"சைவ" காராக மாறப் போகும் டெஸ்லா... இப்ப கொஞ்சம் அசைவமாகத்தான் இருக்குதாம்...
கார்களில் சீட்களில் பயன்படுத்தப்படும் லெதர், விலங்குகளில் தோல்களிலிருந்து எடுக்கப்படுவதால் பல வீகன் விரும்பிகள் கார்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் டெஸ்லா உள்ளிட்ட பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரைவில் வீகன் லெதரை தங்கள் கார்களில் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களின் தரத்தை அதன் உட்கட்டமைப்பு வசதியில்தான் அதிகம் காட்டுகின்றனர். காரின் உட்புறம் எவ்வளவு சொகுசாக அமைக்கப்படுகிறதோ அவ்வளவு அதிக விலை காருக்கு வைக்க முடியும். மேலும் கார் வாங்கும் மக்களும் அதை அதிகம் விரும்புகின்றனர். காரின் உட்புறம் என வந்துவிட்டால் சீட்கள் தான் பெரும்பான்மையான இடத்தை பிடிக்கிறது.

காரின் சீட்கள் எதில் தயாரிக்கப்படுகிறது என்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. சொகுசு கார்கள் எல்லாம் காருக்குள் லெதர் சீட்களை பயன்படுத்தவே விரும்புகின்றனர். லெதர் சீட்கள் தான் மக்களுக்குச் சொகுசான அனுபவத்தையும் நல்ல லுக்கையும் கொடுக்கிறது. ஆனால் நேரடியாக லெதர் சீட்களை பயன்படுத்துவதிலும் சிக்கல் இருக்கிறது.

லெதர் எல்லாம் எடை அதிகமாக இருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் முடிந்த அளவிற்கு காரின் எடையைக் குறைக்க முயற்சி செய்து வருகின்றன. இதனால் இந்த லெதருக்கு மாற்றாக வேறு ஒரு விஷயத்தை மாற்ற தேடினர். அவர்களுக்குச் சிறந்த மாற்றாகக் கிடைத்தது தான் சிந்தடிக் லெதர், இன்று பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இந்த சிந்தடிக் லெதரைதான் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பல நிறுவனங்கள் சிந்தடிக் லெதரிலிரு்து வீகன் லெதருக்கு மாற திட்டமிட்டு வருவதாக உலகின் முதன்மையான லெதர் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ராஃபேப்ரிக் நிறுவனத்தின் தலைவர் நோபுரு யோஸிமுரா என்பவர் தெரிவித்துள்ளார். அவர் அந்த பேட்டியில் தற்போது சிந்தடிக் லெதர் மார்கெட் சர்வதேச அளவில் வளர்ந்துள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் சிந்தடிக் லெதர் ஆண்டிற்கு 67.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது சுற்றுச்சூழல் குறைத்து அதிகம் அக்கறை காட்டத் துவங்கிவிட்டனர். அவர்கள் தங்கள் கார்களில் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் தோல்களால் தயாரிக்கப்படும் லெதர்களை பயன்படுத்தத் தயங்கி வருகின்றனர். இதற்கு கார்களை வாங்கும் நபர்களின் எதிர்பார்ப்பு முக்கியமான காரணம்.

இன்று உலக அளவில் வீகன் முறையை பின்பற்றும் பலர் அதிகமாகிவருகின்றனர். அவர்கள் விலங்குகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும், தோல்களால் ஆன லெதர்களை பயன்படுத்த விரும்புவதில்லை. இதற்கு மாறாக வீகன் லெதரை பயன்படுத்த விரும்புகின்றனர். இதனால் அல்ராஃபேப்ரிக் நிறுவனம் வீகன் லெதரை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு உலக அளவில் தற்போது தான் ஆட்டோமொபைல் துறை சரிவிலிருந்து மீண்டு மீண்டும் லாப பாதையை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது வீகன் லெதரை நோக்கி வளர்ந்துள்ளது, அல்ட்ராஃபேபரிக் நிறுவனம் தான் புகழ்பெற்ற டெஸ்லா காருக்கும் சிந்தடிக் லெதரை சப்ளை செய்து வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு முதல் டெஸ்லா நிறுவனம் சிந்தடிக் லெதரை தங்கள் கார்களில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிறுவனம் விரைவில் தங்கள் கார்களில் வீகன் லெதரை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது. வீகன் லெதர் என்றால் மிருகங்களின் தோல்களிலிருந்து எடுக்காமல் மரம், செடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தித் தயாரிப்பதாகும். தற்போது மரப்பட்டைகள், ஆப்பிள் தோல்களிலிருந்து வீகன் லெதர் தயாரிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் தோல்களுக்கு இணையாக இருக்கிறது.

குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் பலர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக்கூடாது என்ற மன நிலையில் இருக்கும் மக்கள் தான். இவர்களுக்கு விலங்குகளைக் கொன்று அதன் மூலம் எடுக்கும் தோல்களையும் விரும்புவதில்லை. இதனால் எதிர்காலத்தில் இந்த வீகன் லெதர் பெரும்பாலான எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடை குறைவாக இருப்பதும், இந்த ரக லெதரை பயன்படுத்த மிக முக்கியமான காரணம்.

இன்னும் சில ஆண்டுகளில் பல நிறுவனங்கள் வீகன் பிரியர்களுக்கான வீகன் லெதரில் உருவாக்கப்பட்ட லெதரை தங்கள் கார்களில் பயன்படுத்தலாம். அல்லது இதை ஒரு ஆப்ஷனாக கூட வழங்கக் கூடும் என எதிர்பார்க்கலாம். இனி கார்களில் "சைவ" கார்கள் என புதிய ஜாதி முளைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications