சிறப்பான ஹெட்லைட்டுகள் அவசியம். தற்போது வெளிசந்தையில் கிடைக்கும் பிலிப்ஸ், ஹெல்லா, ஆஸ்ரம், பாஷ் மற்றும் ப்ளாசர் ஆகிய நிறுவனங்களின் பல்புகள் சிறந்தவையாகவும், நம்பகமானதாகவும் இருக்கும்.

02. ஹாரன்
இந்திய சாலைகளில் வாகன பயணங்களுக்கு ஹாரன்கள் மிக அவசிய ஆக்சஸெரீ. ஹெல்லா உள்ளிட்ட பிராண்டுகளின் சிறப்பான ஹாரன்கள் வெளிச்சந்தையில் கிடைக்கிறது.

03. டயர்கள்
காரின் தயாரிப்பு செலவீனத்தை குறைக்கும் விதத்தில் குறைவான விலை கொண்ட டயர் பிராண்டுகளை தேர்வு செய்து பொருத்துகின்றனர். நீங்கள் விரும்பினால் மிச்செலின், பைரெலி, பிரிட்ஜ்ஸ்டோன் மற்றும் கான்டினென்டல் ஆகிய நிறுவனங்களின் டயர்களை வாங்கி பொருத்திக்கொள்ளலாம். ஆனால், தயாரிப்பாளரின் பரிந்துரைத்த அளவுடைய டயர்களையே பொருத்துதல் அவசியம். பெரிய சைஸ் டயர்களை பொருத்தும்போது, டயர் உராய்வு சத்தம் மிக அதிகமாக இருக்கும் என்பதுடன், மைலேஜ் குறைந்துவிடும்.

04. மியூசிக் சிஸ்டம்
கார் பயணங்களின் இனிமையை கூட்டும் முக்கிய ஆக்சஸெரீ. உங்களது பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல், பயனீர், ஜேபிஎல் என பல முன்னணி பிராண்டுகளின் மியூசிக் சிஸ்டம்களை காரில் பொருத்திக்கொள்ளலாம்.

05. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
காரின் முக்கியமாக இருக்கவேண்டிய ஆக்சஸெரீயில் ஒன்று ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் அல்லது ரிவர்ஸ் கேமரா. பட்ஜெட் இருந்தால் இரண்டையும் பொருத்திக் கொள்ளலாம். எளிதாக பார்க்கிங் செய்ய உதவுவதுடன், பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஆக்சஸெரீயாக இதனை கூறலாம்.

06. ஜிபிஎஸ் சிஸ்டம்
மொபைல்போன்களிலேயே நிகழ்நேர வரைபடங்களை பெறும் வசதி இருந்தாலும், தனியாக ஜிபிஎஸ் சிஸ்டத்தை வாங்கி பொருத்திக் கொள்வது மிக அவசியம். ரூ.10,000 பட்ஜெட்டில் மிகச்சிறந்த ஜிபிஎஸ் சாதனங்களை வாங்க முடியும். பயணங்களின்போது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

07. டே அண்ட் நைட் மிரர்
புதிய கார்களின் பேஸ் மாடலில் உட்புறத்தில் சாதாரண ரியர் வியூ கண்ணாடிதான் கொடுக்கப்பட்டிருக்கும்.இது நேர பயணங்களின்போது பின்னால் வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் எதிரொலித்து இடைஞ்சலை தரும். ஆனால், டே அண்ட் நைட் கண்ணாடியை வாங்கி பொருத்திக் கொண்டால், இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதில், அட்ஜெஸ்ட்மென்ட் வசதி இருக்கும் என்பதால் பிரச்னை இராது.

08. தீயணைப்பான்
கடும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டிய நேரத்தில், காருக்குள் தீயணைப்பான் இருப்பது நலம். மேலும், காரில் அதிக எலக்ட்ரிக்கல் ஒயரிங் சிஸ்டம் மற்றும் சாதனங்கள் இருப்பதும் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கும் வாய்ப்புகள் உண்டு. எனவே, தீயணைப்பான் ஒன்றை காரில் எளிதாக எடுக்கும் விதத்தில் வைத்துக் கொள்வது அவசியம். இதனை நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பதை தவிர்க்கவும்.

09. ரெயின் வைசர்
ஜன்னல்களுக்கு மேலே பொருத்தப்படும் வைசரும் மிக அவசியமான ஒன்று. காரின் ஏரோடைனமிக்ஸை கூட்டுவதுடன், மழை நீர் போன்றவை காரின் கதவு இடுக்குகளில் இறங்குவதை தவிர்க்கும்.

10. சார்ஜிங் அவுட்லெட்
இன்றைய நவீன யுகத்தில் நாம் பயன்படுத்தும் மொபைல்போன், ஜிபிஎஸ் சாதனங்களை எளிதாக சார்ஜ் செய்வதற்கு சார்ஜிங் அவுட்லெட் மிக அவசியமானது. இந்த வசதி இல்லாத கார்களில் இதனை தனியாக அமைத்துக் கொள்ள முடியும். மேலும், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருக்கும் கார்களுக்கும் இதுபோன்ற தனி சார்ஜிங் அவுட்லெட் மிகவும் அவசியம்.

முக்கிய குறிப்பு
வெளிச்சந்தையில் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட மின்சாரத்தில் இயங்கும் ஆக்சஸெரீகளை பொருத்தும்போது, ஒயரிங்கில் சிறப்பான அனுபவமுடையவர்களை வைத்து செய்வது நலம். இல்லையெனில், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆக்சஸெரீகளை டீலரிலேயே வாங்கி பொருத்திக் கொள்வது உத்தமம். ஏனெனில், பல ஆக்சஸெரீகள் பொருத்தும்போது ஒயர்களை நறுக்க வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, மியூசிக் சிஸ்டத்தை டீலரிலேயே பொருத்தும்போது ஒயர்களை நறுக்கி இணைக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றை, ப்ளக் இன் டைப்பிலேயே இணைத்துவிடுவர் என்பதை நினைவிற்கொள்க.


Click it and Unblock the Notifications