ஆண் உரிமையாளர்களை அதிகம் கொண்ட டாப்10 கார் மாடல்கள்!
பெண்களைவிட ஆண்களுக்கு சிறுவயது முதலே வாகனங்கள் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. கார் வாங்குவதை ஒவ்வொரு ஆண்களும் தங்கள் வாழ்வின் கனவாகவும், லட்சியமாகவும் கருதுகின்றனர்.வசதிக்கு தக்கவாறு கார்களுக்கான முதலீட்டை அவர்கள் லட்சங்களிலிருந்து கோடிகள் வரை கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கின்றனர்.
இதனால் கார் உரிமையாளர்களில் பெண்களைவிட ஆண்களின் பங்கு அதிகமிருப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஒரு கோடி கார் பதிவு ஆவணங்களின் அடிப்படையில், இந்த பட்டியலை மார்க்கெட்வாட்ச் வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில், அதிக ஆண் உரிமையாளர்களை கொண்ட டாப் 10 கார் பிராண்டுகள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

10. டெஸ்லா
டெஸ்லா மோட்டார்ஸ் கார்களின் 83 சதவீத உரிமையாளர்கள் ஆண்கள்தான் என்று மார்க்கெட்வாட்ச் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம், டிசைன், செயல்திறன் ஆகியவை ஆண் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்கிறது.

09. ரோல்ஸ்ராய்ஸ்
உலகின் மதிப்புமிக்க ஆடம்பர கார் பிராண்டான ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் 84 சதவீத உரிமையாளர்கள் ஆண்கள் என்று மார்க்கெட்வாட்ச் வெளியிட்டிருக்கும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

08. மஸேராட்டி
மஸராட்டி கார் நிறுவனத்தின் 84 சதவீத உரிமையாளர்கள் ஆண் வாடிக்கையாளர்கள்தானாம். பிராண்டு பெயர்தான் ஆண்களை கவர்ந்திழுக்க காரணமாக கூறப்படுகிறது.

07. ராம்
ராம் பிக்கப் டிரக் மாடல்களின் 84 சதவீத உரிமையாளர்கள் ஆண்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுறுதியும், செயல்திறனும் ஆண் வாடிக்கையாளர்களை கவர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

06. லோட்டஸ்
லோட்டஸ் ஸ்போர்ட்ஸ் கார்களின் 86 சதவீத உரிமையாளர்கள் ஆண்கள் என்பது மார்க்கெட் வாட்ச் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. செயல்திறன்மிக்க இந்த மாடல்கள் ஆண்களை கவர்ந்த ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது.

05. நியூ ஃபிஸ்கர்
நியூ ஃபிஸ்கர் கார் மாடல்களின் 87 சதவீத உரிமையாளர்கள் ஆண்களாம். அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட இந்த உயர்வகை ஹைபிரிட் கார்களுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு இல்லாதது வியப்பளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனம் நிதி நெருக்கடி காரணமாக தற்போது சீனாவை சேர்ந்த நிறுவனத்தின் கீழ் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

04. அஸ்டன் மார்ட்டின்
ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தின் தாக்கத்தால் என்னவோ இந்த கார்களின் 88 சதவீத உரிமையாளர்கள் ஆண்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

03. ஃபெராரி
ஃபெராரி கார்களின் 92 சதவீத உரிமையாளர்கள் ஆண்கள்தான். இந்த உயர்வகை ஸ்போர்ட்ஸ் கார்களை ஆண்கள் தங்கள் வாழ்வின் லட்சிய மாடலாக கருதுவதும் இதற்கான காரணமாக இருக்கிறது.

02. மெக்லாரன்
மெக்லாரன் கார்களின் 93 சதவீத உரிமையாளர்கள் ஆண்களே. செயல்திறன் மிக்க இந்த கார்களில் 7 சதவீதம் அளவுக்கு பெண் உரிமையாளர்கள் இருப்பது வரவேற்கக்கூடிய விஷயமே.

01.லம்போர்கினி
முதல் இடத்தில் லம்போர்கினி இருக்கிறது. லம்போர்கினி நிறுவனத்தின் 93 சதவீத உரிமையாளர்கள் ஆண்கள்தான். பிராண்டு மதிப்பு, டிசைன், செயல்திறன் என அனைத்திலும் லம்போர்கினி தயாரிப்புகளுக்கு தனி மதிப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








